தியாக வேள்வியின் ஆரம்பம் -01
யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் அழகிய பனைமரங்கள் கொஞ்சி விளையாடும் கிராமத்தில் ஆசிரியர் திரு. இராசையா தம்பதிகளின் கடைசி மகனாகப் பிறந்த பார்த்திபன் வாழ்வின் ஆரம்பத்திலேயே மிகவும் துர்ப்பாக்கியசாலியாக இருந்துவிட்டார்.
பத்துமாதம்வரை அன்புப்பால் ஊட்டி சீராட்டி பாராட்டி வளர்த்த அன்னையின் அரவணைப்பை பத்தாவது மாதம் முடிவில் பறிகொடுத்துவிட்டார் திலீபன்.
பிஞ்சுக்கால்களை ஊன்றி அந்தக் குழந்தை தத்தித்தத்தி நடக்கவேண்டிய பருவத்தை கொஞ்சி மகிழ்;ந்த அன்னை நெஞ்சில் மகிழ்வோடு பார்க்கமுடியாமல் பரலோகம் போய்விட்டார்.
தாய் இறந்தபோது அக்குடும்பத்தின் மூத்த மகனான இளங்கோவிற்கு வயது ஒன்பது மட்டுமே.
பெண்குழந்தைகள் இல்லாத காரணத்தாலும் இளங்கோ சிறுவயதுப் பையன் என்பதாலும் பார்த்திபனின் தந்தை இராசையா ஒரு பள்ளி ஆசிரியர் என்பதாலும் குழந்தை பார்த்திபனைக் கவனிக்க வீட்டில் யாரும் இல்லை.
ஊரெழுவில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள கரந்தன் என்ற சிற்றூரில் பார்த்திபனின் அம்மாவின் தாயும் சிறியதாயான செல்வி இராசலட்சுமியும் வசித்துவந்தனர்.
பார்த்திபனின் பாட்டி வயதானவர் என்பதால் அவரின் சிறிய தாயாரான செல்வி. இராசலெட்சுமியிடம் பார்த்திபனைக் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார் இராசையா அவர்கள்.
பிஞ்சுப்பருவத்தில் அன்னையை இழந்த பார்த்திபன் சிற்றன்னையின் அணைப்பில் வளரத் தொடங்கினார். இராசையா ஆசிரியரும் பார்த்திபனின் சகோதரர்களும் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் பார்த்திபனைப் பார்த்துவிட்டு வருவார்கள்.
அவருக்கு ஒன்றரை வயதான போது சகோதரர்கள் அல்லது தகப்பன் அவரைப் பார்க்கவரும்போது தானும் அவர்களுடன் வரப்போவதாகக் காலைக் கட்டிக்கொண்டு அழுவார். அடம்பிடிப்பார். ஆனால் அவருக்கு இரண்டு வயதான போது அவரை ஒரேயடியாக வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார் தந்தை.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் தான் படிப்பித்துக்கொண்டிருக்கும்போது கைக்குழந்தையையும் கூடவே அழைத்துச் செல்வார் தந்தை.
மூன்று வயதில் அவனை உரும்பிராயில் இருந்த பாலர் பாடசாலை ஒன்றில் தந்தையார் சேர்த்துவிட்டார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திற்கு மிக அண்மையிலேயே இப்பள்ளி இருந்தது.
பாலர் பாடசாலை முடிந்ததும் அப்பாடசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்குக் கடையில் தகப்பனுக்காகக் காத்துக்கொண்டிருப்பார் பார்த்திபன். உரும்பிராய் விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள அந்தப் பலசரக்குக் கடை முதலாளி பார்த்திபனுக்காகத் தினமும் இனிப்பு வழங்குவார்.
அவர் வளர வளர அவரால் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் பிரச்சனைகள் குறைய ஆரம்பித்தன. தன்வேலைகள் தானே கவனிக்கும் பக்குவத்தை அவர் மிகச்சிறுவயதிலேயே பெற்றுவிட்டார்.
பாலர் கல்வியை முடித்துக்கொண்ட பார்த்திபனை தான் கல்விகற்பித்துக்கொண்டிருந்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலேயே ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக சேர்த்துவிட்டார்.
சில வருடங்களின் பின் தந்தை இராசையாவிற்கு இடம்மாற்றம் வந்தது. அவர் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டார். தனித்து நின்ற பார்த்திபனையும் அங்கேயே கொண்டுபோய்ச்சேர்த்துவிட்டார்.
சிறுவயதிலேயே அவர் படிப்பில் புலியாக விளங்கினார். ஐந்தாhம் வகுப்பு மட்டும் முதலாவதாகவே வந்தார். ஒருவருடத்தில் படித்து முடிக்க வேண்டிய பாடங்களை எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் இரவுபகலாக இருந்து வாசித்துமுடித்துவிடுவார்.
சின்னவயதில் இருந்தே அறிஞர்களின் நூல்களை விரும்பி வாசிக்கத் தொடங்கினார். சிறுவயதிலேயே அவருக்கு ஆஸ்த்துமா வியாதி இருந்தது.
குளிரில் மூச்சுவிட முடியாமல் திணறுவார். அடிக்கடி அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வார் தந்தை.
சிறுவயதில் இருந்தே வானொலிப்பெட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கிரிக்கட் கொமன்றி கேட்பதில் பார்த்திபனுக்கு அதிக விருப்பம் இருந்தது. சில சமயம் சாப்பாட்டில் கூட அக்கறையின்றி அதைக் கேட்டுக்கொண்டு இருப்பார்.
ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். ஒரே தடவையில் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்தார்.
அப்போது இரவு பகலாக ஓய்வு உறக்கம் இன்றி படித்ததன்காரணமாக அவரது கண்கள் பாதிக்கப்பட்டன. அப்போது யாழ் ஆஸ்பத்திரியில் கண்வைத்திய நிபுணராக டாக்டர். திருமதி கண்ணுத்துரையிடம் அவர் சிகிச்சை பெற்றார்.
அவர் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது மட்டுமன்றி கண்களுக்கு கண்ணாடியையும் சிபாரிசு செய்தார். அதிலிருந்துதான் அவர் கண்ணாடி அணியத் தொடங்கினார். இதன் காரணமாக முதலாம் தடவையில் அவரால் க.பொ.த உயர்தரவகுப்பில் சித்தியடைய முடியாமல் போய்விட்டது. இரண்டாம் தடவை திறமையாகச் சித்தியடைந்த அவருக்கு யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவனாகப் படிப்பதற்கு அழைப்பு வந்தது. அதை ஏற்க மறுத்து விடுதலைப் போராட்டத்தில் குதிக்க அவர் முடிவு செய்தார்.
1974ம் ஆண்டு தை மாதம் யாழ்நகரில் நடைபெற்ற நாலாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்.
ஆனால் தமிழ் இனத்தின் துரோகி ஒருவரின் கட்டளை மூலம் ஒன்பது அப்பாவித்தமிழர்கள் அங்கு அவர் கண்முன்னால் கொல்லப்பட்டதைக் கண்டு பார்த்திபனின் இதயம் துடிதுடித்தது.
தமிழன் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற விடுதலைத்தாகம் அந்தச் சிறுவயதில் அவர் நெஞ்சில் நெருப்பாகப் பற்றத்தொடங்கியது.
யாழ் இந்துவில் பயிலும்போது படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் திறமைசாலியாக விளங்கினான்.
விளையாட்டுத்துறையின் தலைவனாகவும் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார்.
1977ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வந்த தமிழ் அகதிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார்.
அப்போது அவருக்கு வயது 13.
அந்த இனக்கலவரம் திலீபனின் நெஞ்சில் சுதந்திர தாகத்தை வெகுவாகக் குழப்பத்தொடங்கியது.
அந்த வயதிலேயே விடுதலைப்புலிகளின் அதிரடித்தாக்குதல்களை மானசீகமாக மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார் திலீபன்.
தியாகத்தின் குறியீடு