தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சகோதரன்  வேலுப்பிள்ளை மனோகரனுடனான செவ்வி. 1

கேள்வி : உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது ?

மனோகரன் : பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள். ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள், இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள். ஆனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை.

அந்தக் தேடலுக்கான பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டு பிடிக்க வேண்டும்.

கேள்வி: விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளுக்கான பணிகளை தானே செய்வதாகக் கூறிய கே.பத்மநாதன் அத்தருணம் உங்களிடம் என்ன கூறினார்?

மனோகரன்: கே.பி ஊடகங்களில் தோன்றி ஒரு தடவை இறந்துவிட்டதாகவும், இன்னொரு தடவை உயிருடன் இருப்பதாகவும் கூறினார். அவர் மற்றவரில் இருந்து சற்று வித்தியாசமாக விண்ணிலும் மண்ணிலுமாக இரண்டு இடங்களிலும் தேடியிருந்தார்… இப்படி இரண்டுங்கெட்டான் பதிலை பிரபாகரன் தனது வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது. கே.பியின் கடமை என்ன.. பிரபாகரனின் உடன் பிறந்த அண்ணன் நான் இருக்கிறேன்.. என்னிடம் ஒரு தடவை கூட அவர் இது குறித்து பேசியது கிடையாது.

கேள்வி: வேறு யாராவது தொடர்பு கொண்டார்களா?

மனோகரன்: தமிழகத்தில் இருந்து பழ.நெடுமாறன் ஒருவர் மட்டும் தொடர்பு கொண்டு பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தியை அறிவிப்பதாகக் கூறினார். மற்றப்படி யாருமே இது குறித்து என்னுடன் இன்றுவரை பேசியது கிடையாது. ஒருவரிடமும் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.

கேள்வி : அப்படியானால் இந்தக் கேள்விக்கான பதிலை எங்கிருந்து தேடுவது?

மனோகரன்: பிரபாகரன் வாழ்வில் இருந்துதான் தேடிக் கொள்ள வேண்டும். நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் என் தம்பி எல்லாள மன்னன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றவர் என்று. அதுபோலவே மானமுள்ள தமிழுக்காகவும், உயர் தமிழ் வீர ஒழுக்கத்திற்காகவும் அவர் வாழ்ந்தார். சங்ககால பாடல்களில் கண்ட உயர்ந்த அப்பழுக்கில்லாத வீரத்தை எல்லாள மன்னன் போற்றினான். தள்ளாத வயதிலும் உயிரச்சமின்றி தனிச்சமருக்குப் போன வீரன் எல்லாளன். அதுபோல பிரபாகரன் உருவாக்கிய விடுதலை வீரர்கள் அனைவருமே இருபதாம் இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் சங்ககால வீர வாழ்வை வாழ்ந்தார்கள்
புறநானூற்றில் கண்ட வீரத்தை நிஜ வாழ்வியல் ஓவியங்களாக மாவீரர்களை வைத்தே வரைந்தும் காட்டினார். இயற்கையாகவே பிரபாகரன் ஓர் ஓவியர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவேதான் அவர் வாழ்வும் புறநானூற்று தமிழ் வீர வாழ்வும் ஒன்றுதான் என்பதைப் புரிய வேண்டும்.

கேள்வி: இது அவர் வாழ்வின் முற்பகுதிவரை நகர்ந்து போகும் நிகழ்வு. எதிரிகளின் நீரைக் குடித்து உயிர் வாழாத சேரன் செங்குட்டுவனின் வீரம் திலீபனிடம், திருமணமான அன்றே போருக்கு போன புறநானூற்று வீரம் குமரப்பாவிடம் என்று சுத்தமான தமிழ் வீரத்தை அவர் படைத்தார். கரிகாலன் என்ற பெயருடன் அவர் வாழ்ந்த வாழ்வு எங்களுக்கும் தெரியும், இருப்பினும் அவருடைய வாழ்வின் பிற்பகுதி புறநானூற்றின் இறுதிப்புள்ளியின் தாக்கம் தெரிகிறதே…

மனோகரன்: கடைசியில் நடைபெற்ற புதுமாத்தளன் போர்க்களமும் மாங்குடி மருதனார் பாடிய சங்க காலப் போர்க்களமும் வேறு வேறல்ல. வெட்டி எடுக்கப்பட்ட முடித்தலைகள் அடுப்பாக.. பிளக்கப்பட்ட கபாலங்கள் பாத்திரமாக.. அதற்குள் இரத்தமும் சதையும் நிணமும் இட்டு, வெட்டிய கைகளை அகப்பையாக.. துளாவி ஒரு போர் யாகம் நடந்தினான் பாண்டிய மன்னன் என்று பாடியுள்ளார்கள். அதைத்தான் புதுமாத்தளனில் கண் முன் கண்டு துடிதுடித்தோம். உண்மையில் அது புறநானூற்றுப் போர்க்களம்தான்.

கேள்வி: இருக்கலாம் இருந்தாலும் இப்போது உருவாகியுள்ள நிலை புறநானுற்றில் இருந்து சிறிது வேறுபடுகிறதே..? வெற்றிடத்தால் ஒரு போர் என்ற புதிய கோட்பாடு தெரிகிறது… உங்களுக்கு அது தெரிகிறதா?

மனோகரன்: உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது.. வெற்றிடத்தால் ஒரு போர்… அதற்கான பதில் அவர் படித்த நூலில் இருக்கிறது. ஒரு மனிதனின் நல்ல நண்பன் அவன் படிக்கும் நல்ல நூல்தான் என்று கூறுவார்கள். பைபிள் படித்தவர்கள் பைபிள் போலவே வாழ முயற்சிப்பதும், மார்க்சியம் படித்தோர் மார்க்சிய வாதிகளாக வாழ்வதும் ஏன்.. அவர்கள் படித்த நூலின்படி வாழ முயற்சிக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும்.

அதுபோலத்தான் பிரபாகரனும் வாழ்வின் வேதமாக நேதாஜி சுபாஸ்சந்திரபோஸின் வாழ்க்கையை கடைப்பிடித்தார். நேதாஜியின் கடமை உணர்வு மிக்க, ஒழுக்கம் குறையாத ஓர் இராணுவத் தொண்டர்களை அவர் வடிவமைத்தார். நேதாஜியின் இறுதிக்காலத்தில் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லமல் போனது.. இப்போது பிரபாகரன் விரும்பிப் படித்த நேதாஜியின் வாழ்வியல் தத்துவம் அவரை வழி நடத்தியிருப்பது தெரிகிறது..

இது புறநானூற்றில் இருந்து வேறுபட்ட இடமாகும்… நேதாஜி கதை படித்து, அவர் வாழ்வின் பிற்பகுதி போன்ற தோற்றத்தை கடந்த ஓராண்டு காலமாக வைத்திருக்கிறார்…பிரபாகரன். அதிலும் ஒரு போராட்டம் மறைந்திருக்கிறது.. அதுதான் புதிய புறநானூற்றின் அதிசயமான பக்கம் அதற்குப் பிறகு வருகிறேன்..

தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது பாரதக்கதை கேட்டு போர் வீரனானான் அபிமன்யு, அதுபோல எல்லாளன் கதையை தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்டு அவர்போல தமிழ் வீரரானார் பிரபாகரன். என்று முன்னர் கூறியிருந்தேன். பின்னர் மறுபகுதியை கூறுகிறேன்..

கேள்வி: சரி நம்மை விடுங்கள்.. மத நம்பிக்கை உள்ளவர்கள் நம்மில் பலர் உள்ளார்கள்.. அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதாவது சாஸ்திரங்கள் கேட்டுள்ளீர்களா..அதுவும் வாழ்வில் ஒரு கடமையல்லவா ?

மனோகரன்: சாஸ்த்திரங்கள் என்பவை தனிப்பட்டவரின் நம்பிக்கைகளால் எல்லைப் படுத்தப்படுவது. ஆனால் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனின் பிற்கால வாழ்வு மர்மம் நிறைந்தாக இருக்கும், யாரும் அவரைக் காண இயலாது என்றும்.. அவர் எங்கே என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

நாம் அப்போது அதை பெரிதாக கருதவில்லை, ஆனால் இப்போது அதையும் எண்ணிப்பார்க்கிறேன்.. அதற்குமேல் பிரவேசிக்கவில்லை.

Apr 16, 2010