கறுப்புயூலை நினைவுகளுடன் தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்! – பிரதமர் வி.உருத்ரகுமாரன்

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இது கறுப்புயூலை இனப்படுகொலையினை மையப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அறிக்கையிக் முழுவிபரம் :

1983 ஆம் ஆண்டு யூலை மாத இறுதிவார நாட்களில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த இனவாதப்பூதம் நடாத்திய இனஅழிப்பு நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கில் பெறுமதி கொண்ட தமிழர் வர்த்தக நிறுவனங்கள், குடிமனைகள், சொத்துக்கள் இனவெறிக் காடையர்களால் கொள்ளையிடப்பட்டு நாசம் செய்யப்பட்டன. தமிழ் மக்கள் பாதுகாப்புத்தேடி தமிழர் தாயகப்பிரதேசங்களை நோக்கி ஓடி வந்தனர்.

தமிழினஅழிப்புக் கொடுமையின் உச்சக்கட்டமாக வெலிக்கடைச்சிறைச்சாலையில் வைத்து தங்கத்துரை, குட்டிமணி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மலரும் தமிழீழத்தை கண்தானம் செய்யப்படும் தனது கண்களின் ஊடாகப்; பார்ப்பேன் என நீதிமன்றத்தில் முழங்கிய தோழர் குட்டிமணியின் கண்களைத் தோண்டி காலால் மிதித்து குரூரக் களியாட்டத்தை சிங்களம் ஆடி மகிழ்ந்தது. நாகரீக உலகம் வெட்கத்தால் தலைகுனிந்தது.

சிங்களம் ஆடிய இந்த இனவெறியாட்டம் தற்செயலாக நடந்தவொன்றல்ல. சில காடையர்களால் மட்டும் முன்னெடுக்ப்பட்ட சட்டத்தை மீறிய குற்றவியல் செயற்பாடுகளுமல்ல. இது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட தமிழினஅழிப்பு. சிங்கள ஆட்சியாளர்களின் தீர்மானத்தின் பேரில், அவர்களின் ஒத்துழைப்புடன் நடாத்தி முடிக்கப்பட்ட பெருங் கொலைக்களம்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்களை அரசியல், பொருளாதார, சமூகரீதியில் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்த சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட நிராயுதபாணிகள் மீதான ஆயுதம் தாங்கிய போரே கறுப்புயூலை இனஅழிப்பு நடவடிக்கை. இத் தமிழின அழிப்பினை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை பல தமிழ் மக்களைப் பாதுகாத்த நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களையும் நாம் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

இவ்வினவழிப்பு நடைபெற்று 34 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதுவரை இதற்குக் காரணமானவர்கள் எவரும் விசாரணைக்கோ தண்டனைக்கோ உள்ளாக்கப்படவில்லை. கறுப்புயூலை தமிழின அழிப்பு நடைபெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதுவர் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் எவருமே தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என அனைத்துலக சமூகத்தின் முன் அளித்த வாக்குறுதி முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து தற்போதய சிறிலங்கா ஆட்சியாளர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நினைவு படுத்துகிறது.

அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதிகளை வழங்கி விட்டு அவர்களை சிறிலங்கா அரசு காலம் காலமாக ஏமாற்றி வருகிறது என்று எம்மில் சிலர் நினைப்பதுண்டு. சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏமாறும் அளவுக்கு அனைத்துலக சமூகம் வாயில் சூப்பியை வைத்திருக்கும் சிறுகுழந்தையல்ல என்பதனை நாம் கருத்திற் கொண்டாக வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கறுப்புயூலைக் குற்றத்தை அனைத்துலக சமூகம் கடுமையாகத் தண்டித்திருந்தால் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடைபெறுவதற்கான நிலைமைகள் அரிதாக இருந்திருக்கலாம். நட்பு அரசு என்றும் அரசுகளுக்கிடையிலான நலன்கள் என்றும் போடப்படும் கணக்குகள் ஊடாக சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக அரசுகள் காட்டிவரும் மெத்தனப் போக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் மத்தியில் எந்தவித மனமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய போதிய அழுத்தத்தை வழங்குவதற்குத் தடையாகவே இருந்து வருகிறது. இதனை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தற்போதய ஆட்சியாளர்கள் கறுப்புயூலையின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் தான். முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரழிப்பின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களே. இன்றுவரை தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த குற்றத்தை உணர்ந்து மனமுருகி மன்னிப்போ வருத்தமோ இவர்கள் கேட்டதில்லை. இத்தகைய ஆட்சியாளர்களால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அல்லது அரசியற்தீர்வைக் காணவோ முடியப்போவதுமில்லை என்பதே உண்மை.

எந்தவொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் இ;ருக்கும் என்பது இயற்கையின் விதி. கறுப்புயூலை இனவழிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியடையவும் அனைத்துலகமயப்படவும் வழிவகுத்தது. இதேபோல் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் முன்னெடுக்கப்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சுதந்திர வாழ்வை எட்டும்வரை உரிமைப் போராட்டம் ஓயப் போவதில்லை என்பதும் இயங்குநிலை வழிப்பட்ட உண்மையாக அமைகிறது.

கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை நினைவேந்தும் இத் தருணத்தில் இவ் இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைசாய்த்து வணக்கம் செலுத்தி தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு பிரதமர் வி.உருத்ரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.