பசியால் உயிர் நீத்த திலீபன் மக்களுக்கு மருந்தாக மாறியது எவ்வாறு ????

உலக வரலாற்றில் அகிம்சைக்குப் பெயர் போன நாடாக விளங்கும் இந்திய தேசம் காந்தியடிகள் மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்திய அறப்போராட்டத்தின் வாயிலாகவே வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்றால் அது எமது ஈழதேசத்தின் மாபெரும் அறப் புரட்சியாளன் தியாகி திலீபனது தியாகத்தின் உச்சத்தையே சாரும்.

காந்தியடிகள் இந்தியாவின் இந்தக் கோர முகத்தைக் காண உயிரோடு இருக்கவில்லை .அப்பிடி அவர் உயிரோடு இருந்திருந்தால் திலீபனின் தியாகத்தின் முன்னால் திலீபன் மூட்டிய அறம் எனும் அக்கினியின் முன்னால் எரிந்து சாம்பலாகியிருப்பார்.

திலீபன் இயல்பாகவே வறிய மக்களுக்கான மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்.

அதனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கொண்டே சுகாதாரத் தொண்டர் குழுவை உருவாக்கி சேவையாற்றினார்.திலீபனது வீரச்சாவின் பின்னர் புலிகளின் மருத்துவ சேவையினர் மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவையினை மட்டுமே முன்னெடுத்து வந்தனர் இந்த சேவையும் வைத்திய சாலைகள் இல்லாத போக்குவரத்து வசதிகள் இல்லாத பிரதேசங்களிலேயே முன்னெடுக்கப்பட்டது.

வன்னியில் பொருளாதார தடை இறுக்கமாக இருந்த போது இயற்கையின் சீற்றம் கோரத் தாண்டவமாடிய போது நாளாந்தம் மக்கள் வைத்திய வசதிகள் இன்றி நாளுக்கு நாள் மரணித்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனைகள் இருந்தன மருத்துவர்களும் மருந்துகளும் இல்லாமல் இருந்தது.

மருத்துவர்களுக்கு அந்த வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு மின்சார வசதி Ac வசதி போன்றன தேவைப்பட்டது.அரசாங்கமோ வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது கடுமையான மருந்துத் தடையினை விதித்திருந்தது.அங்கே அனுப்பப்படுகின்ற மருந்துப் பொருட்கள் விடுதலைப்புலிகள் வசம் செல்வதாக குற்றம் சுமத்தியது.ஆனால் மக்களோ கொலரா மலேரியா நெருப்புக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு இரையாகிக் கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் ஆட்பலத்தையும் இந்நிலை வெகுவாகப் பாதித்தது.உண்மையான விடுதலைப் போராட்டம் என்பது அவ்வமைப்பின் மருத்துவ சுகாரத்துறைகளிலேயே தங்கியுள்ளது.எவ்வளவு தான் ஆக்ரோசமாக தந்திரோபங்களோடு யுத்தம் புரிந்தாலும் அங்கே காயமடைகின்ற அல்லது நோய்வாய்ப்படுகின்ற ஒரு போராளி சிகிச்சையளிக்கப்படாது உயிரிழந்தால் அது கூட இருக்கின்ற போராளிகளையும் மனோரீதியாக பின்னோக்கி நகர்த்தும்.

அதனையும் விட வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் ஒரு இனம் தான் நினைத்த இலக்கை அடையும் போது அங்கே வாழ்கின்ற மக்கள் சூடான் சோமாலியா போன்ற நாடுகளைப் போல வறுமையாலும் கொடிய நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அந்தப் போராட்டத்தின் பலன் தேவையற்றதாகிவிடும் இந்த நோக்கங்களின் அடிப்படையில் தலைவரதும் தியாகி திலீபனதும் தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையை நிறைவு செய்யும் வகையில் வன்னியில் போராளி மருத்துவர்களைக் கொண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவ மனை அமைக்கப்படுகிறது.

மருத்துவ மனையே இல்லாத போக்குவரத்து வசதிகளே இல்லாத பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவ மனை மக்களுக்கு இலவசமாக முழுமையான மிக நேர்த்தியான ஒரு மருத்துவ சேவையினை வழங்கியது.மக்கள் திருப்தியடைந்தனர்.

தொற்று நோய்களின் தாக்கத்தை குறைப்பதிலும் சமூகச் சுகாதாரச் சீர்கேடுகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் இந்த மருத்துவ மனை ஒரு திறவு கோலாக அமைந்தது.இதனால் விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு தனது மருத்துவப் போராளிகளைத் தரமுயர்த்திச் “சிறப்பு மருத்துவப் போராளிகளாக்கியது ” இந்த மருத்துவர்களைக் கொண்டு ஈழதேசமெங்கும் தம் திலீபன் மருத்துவ சேவையினை ஆரம்பித்தனர்.

இதற்கமைய வன்னியில் நைனாமடு கற்சிலை மடு அளம்பில் பாலமோட்டை மாங்குளம் ஐயன்கன் குளம் அடம்பன் பிரமந்தனாறு ஆழியவளை பூநகரி நெடுந்தீவு போன்ற இடங்களில் தியாக தீபம் திலீபன் மருத்துவ மனைகள் அமைக்கப்பட சிங்கள அரசின் மருந்தில்லாமல் மக்களைக் கொல்லும் சதித் திட்டம் தகர்ந்தது.2004இல் கிழக்கு மாகாணத்தின் மூதூர் பாட்டாளிபுரம் மட்டக்களப்பின் கதிரவெளி அம்பாறையின் கஞ்சிகுடிச்சாறு போன்ற இடங்களிலும் இந்த சேவை விஸ்தரிக்கப்பட அரச மருத்துவ மனைகள் பல நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஏனெனில் அனைத்து வசதிகளும் கூடிய மருத்துவ மனையில் பல மருத்துவர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு பணிபுரிந்தாலும் மக்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களால் சேவையினை வழங்க முடியாதிருந்தது.

ஆனால் திலீபன் மருத்துவமனைகளில் ஒரேயொரு போராளி மருத்துவர் 24மணி நேர சேவையில் இருந்தார் அத்துடன் ஒரு சில சுகாதார உத்தியோகத்தர்களுடன் நோயாளர் காவு வண்டியும் இருந்தது.

அவசர நிலைமைகளின் போது வைத்தியர் நோயாளியின் வீட்டுக்கே சென்று சிகிச்சையளித்து வைத்தியசாலைக்கு அழைத்து வரும் செயற்பாடு பாமர மக்களை நெகிழ வைத்தாலும் அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆச்சரியத்தில் உறைய வைத்தது இவ்வாறாகத் தான் நேசித்த மக்களுக்காக அற வழியில் போராடி உயிர் நீத்த திலீபன் தன் ஈடற்ற சிந்தனைகளின் பலனாக தான் நேசித்த மக்களின் நோய்க்கெல்லாம் மருந்தாக மாறி திலீபன் மருத்து சேவைகள் என்கின்ற பெயரில் நேற்றல்ல இன்றல்ல என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் ………