தமிழீழம் ஒன்றே எமது தீர்வு பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள்
கொட்டும் மழையிலும் நீதிக்காக போராடும் எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்…
பிரித்தானியாவில் இன்று (16.09.2015) ஐநா மனித உரிமை பேரவையினால் இன்று அறிக்கை வெளியிடப்படுள்ள நிலையில் தமிழினத்தைத் தொடர்ச்சியாக கருவறுத்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா இனவாத அரசை அனைத்துலக நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி லண்டனில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக, நீதிக்கான மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கினைப்புக் குழுவினரால் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மாலை 5 மணிக்கு 24 Grosvenor Square, W1A 2LQ என்னும் முகவரியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கூடிய தமிழ் மக்களால் அனைத்துலக நீதி கோரி இப்போராட்டம் நடத்தத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமக்கான நீதியை வழங்குமாறு வலியுறுத்தினர்.
தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிறீலங்கா இனவாத அரசு மீதான நீதி விசாரணையானது அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு வழிகளிலும் உலகெங்கும் தமிழர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், சர்வதேசப் பொறிமுறை ஒன்றினூடாகவே விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வடமாகாண சபையிலும் தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அனைத்துலக நீதி விசாரணையை வலியுறுத்தும் முகமாகவே இந்நீதிக்கான போராட்டம் நடைபெற்றுள்ளது.