தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்; மக்களிடம் சித்தார்த்தன் கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஆதரவளித்து பெரு வெற்றிக்கு இட்டுச்செல்ல வேண்டும். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனமடையுமானால் அது தமிழ் மக்களையே பலவீனப்படுத்தும். ஆகவே வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை குறைக்க வேண்டாம். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவிடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கிலே கிளிநொச்சி, அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளிற்கு எமது வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்கான தீர்வு போதாது என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அதேநிலைப்பாடுதான் எமக்கும் உள்ளது.

இடைக்கால அறிக்கைக்கு இணைப்புக்களும் சேர்த்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலே வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி பற்றி கூறியிருக்கிறோம். இவ்வாறான அடிப்படை விடயங்கள் பல கூறப்பட்டுள்ளன.

ஆகவே இறுதி அறிக்கையொன்று வரும் வரைக்கும் நாம் இதுதான் வரப்போகின்றது என்று தூக்கியெறிய முடியாது.அந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமானதாக இருக்க வேண்டும்.

தென்னிலங்கையை பொறுத்த வரை கடந்த 60 வருடங்களாக அவர்களது நிலைப்பாடு மிக தீவிரமாக தெளிவானதாகவே இருந்திருக்கின்றது. தமிழ் மக்களுடைய அபிலாசைகள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஓர் இறுதித் தீர்வு ஒன்று வரும் என்று நான் நம்பவில்லை.

இருந்தாலும் இந்த நடவடிக்கைகளில் இருந்து நாமாக விலகிக்கொண்டவர்களாக இருந்தால் இன்று இருக்கின்ற சூழலில் ஐக்கிய நாடுகளினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடியொட்டி அல்லது சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாகவே இவை செயற்படுத்தப்பட்டு வருவதனால் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கூட இதை குழப்பி விடாமல் எடுத்துச்செல்வதற்கான வழியை மேற்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்கள்.

ஆகவே அதை மீறி நாங்களாகவே குழப்பினால் சிங்கள பேரின வாதத்திற்கு எமது விடயத்தை கையாள்வதற்கு இலகுவாக்கி விடுவோம். ஆகவே இதனை குழப்பிக்கொண்டு வெளியே வர முடியாது என தெரிவித்தார்