தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை சில அரசியல் கோமாளிகள் குழப்புகின்றனர்!

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சுயாட்சியை ஏற்படுத்தவேண்டுமென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவர்கள் தமது அரசியல் நிலைப்புக்காக தொடர்ச்சியாக குழப்பம் இருக்கவேண்டுமென விரும்புகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இடமளிக்காது அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமெனத் தெரிவித்தார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் இதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் 2010, 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள், இனிவரும் தேர்தலிலும் தோல்வியடைவார்கள்.

தமிழ்த தேசியக் கூட்டமைப்பு முற்போக்கான கட்சி எனச் சொல்வதில் பெருமையடைகின்றேன். நாம் சகல மக்களும் சம அந்தஸ்த்துடனும், நீதியான சூழலிலும் வாழவேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

ஆனால், சில அரசியல் கோமாளிகள் நாம் ஒருவருடன் ஒருவர் பகைத்துக்கொண்டு வாழவேண்டுமென விரும்புகிறார்கள் எனத் தெரிவித்தார்.