தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வீர காவியம்…!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற ஒரு புரட்சிகரத் தலைவரைப்பற்றி – இராணுவ மேதையைப் பற்றி எழுதுவது என்பது ஒரு சுலபமான விடயமல்ல. முதன்மையான சாதனைகள் பலவற்றை ஈட்டியவர் என்ற அளவில், அவற்றோடு தொடர்புடைய மற்றவற்றைத் தொடாமல் ஒன்றையோ இரண்டையோ மட்டும் வலிறுயுத்திக் கூறமுனைவது ஓரளவுக்குக் கடினமான முயற்சியேயாகும்.

தமிழருடைய போலியில்லாத-மெய்யான அபிலாசைகளுக்கு எதிரான அரசுகளும் சக்திகளும் அவரை மட்டுமீறிய கடும் சொற்பிரயோகங்களால் தீவிரமாகக் கண்டித்துரைத்த போதிலும் தமிழீழ மக்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் எல்லாக் காலத்திலும் மிகப் பெரிய தலைவராகப் பிரபாகரன் முனைந்து நிற்கின்றார். இனவாத ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தது மட்டுமல்லாது, தமிழீழம் என்ற ஒரு தனி நாட்டை அமைப்பதற்கான இலட்சியத்தில் நாட்டங்கொள்வதற்கும் தமிழ் மக்களைத் தூண்டியெழுப்பி இயங்க ஏற்பாடு செய்தவரும் அவரே.
எனவே யாவருக்கும் மேலான ஓர் உன்னத தனி நபராக அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். பிரபாகரனினதும் அவருடைய நெருங்கிய உதவியாளர்களினதும் முழுமையான அர்ப்பணிப்பும் ஒப்படைப்பும், தமிழர்கள் அனைவரையும் மற்றவர்களுக்கு அடிப்பணிந்து எவ்வித விட்டுக்கொடுப்பும் செய்யாது, சம நிலையில் நிற்பதற்குத் தேவையான கூடிய நம்பிக்கை ஊட்டியுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கப்படும் தமிழீழம் என்ற பரிசு, நேரடியாகவும் மறைமுகமாகவும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களைத் தமிழீழப் போராட்டத்தில் மாறுபடாத ஈடுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழரது ஆதரவின் தேவையைக் கோரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான அறிக்கைகளும், சர்வதேச தமிழர்களது கூட்டுப் பொறுப்பின் முடிவான வெளிப்பாடாகவே தமிழீழம் அமையும்.
பிரபாகரனது அறிவார்ந்த விளக்கமுமே மலேசியா, சிங்கப்பூர், மொறீசியஸ், தென் ஆபிரிக்கா போன்ற இடங்களிலிருக்கும் தமிழர்களுக்கு மாறாத பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு, ஐரோப்பா, வடஅமெரிக்கா போன்ற இடங்களைப் பற்றி குறிப்பிடத்தக்கதொன்றுமில்லை.
இவ்விடங்களில் குறிப்பிட்ட அர்த்தத்தில் தமிழர்கள் பாகுபடுத்தப்படுவதும் ஓரங்கட்டப்படுவதும் அவர்களைச் சிறீலங்காவின் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களது பெரும் இலட்சியத்தின் பால் அனுதாபம் காட்ட இயல்பாகவே செல்வாக்குச் செலுத்த வைத்தன. புலம்பெயர்ந்த தமிழர்களுள் சில பகுதியினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சியத்திற்கு தமது உடல்-மனம் சார்ந்த ஆதரவு அளிக்கும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்பதைக் கூறத்தேவையில்லை.

தங்களது தலைவர்களால் ஏமாற்றப்பட்டும் காட்டிக் கொடுக்கப்பட்டும், ஈற்றில் கடுமையான இன மத ரீதியான ஓரங்கட்டலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டதனாலேயே அவர்கள் தங்களது இலட்சியத்தை ஆதரித்துப் போராடப் பிரபாகரனைப் போன்ற தலைவர் ஒருவர் தங்களுக்கு இருக்கின்றார் என மனதார நம்புகிறார்கள்.
ஈழப்போர் தொடங்கியதிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைத் தீவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சம்பவங்களை நெருக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சியத்திற்கு ஆதரவு தெரிவதற்காக 1980களிலும் 1990களிலும் பல ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களிலெல்லாம் பிரபாகரனது படங்களையும், உருவப்படங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் துகிற்கொடிகளையும் சுமந்து சென்று தமிழர்கள் பெருமையுடன் காட்சிக்குரியதாக்கினார்கள்.

அந்தளவுக்குத் தமிழர்களது அக்கறை தீவிரப்படுத்தப்பட்டுக் கிளர்ந்தெழப் படுத்தப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா போன்ற இடங்களிலுள்ள தென்னிந்திய வம்சாவழியினர், பொதுவாக தமிழீழ விடுதலை புலிகளுக்கும் குறிப்பாக பிரபாகரனுடைய துணிவான தலைமைத்துவத்திற்கும் பெரும் ஆதரவைக் கொண்டிருக்கிறார்கள். கடந்தகாலத்தில் தமிழ்ப் பொதுமக்களின் இப்பிரிவினர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களிடமே பண்பாட்டுத் தலைமையை நாடியிருந்தனர்.

ஆனால் அவர்கள் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை நாடத்தொடங்கி வம்சாவழித் தமிழர்கள் தமிழ் நாட்டிலுள்ள திராவிடத் தலைமை, குறிப்பாகப் பெரியார் இராமசாமியின் இறப்புக்குப் பின்னர், தங்களது முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், பண்பாட்டு அல்லது அறிவுப் பார்வையை அளிக்கவில்லையென்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பிடத்தக்க அர்த்தத்தில் கூறுவதானால், கலைஞர் கருணாநிதியினதும் தற்போதைய தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவினதும் குறுகிய அரசியல்கள் உலகத் தமிழர்களுக்கு எவ்வித நம்பிக்கையையும் அளிப்பதாகவில்லை. ராஜீவ் காந்தியின் அரசியற் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சாட்டப்பட்ட குற்றச் சாட்டானது அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்ட தமிழ்நாட்டு மக்களது ஆதரவை இழக்கச் செய்துள்ளது. காந்தியின் கொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பந்தம் பற்றி மெய்யான நிரூபணம் இல்லாதபோதிலும், இந்தச் சம்பவத்தின் தீங்கான பின்விளைவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்துவந்த ஆதரவில் வீழ்ச்சியை உருவாக்கியது.
எப்படியிருந்த போதிலும், சில அரசியற் கட்சிகளினதும் தலைவர்களினதும் சந்தர்ப்பவாத அரசியலே தமிழ் நாட்டுத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நிரந்தரமாகவே ஒட்டாது விலகிச் சென்று விடுவார்கள் என்ற பொதுவான நிலையை ஏற்படுத்தியது எனலாம். உண்மையிலிருந்து எதுவுமே நீண்ட காலத்திற்கு அப்பாலிருக்காது. தமிழ்நாட்டிற்கு நான் அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது சில குழுக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்.
தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் தமிழீழத்திலுள்ள தங்களது சகோதரர்களை ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டேன். தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும், காந்தியின் கொலைபற்றியும் அவர்களுக்கு அடக்கி மறைக்கக்கூடிய சில காரணங்கள் இருக்குமானாலும் அவர்கள் சுதந்திரத் தமிழீழக் கோரிக்கைக்குப் பூரண ஆதரவாளர்களாகவே உள்ளனர்.
அச்சுறுத்தும் POTA என்ற பயங்கரவாதத் தடைச்சட்டமில்லாவிட்டால் கூடுதலான சாதாரணத்

தமிழர்கள் கூடத் தங்களது அபிப்பிராயங்களை வெளிப்படையாகவே வெளியிடுவார்கள். மேலும், வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள் வகித்துவரும் பாத்திரம், தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறீலங்காவிலுள்ள தமிழர்களுடையதான தங்கள் சரித்திர கலாச்சாரப் பிணைப்புக்களை ஒருபோதும் துண்டிக்கமாட்டார்கள் என்ற உண்மையை உணர்த்தி உறுதிப் படுத்துகிறது.
பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் குறிப்பாகப் பிரபாகரனுடைய தலைமையையும் ஆதரிப்பதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உள்ளன. இராணுவ வீரமும், சிறீலங்காவின் அரச படைகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளும், கரும்புலிகளின் துணிவான தற்கொடைச் சாதனைகளும், வேறு சிலவும் சேர்ந்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஆதரவுக்கான முதற்காரணியாகத் தொடர்பு படுத்திக் கூறப்படுகிறது.

இந்தப் புறக்காரணங்களே தமிழீழ விடுதலைப்புலிகளுக்குக் கூடுதலான ஆதரவைத் தேடிக்கொடுத்துள்ளன. எனினும் அடிக்கடி விபரித்தும் கூறப்படாத இரண்டாவது காரணமும் ஒன்றுள்ளது. தமிழ் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வகிக்கப்படும் பங்கேயது. வீரஞ்சார்ந்த சமர்களில் களமாடி சிறீலங்காவின் வடக்குக் கிடக்குப் பகுதிகளின் எண்பது விழுக்காடு நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அதேவேளை, அத்தகைய சாதனை நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தது அவர்களுடைய முன்னேற்றகரமான உள்ளார்ந்த ஒன்றுபட்ட பங்களிப்பேயாகும்.
சாதித் தடைகள் நீக்குதல், பெண்கள் விடுதலை, அர்த்தமற்ற இறுக்கமான பழைய பண்பாட்டுக் கலாச்சாரங்களின் ஒழிப்பு போன்ற வேறு சிலவுமே தமிழரது புதிய வரலாற்று மலர்வுக்குத் தேவையான ஒப்பற்ற பங்களிப்பை வழங்குவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பமளித்தது எனலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னேற்றகரமான அனைவருக்கும் சம உரிமை என்ற மன நிலையே பல நூறாயிரக்கணக்கான இளம் வயதினரை தமிழீழத்தின் எதிர்காலத்திற்காக அவர்களது உயிர்களை அர்ப்பணிக்கக்கூடிய அளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின்பால் ஈர்ப்பும் பேரன்பும் கொள்ள வைத்தது.
இராணுவ வீரத்தைவிட தமிழ் சமுதாயத்தின் மாற்றத்திற்கான அவர்களுடைய பிரதிநிதித்துவமே அனைவரையும் வெகுவாக ஈர்ந்து இழுத்தது எனலாம். சமர்களின் வெற்றிகளும், பிரபாகரனின் இயல்பான தலைமைத்துவம், தமிழர் தாயகத்திற்கான சுயநலமற்ற நாட்டம் போன்றவற்றை நான் வியந்து புகழ்ந்தாலும், சாதிவெறியால் அடக்கியாளப்பட்ட தமிழ்ச்சமுதாயத்தை மாற்றி உருவமைப்பதற்கான தேவையைச் செயற்படுத்தும் அவர்களுடைய ஒன்றுபட்ட குழுக்களின் சமூகத்திட்டங்களினால் நான் வெகுவாகக் கவரப்பட்டேன்.
சாதி, சமூக ஏற்றத்தாழ்வுகள், பால்வேற்றுமை போன்ற சமூகத் தடைகளிலிருந்து மனிதசக்தியை விடுவிக்காமல் வடகிழக்கு இளம் வயதினரை இயங்கச் செய்ய தமிழீழ விடுதலைப்புலிகளினால் முடிந்திருக்குமா என்பது உண்மையிலேயே ஒருவர் வியந்து கேட்க வேண்டிய வினாவேயாகும். இந்த அக-புற பருமன்களே என்னையும் வேறு பலரையும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் உள்ளார்ந்த நாட்டத்தை ஏற்படுத்தின. அவர்களுடைய தலைவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதற்கு முன்னரே தமிழருடைய விடுதலை இயக்கத்தை ஆதரித்தவன் நான்.
மார்க்ஸிச நோக்கில் தமிழர் தேசியப் பிரச்சினை பற்றி அன்ரன் பாலசிங்கத்தின் தமிழீழத்திற்கான இலட்சியம் ஏன் முன்னேற்றகரமானது என்பதை மிகவும் தெளிவாக விளக்கமளிக்கின்றன. அவருடைய எழுத்துக்கள் மிகக் கூடிய கொள்கை விளக்கத்தையும், வெகுவான நம்பகத்தன்மையையும் கொண்டவை. பிரபாகரனது பேச்சுக்களும் பேட்டிகளும் எம்முன் கிளர்ச்சியைத் தூண்டுபவை.
சர்வதேசத் தமிழரின் கூட்டுப்பொறுப்புணர்வின் அடிப்படையில் வற்புறுத்தப்படும் அவரது பகுத்தறிவுக்கு ஒத்த விளக்கம் ஒரு தெளிவு தரும் செய்தியாக-வியப்பூட்டும் செய்தியாக அமைந்திருந்தது. இவை புலம் பெயர்ந்த தமிழருடைய தேசியம் பற்றிய என்னுடைய சொந்த எழுத்துக்களுடன் ஒரே சமயத்தில் வெளியாயின.
1990 களின் ஆரம்பத்திலிருந்தே நான் தமிழரது தாயகத்திற்குப் பயணம் மேற்கொள்ள விரும்பினேன். ஆனால் துரதிஸ்டவசமாகப் போர் அதனைக் கைகூடவிடாமல் தடுத்தது. 2002ம் ஆண்டு முற்பகுதியில் போரிடும் இரு சாரார்களுக்குமிடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் எனக்கு அந்த அரிய சந்தர்ப்பத்தைத் தந்தது. உண்மையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த படையணியினருக்கும் அரசியல் பிரிவினருக்கும் ‘சமஷ்டி’பற்றிப் பத்துநாள் தொடர் வகுப்பு எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.
நான் இந்தப் பணியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். நான் திரும்பி வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் ஒடுக்கப்பட்ட மக்களின் அரிய பெரும் சொத்தாக வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறான, புராண இலக்கியமான வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திப்பதற்கான அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. இரவுணவுக்குப் பின்னர், விடை பெறுவதற்கு முன்னர் கீழ்க்கண்ட வார்த்தைகளை அவர் என்னிடஞ் சொன்னார். ‘தமிழனுக்கு ஒரு நாடு தேவை.’ இச்சொற்கள் சொல்லப்பட்ட விதம் என்னைப்பூரணமாக உணர்ச்சியிலாழ்த்தியது.
தமிழரது இலட்சியத்தை அடைவதில் அவர் எப்படி வியக்கத்தக்க முறையில் உறுதி பூண்டுள்ளார் என்று என்னுள் எண்ணி வியக்க முடியாமலிருக்க முடியவில்லை. உண்மையில் எனது தன்னிறையமைதியை மீளப் பெறுவதற்கு சிறிது நேரம் எடுத்தது. நவீன வரலாற்றின் மிகப்பெரிய தமிழ் நாயகனுடனான சந்திப்பு அத்தகைய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. நான் எனது வாழ் நாளில் தலைவர்கள் பலரைச் சந்தித்துள்ளேன். ஆனால் பிரபாகரனுடனான எனது சந்திப்பு வேறுவகையானது.
அவரது உலக அரசியல் பற்றிய அவருடைய ஆழ்ந்த அறிவாற்றல், தமிழீழத்தை அடைவதற்கான அவருடைய பூரண உறுதிப்பாடு, அத்தோடு மிக முக்கியமற்றது எனப் புறந்தள்ள முடியாத தமிழர்களுக்கான கனவை அடைவதில் வரும் வேற்றுமைகளுக்கு ஈடுகொடுத்து எதிர்த்து நிற்கும் அவரது வல்லமை யாவும் என்னை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தன. பிரபாகரன் போன்ற தலைவர் ஒருவர் இன்னுமோர் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தோன்றுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு புராண இலக்கியம். தமிழரது பெருமைக்கும் கீர்த்திக்குமுரிய சொத்து அவர்.
பிராபாகரனை நான் மீண்டும் 2003ம் ஆண்டு மார்கழி மாதம் எனது மனைவி, இரண்டு மகள்மார் கொண்ட குடும்பத்துடன் சந்தித்தேன். இரவுணவுக்குப் பின்னர் அரசியல் பற்றியும், தமிழீழத்தின் எதிர்காலம் பற்றியும், வெளிநாடுகளில் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனப்பல விடயங்களைப் பற்றியெல்லாம் சிறிது நேரம் உரையாடிக்கொண்டோம்.
தமிழருக்கான இலட்சியத்திற்குத் தலைமை தாங்கும் அந்த மனிதனின் பெருமை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே எனது இரண்டாவது சந்திப்பு அமைந்திருந்தது. அவரது துணிச்சலும் ஈடுபாடும், தமிழீழம் அவரது பிடிக்குள்ளேயே இருக்கிறது என்ற நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது. அது வெறுமனே காலத்தைப் பொறுத்த ஒரு விடயமேயாகும்.
கார்த்திகை மாதம் 11ம் திகதியின் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பயங்கரமான பின் விளைவினால் அமெரிக்காவினால் வரக்கூடிய அச்சுறுத்தல் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, குண்டு போட்டுத் தகர்க்க முன்னர் அது தமிழ்ப்பிரதேசங்களில் பாலங்களையும், கட்டிடங்களையும், பெருந்தெருக்களையும் கட்டவேண்டும் என்றார். அவர் குறிப்பிட்டதைச் சுருக்கமாகக் கூறுவதானால், வன்னியில் குண்டு போட்டுத் தகர்க்க எதுவுமேயில்லை என்பதேயாகும். வல்லரசுகளால் பிரபாகரன் சிறிதளவேனும் அணுகப்படவில்லை.
இந்தியப் படைகள் அவமானகரமான முறையில் இலங்கைக்கரைகளை விட்டு நீங்குமுன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களுடன் போரிட்டனர். ஈராக்கிய புதைகுழிக்குள் சிக்கியுள்ள அமெரிக்கா, தமிழீழ விடுதலைப்புலிகளை நசுக்குவதற்கு தனது இராணுவக் கொடுக்குகளை விரிக்கும் நிலையிலில்லை. தமிழரது இலட்சியத்தை பின் தொடர்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் உறுதி பூண்டிருக்கும் அதேவேளை அது இயந்திர ரீதியான போருக்கு பழக்கப்பட்டிருக்கவில்லை.
அது எப்பொழுதும் பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாட்டிற்கே தயாராக இருக்கிறது. தனி நாட்டிற்கான தனது இலட்சியத்தை அது கைவிடவில்லை. என்றாலும் அது உள்ளக சுய நிர்ணய இலக்குகளுடன் இணங்கிப் போகக்கூடிய ஒரு தீர்வுக்கு சிறீலங்கா அரசுடன் பேசுவதற்குத் தயாராகவே உள்ளது. இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கில் 80 விழுக்காடு நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
அவர்களுடைய சொந்தக் காவற்துறைப்படை, நீதித்துறை, வரிமுறை, சுங்கப்பிரிவு, குடிவரவுப் பிரிவு, நிர்வாகம் போன்றவற்றைக் குறிப்பிடாவிட்டாலும் அவர்களிடம் போர்த்தேர்ச்சி பெற்ற நிலையான ஒரு படையோடு சக்திவாய்ந்த கடற்படையணியன்றும் உண்டு. சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின்படி உண்மையான நாடொன்றுள்ள அவர்களிடம் உள்ள போதிலும், அவர்கள் சிறீலங்கா அரசுடன் இடைக்கால சுய ஆட்சி முன்மொழிவைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தமது தெரிவை இன்னமும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பெருந்தனத்தை சர்வதேச சமூகம் பாராட்டுவதாகத் தெரியவில்லை. தன்னிச்சையாகச் சுதந்திரத்தைப் பிரகடனப் படுத்துவது தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு மிகவும் கடினமான காரியமில்லை.

நன்றி
பேராசிரியர் இராமசாமி
வரலாற்றுக்கும்,
ஆட்சியியலுக்கும்,
போர்த்திறன் சார்ந்த ஆய்வுக்குமான மையம்.
தேசியப் பல்கலைக்கழகம்.
மலேசியா.