தலைவர் பிரபாகரனை மறைவிடத்தில் சென்று சந்தித்தது இப்படிதான்.

ஸ்ரீலங்காவில் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் யுத்தம் தொடங்கி உச்சத்துக்கு சென்றிருந்த நேரம் அது. புலிகள் யாழ்ப்பாணத்தை கைவிட்டு வன்னிக்குள் சென்று ரகசிய முகாம்களை அமைத்திருந்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனும் வன்னிக்குள் மறைவிடம் ஒன்றிலேயே தங்கியிருந்தார். இந்தியப் படைகள் வன்னிக்குள் புலிகளை சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டு இருந்தன.

இந்தியப் படைகளின் சுற்றிவளைப்பில் பிரபாகரனின் மறைவிடங்களும் சிக்கிக் கொள்ள, அவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்களும் நடந்தன.

இந்திய ராணுவத்தினர் புலிகளால் கொல்லப்பட கொல்லப்பட, மேலும் மேலும் புதிய ஆட்களை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருந்தது இந்திய ராணுவ தலைமை. ஆட்பலம் அவர்களிடம் தாராளமாக இருந்தது. புலிகளின் ஆட்பலம் குறைந்துகொண்டே போனது.

இப்படியே போனால், விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவரும் இந்திய ராணுவத்தால் முழுமையாக அழிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதிலிருந்து புலிகளை தப்பிக்க வைக்க ராஜதந்திர ரீதியான நடவடிக்கை ஏதாவது எடுத்தால்தான் முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இது நடைபெற்ற நாட்களில் ஸ்ரீலங்காவுக்குள் ஒரு விசித்திரமான அரசியல் நிலை காணப்பட்டது. அப்போது ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக ரணசிங்கே பிரேமதாச இருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா ராணுவமும் யுத்தம் புரிந்தபோது, இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய சென்றதுதான் இந்திய அமைதிப்படை. சென்ற இடத்தில் இந்திய அமைதிப்படையும் புலிகளும் யுத்தம் புரியத் தொடங்க, இந்திய அமைதிப் படையை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நிலைக்கு புலிகள் சென்றனர். இந்திய அமைதிப்படை தமது நாட்டுக்குள் இருப்பதை ஜனாதிபதி பிரேமதாசவும் விரும்பவில்லை.

இந்த விசித்திர நிலையை பயன்படுத்திக்கொண்டு, புலிகளை தப்ப வைக்கும் திட்டத்தை வகுத்தார் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆன்டன் பாலசிங்கம். புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளுக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் கே.பி.

இவர்கள் இருவரும் ஒரு சோர்ஸ் மூலமாக ஸ்ரீலங்கா அரசுடனேயே நேரில் பேசும் முடிவை எடுத்தனர். அப்போது ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஏ.சி.எஸ்.ஹமீதுடன் தொடர்பில் இருந்தனர். ஆரம்ப பேச்சுக்களின்பின், இரு தரப்பும் நேரில் சந்தித்து பேசுவது என்று முடிவாகியது.

கே.பி. அப்போது தாய்லாந்தில் தங்கியிருந்தார். ஆன்டன் பாலசிங்கம் லண்டனில் இருந்தும், ஏ.சி.எஸ்.ஹமீது கொழும்பில் இருந்தும் கே.பி. தங்கியிருந்த தாய்லாந்துக்கு வந்து மூவரும் பேசுவது என்று முடிவாகியது. இதற்காக பாங்காக் நகரில் சென்ட்ரல் ஹோட்டலில் அறைகள் எடுக்கப்பட்டன. இந்த சென்ட்ரல் ஹோட்டல், பாங்காக்கில் பழைய விமான நிலையத்துக்கு அருகே இருந்தது.

மூவரும் சென்ட்ரல் ஹோட்டலில் 3 வாரங்களாக தங்கியிருந்து பேச்சுக்களை நடத்தினர். இந்திய அமைதிப் படையை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் டீல் ஒன்றை வைத்துக் கொள்ள ஜனாதிபதி பிரேமதாசவை பாங்காக்கில் இருந்தபடியே சம்மதிக்க வைத்தார் வெளியுறவு அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீது.

ஆனால், ஸ்ரீலங்கா அரசுடன் டீல் வைத்துக்கொள்ள ஆரம்பத்தில் மறுத்துவிட்டார் புலிகளின் தலைவர் பிரபாகரன்.

பிரபாகரனுடன் நேரில் சென்று பேசினால்தான் அவரை சம்மதிக்க வைக்க முடியும் என்று தெரிவித்தார்கள் ஆன்டன் பாலசிங்கமும், கே.பி.யும். ஸ்ரீலங்கா அரசின் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்று, ஏ.சி.எஸ்.ஹமீதிடம் கேட்டார்கள் அவர்கள்.

ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேசி அதற்கு சம்மதம் பெற்றார் ஏ.சி.எஸ்.ஹமீது. அதையடுத்து, ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கொழும்பு பயணமான ஆன்டன் பாலசிங்கமும், கே.பி.யும, பிரபாகரனைச் சந்தித்து பேசி, ஸ்ரீலங்கா அரசுடனான டீலுக்கு சம்மதிக்க வைத்தனர். ராஜதந்திர ரீதியாக இரு தரப்பும் ஒன்று சேர்ந்த காரணத்தாலேயே, இந்திய அமைதிப்படை ஸ்ரீலங்காவில் இருந்து, வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது 1987-ல் நடைபெற்றது. 2009-ல் இறுதி யுத்தத்தில் புலிகள் இக்கட்டில் மாட்டியிருந்தபோது, ஆன்டன் பாலசிங்கம் உயிருடன் இல்லை. கே.பி. மட்டுமே இருந்தார்