தமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…!

தமிழீழ வைப்பகம் புலிகளின் நடைமுறை அரசின் முக்கிய அங்கம். மற்றைய பெரும்பாலான போராளி அமைப்புகள் வெறுமனே தாக்குதல்களை நடத்துவதில் தம் முழு பலத்தை செலுத்தியது தான் உலக வரலாற்றில் இடம்பெற்றது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி அதில் முக்கிய பொருளாதார கூறாகிய வங்கியை நடத்தினர். அதற்க்கு தமிழீழ மக்களிடம் நல்ல ஆதரவு இருந்ததோடு மட்டுமல்லாமல் உலக ஊடகங்களும் அதைப்பற்றி எழுத தொடங்கின.

தமிழீழ வைப்பகம் 1994 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கலியுகத்தில் காவலாளிகளின் பாதுகாப்பு இன்றி, சி.சி.டி.வி ஏதும் இன்றி எந்த கொள்ளையும் இன்றி இயங்கிய ஒரே வங்கி தமிழீழ வைப்பகம் தான். வங்கி ஆரம்பிக்கப்படும் போது யாழ்ப்பாணமே புலிகளின் முக்கிய நிர்வாக நகராக இருந்தது. பின்னர் வன்னி பெரு நிலப்பரப்பை நோக்கி நகரும் போது தமிழீழ வைப்பகமும் கிளிநொச்சிக்கு நகர்ந்தது.

2005 A.F.P சர்வதேச செய்தி நிறுவனம் தமிழீழ வைப்பகம் பற்றி புகழாரம் சூட்டி இருந்தது. இது சர்வதேசம் புலிகளின் நடைமுறை அரசு மீது, குறிப்பாக புலிகள் சர்வதேச ரீதியாக இருந்த பொருளாதார சதிகளுக்குள் சிக்காமல் தம் நிதி நிருவாகங்களை வளர்த்தெடுத்து கொண்டு வந்ததை கண்டு பொறாமை பட்டது என்பதை சில சர்வதேச செய்திகள் அன்று எமக்கு உணர்த்தின.

2005 இல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே தமிழீழ வைப்பகம் அறவிட்டது. அக்கால பகுதியில் வீரத்தேவன் அவர்கள் வங்கியின் பணிப்பாளராக செயற்பட்டார். இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக துறை பட்டம் பெற்றவர். தமிழீழ வைப்பகம் தமது கணக்குகளை 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் ஒப்படைப்பது வழமை.
புலிகளின் ஏனைய சில நிர்வாக செயற்பாடுகளில் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தாலும் வங்கி துறையில் எந்த போராளிகளையும் ஈடுபடுத்தவில்லை. கற்றவர்களையும் பட்டதாரிகளையும் மாத்திரமே ஈடுபட்டுத்தினர். எந்த ஒரு கட்டத்திலும் ஆயுத முனையிலோ, மிரட்டல் பாணியிலோ வட்டியையும் சரி நிலுவையையும் சரி வசூலித்தது இல்லை. 2005 இல் 12 கிளைகள் இருந்தன. இதில் 5 கணணி மயப்படுத்தப்பட்டவை. ஆனாலும் கணணி மயப்படுத்தப் படாத கிளைகளில் கூட மக்கள் தாமத்தித்து நின்று இருக்கவில்லை.

அமுதம் சேமிப்பு கணக்கு சிறுவர்களுக்கு என “அமுதம்” என்று சேமிப்பு கணக்கை நடத்தினர். சில சந்தர்பங்களில் புலிகள் தாமே முதல் வைப்பு தொகையை போட்டு சிறுவர்களுக்கு சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்தனர். ஒரு யுத்தத்தின் அழுத்தத்தில் இருகின்ற அமைப்பு, தம் மக்களின் சிறுவர்களிடம் சேமிப்பை கூட ஊக்குவிக்கும் மன நிலையில் இருந்து இருகின்றார்கள் என்றால் அவர்கள் தூர நோக்கு இலட்சியத்துடன் போராடி இருகின்றார்கள் என்பது புலன் ஆகும். இறுதி யுத்த வருடத்திலும் தமிழீழ வங்கி நல்லாகவே இயங்கியது. 2009 இல் தமிழீழ வைப்பகத்தின் தலைமை செயலகம் கோப்பாபுலவு வீதியில் லூதர் மாதா சந்தியில் இயங்கியது.