திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக 07.08.2018 காலமானார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இந்தியாவின் மூத்த அரசியல்வாதி. தொடர்ந்து 60 வருடங்களாக, எம்.எல்.ஏவாக இருந்து 5 முறை முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தவர். கடந்த 2016-ம் ஆண்டு ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டார். அதனையடுத்து முதுமை காரணமாக அவருக்கு சளித்தொல்லையும், சுவாசக்கோளாறும் ஏற்பட்டது.
இதன் காரணமாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் அவரது தொண்டையில் டிரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டிலேயே மருத்துவர்கள்  அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நலக்குறைவு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
மேலும் அவருக்கு அவ்வபோது டிரக்கியோஸ்டமி கருவியும் மாற்றப்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த ஜூலை 18-ம் தேதி அவருக்கு டிரக்கியோஸ்டமி கருவி மாற்றப்பட்டு புதுக்குழாய் பொருத்தப்பட்டது.  இதனையடுத்து அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. கோபாலபுரம் இல்லம் வந்து அவரை சோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறி அவரது வீட்டிலேயே தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரை காண யாரும் வர வேண்டாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து ரத்த அழுத்தம் குறைந்ததால் கடந்த ஜூலை 27-ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. ஆனால் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் பார்த்த புகைப்படம் வெளியானது. அதில் அவரது இதயத்துடிப்பு சீராக இருப்பது தெரிய வந்ததன் மூலம் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று மீண்டும் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. மேலும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் உள்ளது. மருத்துவ உதவியோடு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் .அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ  உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூறலாம் என கூறப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று உயிரிழந்தார். அவரது மறைவை கேட்ட திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் அவரது மறைவு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன.