தமிழ் உணர்வாளர், சிந்தனையாளர் ஓவியர் வீர.சந்தானம்!
ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது. எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தானம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக உருவெடுத்தார். கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் தமிழுக்காகவும்,ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறிந்து கொள்வதற்கு வழி வகுத்தவர். தமிழ் தேசியத் தலைவர்கள் அனைவரின் நம்பிக்கையையும், மரியாதையையும் வீர சந்தனம் பெற்றிருந்தார்.
அறம் மீது மட்டுமே பற்று கொண்டிருந்த அவர், பொருள் மீது பற்றற்று இருந்தார். அவருக்கு இருந்த தொடர்புகளை பொருளாதார ரீதியில் பயன்படுத்தியிருந்தால் அவரது நிலை மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும். ஆனால், தமது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழருக்காகவும் உழைத்து எண்ணற்ற நண்பர்களையும், அவர்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையையும் மட்டுமே சேர்த்து வைத்திருக்கிறார்.வீர.சந்தானம் என்பவர் ஓவியர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். மொழி, இனம், நாடு பண்பாடு தொடர்பான விதயங்களில் உணர்வுடனும் முனைப்புடனும் இயங்கி வந்தவர்.
இளமைக் காலம்
தஞ்சை மாவட்டம் கும்பக்கோணம் அருகில் உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை வீரமுத்து ஒரு கூலித் தொழிலாளி. தாயார் பொன்னம்மாள் .
கல்லூரிப் படிப்பை கும்பக்கோணம் அரசுக் கல்லூரியிலும் அதைத் தொடர்ந்து மேல் படிப்பை சென்னையிலும் கற்றார். சந்தானத்தின் இளமைக் காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தது. கோயில்களில் காணப் படும் சிற்பங்களைக் கண்டு கோடுகளையும் சுவர் ஓவியங்களையும் பார்த்து நகல் எடுத்து தம் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இராசஸ்தானில் பனஸ்தலி வித்யா பீட் பல்கலைக் கழகத்தில் பிரஸ்கோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அவ்வமயம் இத்தாலி, செய்ப்பூர் அசந்தா வகை ஓவியங்களின் செய்முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக் கொண்டார். புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் தனபால் (ஓவியர்) இவர் படிக்கும்போது பொருளியல் சூழலைச் சரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் அகவையில் பள்ளி நாடகத்தில் நடித்தும் உள்ளார்.
அலுவலகப் பணி
நெசவாளர் சேவை மையத்தில் பணியில் சேர்ந்தார் சென்னை , பெங்களூரு ,காஞ்சிபுரம், திரிபுரா , நாக்பூர் ,மிசோரம் என இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார். 25 ஆண்டுகள் அங்கு பணி செய்த பின்னர் விருப்ப ஒய்வு பெற்றார்.
கலைப் பணி
கல்தூண்களில் இடம்பெற்றுள்ள 108 பறவைகளை ஒன்று சேர்த்து ஒரு வடிவமைப்பை உருவாக்கினார். திசு நெசவு முறையில் அச்சுக் கலையைப் பயன்படுத்தி அந்த வடிவமைப்பைப் பதித்து ஓர் அழகான விரிப்பைச் செய்தார். கன்னனூர் கோவில்களில் இருந்த வீரன், குட்டிச்சாத்தான், குளிகன் போன்ற வடிவங்களை உள்வாங்கி 108 தையம் உருவங்களை தொகுத்து வடிவமைத்து திரைச் சீலைகளை உருவாக்கினார்.
தோல் பாவைக் கூத்து இவருக்குப் பிடித்த ஒன்று. தோல் பாவைக் கூத்து பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உண்டு. திரிபுரா மாநில பழங்குடியினரின் மரபு கலை வடிவங்களை ஆடைகளில் அறிமுகம் செய்தார்.
புதிய உத்திகளைக் கையாண்டு பீங்கான், மெட்டல் ரிலீப் போன்ற பல வகையான பொருள்களைப் பயன்படுத்தி புடைப்புச் சிற்பங்களைச் செதுக்கினார். சகட யாழ், மகர யாழ், காமதேனு எனத் தமிழர்களின் அடையாளங்களை ஓவியங்களாக எழுதியுள்ளார்.
தஞ்சைக்கு அண்மையில் உள்ள விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்என்னும் கூடத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 இல் நிகழ்ந்த ஈழப் போரின் அவலங்களைச் சித்திரித்துக் காட்டுகின்றன.
ஓவியர் வீர சந்தனத்தின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவர் மறைந்தாலும் தமிழர்களின் மனங்களில் இறப்பின்றி வாழ்வார். காலத்தால் அழியா இப்பெருமகனருக்கு எமது வணக்கத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
இனி அமரராகியுள்ள ஓவியர் சந்தானம் அவர்கள் சார்ந்து அவரது சக கலைஞ்ர்கள் இருவர் இந்து நாளிதழில் எழுதிய நினைவுக்குறிப்புக்களை மீள் இடுக்கை செய்கின்றோம்.
மாபெரும் கலைப் பயணி
தனபால் கண்டெடுத்த அற்புதமான ஓவியர்களில் ஒருவர் வீரசந்தானம். ஆதிமூலமும் நானும்கூட தனபாலின் ஊக்குவிப்பால்தான் வளர்த்தெடுக்கப்பட்டோம். எழுபதுகளில் சென்னை ஓவியக் கல்லூரியில் படிப்பதற்காக வீரசந்தானம் வந்தார். அப்போதிருந்தே அவர் எனக்குப் பழக்கம்.
ஓவியக் கல்லூரியில், ஒரு மாணவர் வரையும் ஓவியம் மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் காட்சியிலும் இருக்கும். எனவே,வளர்ந்துவரும் ஓவியரின் தனித்திறமைகளையும் ஆர்வத்தையும் முயற்சிகளையும் மற்ற ஓவியர்கள் அறிந்துகொள்ள முடியும்.
எனவே,அங்கு மூத்த மாணவர்கள், இளையவர்கள், ஆசிரியர்கள் என்ற பாகுபாடுகள் இருக்காது. அங்கு எல்லோரும் ஓவியர்கள்தான். அதனால் வீரசந்தானம் எனக்கு மூத்த மாணவராக இருந்தாலும் அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது.
தமிழில் கோட்டுச் சித்திரங்களுக்கு மிக நீண்ட மரபு இருக்கிறது. அது சமீப காலம் வரையில் தொடர்கிறது. இந்தியாவிலேயே தென்னாட்டில் குறிப்பாக சென்னை ஓவியக் கல்லூரிக்கு கோட்டுச் சித்திரங்களில் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. எழுபதுகளில் ஓவியக் கல்லூரியின் ஆசிரியர்களாக இருந்த மாபெரும் ஓவியர்கள் தனபால், சந்தானராஜ், அல்போன்ஸா ஆகியோர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அவர்களைத் தொடர்ந்து தக்ஷ்ணாமூர்த்தி, ஆர்.பி. பாஸ்கரன் ஆகியோர் ஓவியக் கல்லூரியில் கற்பிக்க ஆரம்பித்தார்கள். முந்தைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான இணைப்புப் பாலமாக அவர்கள் விளங்கினார்கள். கோட்டுச் சித்திரங்களில் ஆதிமூலம், வீரசந்தானம், சந்ரு, நான் முக்கியப் பங்காற்றியிருக்கிறோம். வீரசந்தானம் ஓவியங்களில் உள்ள தனித்துவம் நமது கோயில்களில் உள்ள சுவரோவியங்கள், மரபார்ந்த வண்ணங்கள் ஆகியவற்றின் தாக்கம் அதிகம்.
அதே காலகட்டத்தில் ஆதிமூலம் நெசவாளர் பணி மையத்தில் பணியில் சேர்ந்தார். அவரையடுத்து வீர.சந்தானமும், நானும் அங்கு பணிக்குச் சென்றோம். கைத்தறியின் வடிவமைப்பை மேம்படுத்தும் பணியில் வீரசந்தானம் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். கைத்தறி நெசவில் உள்ள கலாச்சார அடையாளங்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் அந்த ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. அங்கு பணிபுரிந்த அனுபவத்தில் அவர் கற்றுக்கொண்ட கலாச்சார வெளிப்பாடுகள், வண்ணப் பயன்பாடுகள் அவரது ஓவியங்களில் அதிகமாக இடம்பெற்றன.
ஓவியக் கலையில் இருந்த ஈடுபாட்டைப் போலவே தமிழ்த் தேசியம், பெரியாரியம் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. தமிழ்த் தேசிய இயக்கப் பணிகளில் அப்போதே வீரசந்தானம் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தொடர்ந்து, மார்க்ஸியம் சார்ந்த தோழர்களோடும் சிறுபத்திரிகை இயக்கத்தோடும் இணைந்து பங்காற்றிவந்திருக்கிறார். இலங்கையில் போராட்ட மனநிலையுடன் இயங்கிய பல்வேறு குழுக்களுடன் ஓவியப் பங்களிப்பைச் செய்துள்ளார்.
வைகறை,கி.பி.அரவிந்தன் ஆகியோர் நடத்திய ‘பாலம்’ இதழுக்கு வீரசந்தானம் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தார். தற்போது வெளியாகும் ‘காக்கைச் சிறகினிலே’ வரைக்கும் அவரது சிற்றிதழ் பங்களிப்பு தொடர்ந்தது. தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அவரது ஓவியத்தின் அடிப்படையில்தான் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெரிய நட்பு வட்டத்தோடு தொடர்ந்து பொதுவெளியில் இயங்கிய மிகச்சில ஓவியர்களில் அவரும் ஒருவர். சென்னை ஓவியக் கல்லூரி, நெசவாளர் பணி மையம், சமூக அக்கறை சார்ந்த அமைப்புகளின் தொடர்புகள் என கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக இருவரும் இணைந்து பயணித்திருக்கிறோம்.
அவர் மூலமாகத்தான் இலங்கையில் இயங்கிய பல்வேறு அரசியல் அமைப்புகளுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஈழ ஆதரவு தொடர்பாக எந்த சமரசத்துக்கும் அவர் ஆளானதில்லை. ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் என்னுடன் சேர்ந்து இயங்கிய சக பயணியை இழந்து நிற்கிறேன்.
– ட்ராட்ஸ்கி மருது, ஓவியர்.
வீரசந்தானம்: தூரிகைப் போராளி
ஓவியர்,புகைப்படக் கலைஞர், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் வீரசந்தானம். 1947-ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோவிலில் பிறந்தவர். அப்பா வீரமுத்து ஒரு விவசாயத் தொழிலாளி.
அம்மா பொன்னம்மா. இளமைக் காலம் முழுவதும் திருநாகேஸ்வரம், தாராசுரம், பட்டீஸ்வரம், உப்பிலியப்பன் கோவில் என்று கோயில்களிலேயே கழிந்தது. அவரது ஓவியங்களில் கோயில் கலையின் தாக்கம் வெளிப்படுவதன் பின்னணி இதுதான்.
அவரது ஓவியத் திறமை,கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் சேர வைத்தது. உப்பிலியப்பன் கோயிலிலிருந்து கல்லூரிக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவு நடந்தே செல்வார். பல்வேறு கோயில்களில் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்து வரைவதில் தேர்ச்சி பெற்றார். அவற்றை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தைத் தனது கல்விக்குப் பயன்படுத்திக்கொண்டார்.
ஓவியக் கலைப் பட்டயப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் (1971). 1972-ல் சென்னை ஓவியக் கல்லூரியில் தொழில்துறை ஆடை வடிவமைப்பில் பட்டய மேற்படிப்பை முடித்தார். சென்னையில் படித்தபோது வறுமை காரணமாகப் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டார். இரவில் தங்க இடம் இல்லாமல் கடற்கரையில் தூங்கியிருக்கிறார். சில சமயங்களில் ஓவியக் கல்லூரியிலேயே இரவில் தங்கிவிடுவாராம்.
அப்போது சிற்பக் கலைஞர் தனபால் அவரது சிரமங்களைப் பார்த்துவிட்டுத் தனது வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார். அதை வீரசந்தானமே பல முறை நினைவுகூர்ந்திருக்கிறார்.
சென்னை ஓவியக் கல்லூரியிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் வீரசந்தானம். பின்னர் ராஜஸ்தானில் பனஸ்தலி வித்யாபீட் என்ற பல்கலைக்கழகத்தில் சிறப்பு சுவரோவியக் கலை பயிற்சிமுடித்தவர். படிப்பை முடித்த பின் நெசவாளர் சேவை மையத்தில் பணியாற்றினார். சென்னை, மும்பை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோரம் என இந்தியாவின் பல பகுதிகளில் பணிபுரிந்தவர்.
பாலு மகேந்திராவின் ‘சந்தியாராகம்’ (1989) படத்தில் ஓவியக் கலைஞராகவே பிரதான பாத்திரத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அவள் பெயர் தமிழரசி’,‘பீட்சா’,‘மகிழ்ச்சி’,‘அரவான்’,‘‘கத்தி’,‘அநேகன்’ போன்ற படங்களில் நடித்தார். கி.ராஜநாராயணனின் கதையின் அடிப்படையில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கிய ‘வேட்டி’ உட்பட பல குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது, வனவிலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்துக்கான விருது, சிறந்த ஓவியருக்கான குடியரசுத் தலைவர் விருது என்று பல்வேறு விருதுகளை வீரசந்தானம் பெற்றிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும் ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார்.
டெல்லி லலித்கலா அகாடமி, பெங்களூருவில் உள்ள கர்நாடகா அருங்காட்சியகம் என்று பல்வேறு இடங்களில் அவரது ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது ஓவியங்களில் தோல்பாவைக் கூத்துக்குத் தனி இடம் இருப்பதைக் காணலாம். பெங்களூருவில் பணிபுரிந்தபோது அந்தக் கலையின் மீதான தாக்கத்தை ஆடை வடிவமைப்பிலும் வெளிப்படுத்தினார்.
மறைந்து கொண்டிருந்த தோல்பாவைக் கூத்துக்கு மீண்டும் ஒரு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்ததில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அவள் பெயர் தமிழரசி’படத்தில் தோல்பாவைக் கூத்துக் கலைஞராக அவர் நடித்தது மிகவும் பொருத்தமானது.
ஓவியக் கலையின் மற்றொரு வெளிப்பாடாக, நண்பர்களின் இல்லங்களுக்குக் கட்டிட வடிவமைப்பையும் செய்து தந்திருக்கிறார்.
மொழி, இனம், பண்பாடு சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் வீரசந்தானம். இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை வடிவமைத்தவர்.
1984-லேயே ‘இலங்கைத் தமிழர்கள் இனப் படுகொலை’ எனும் தலைப்பில் சென்னையில் ஓவியக் கண்காட்சி நடத்தியவர் அவர். காவிரிப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கனிமவளச் சுரண்டல்கள் என்று பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
கலைஞன் எனும் முகத்துடன் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பதைவிடவும், சமூகத்துடன் இரண்டறக் கலப்பதுதான் முக்கியம் எனும் எண்ணம் கொண்டவர் அவர். அதுதான் அவரது இறுதி மூச்சுவரை தொடர்ந்தது!
-ரேகா விஜயஷங்கர்
நன்றி- த இந்து