29.01.2009 வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்…!
தீயினில் எரியாத தீ ஒன்று வரலாற்றில் தீயுருவாய் நிலை கொண்ட நாள் ஜனவரி 29…

தீக் கடல் முத்துக் குளித்து எடுத்த முத்து இவன்! தூத்துக் குடி தந்த முத்து.. தமிழ் குடி காலம் தோறும் போற்றும் முத்து!
தமிழின தாகம் தீர்க்க தீயள்ளி குடித்த முத்துக் குமரன்…
தமிழன்னை ஏற்றி வைத்த இருள் தீர்த்த ஒளி முத்து!!!
எழுதி எழுதி சோர்ந்த தமிழின புரட்சியாளன் “எழுதியும் பேசியும் இனிப் பயன் இல்லை! எம் இனமானம் சிறக்க இனி புரட்சி ஒன்றே வழி” என எண்ணி தன்னையே தீயாக்கிய நாள்!!!
அறிஞன் இவன் பேச்சும் மூச்சும் தமிழன்னை போற்றியதே..
ஆரியமும் ஆங்கிலமும் பிடுங்கி தின்ற தமிழை மீட்டெடுக்க வழக்காக்கி வாயுரைத்து சுவைத்து மகிழ்ந்தாய்…மொழியிழந்த தமிழரை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் வாழ் நாளில் பணி செய்தாய்..
தேடல் இவன் அறிவுக்கு இரையாக்கிய நூல்கள் ஆயிரம்.. “நான் விரும்பும் நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்து என்னை சிறைப்படுத்தினாலும் நான் வருத்தப்பட மாட்டேன்” என்றவனே..
பல்லாயிரம் நூல் படித்து நீ தேடி தேடி கண்ட உண்மை எம் இனத்தின் இன்னல் தீர எம் தேசத்தின் விடுதலை ஒன்றே ஒற்றை வழி என்பதையே!
அறியவில்லையே இந்த மூடர் உலகம்!
வலிக்குதடா வலிக்கிறது.. அறிவும் உண்மையும் கொண்ட தமிழா உன்னை இழந்த இழப்பெண்ணி தமிழர் எம் மனம் மிகவும் மருகுகின்றது!
எடுத்த எந்த காரியத்தையும் நேர்த்தியாய் செய்தாய்…
கலைஞனாய்..
அறிஞனாய்..
உதவி இயக்குனராய்..
நடிகனாய்….
பத்திரிகையாளனாய்…
வடிவமைப்பாளனாய்…
உழைப்பாளியாய்…
நேர்மையானவனாய்..
உண்மையானவனாய்…
பல் துறை ஆற்றல் கொண்ட சகலகலாவல்லவனாய்…
பன்மொழி கற்றாய்…
ஆங்கில மொழி பெயர்ப்புகள் செய்தாய்…
தமிழ் மொழியில் சிறுகதை, கவிதை, கட்டுரை என
சிந்தை சிறக்க நிறையவே எழுதினாய்…
மொழி பற்று.. பொது உடமை உன் சிந்தை வீச்சு..
பொழுதெல்லாம் இனத்தின் விடிவே உன் பேச்சு..
எழுத்தை ஆயுதமாக்கி
சமநிலை உலக்குக்கு உழைக்க
பொழுதெல்லாம் உழைத்தாய்..
..
நீ வாழ்ந்த இடத்திலெல்லாம்..
உன்னோடு வாழ்ந்த மக்கள் மனங்களெல்லாம்
அழியாத தடம் பதித்தாய்..
“ஒரு சகோதரியை கரை சேர்த்திட்டேன்… ஓராயிரம் சகோதரிகள் இலங்கையில செத்து மடியிறாங்க. அவங்களை எல்லாம் கரை சேர்க்க எந்த தலைவர் வரப்போராறோ” சிந்தை சோர்ந்து வாடியவன் நீ.. .
எம் இனத்தின் வலி பொறுக்காமல் தீ வலி பொறுத்து போராடிய ஆண் தாய் நீ!
தமிழினம் விடுதலை பெற ஈகை சுடரான தீந்தமிழா…தீர்வை கொண்டு வர தீர்க்கமான முடிவென உன் முடிவெழுதி வைத்தவனே..
தோற்றுப் போன இந்திய இறையாண்மையை
சுட்டெரிக்க பிறந்த தீ!
உணராத் தமிழருக்கு உண்மைகளை சுட்டிக் காட்ட சுடர் விட்ட ஊழித் தீ!
தமிழ் இனத்தை கோர்த்தெடுத்து தமிழாரம் ஆக்கியது
முத்துக் குமரா நீ வளர்த்த தீ!
எம் இனம் வாழ உலகில் வாழும் எந்த தமிழனும் உயிர் கொடுப்பான் என்ற உண்மையை பதிய வைத்த உண்மை தமிழா…
உன் இறுதி எழுத்திலும்…
விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை…
நிதமும் நிதமும் கல்லறை செய்தாய் என் தமிழ் பூமியை
என ஆரம்பித்து உறங்கி கிடந்த தமிழரையும் இறந்து கிடந்த உலகையும் தட்டி எழுப்பிடும் நெருப்பு வரி மடல் படைத்தாய்….
இவன் மன அழுத்தத்தில் தீக்குளித்தான் என்பவன் முட்டாள்…
இவன் வரலாற்றை மாற்றி எழுத புரட்சி வளர்த்தான்
இவன் மரணத்திற்கு உளவியல் விளக்கம் சொல்ல முனையும்
மூடர்களே..
உண்மை தமிழன் என்ற உளவியல் ஒன்றே
இவன் எக்கைக்கு காரணம் என்பதை மட்டும் சொல்லுங்கள்!!
இவனுக்கு நிகர் இவன் மட்டுமே என்று சொல்லுங்கள்!
“ஈழம் எங்கள் உயிர்” என்று ஓங்கி ஒலித்தபடி
தீக்குளித்த தமிழர் உயிரே…
உன்னை நினைந்து வடியும் விழி நீர் கூட
நெருப்பாற்றில் குளிக்கிறதடா!!!!
சாவை கடந்து உன் அறிவால்
நீ இன்னும் சில காலம்
வாழ்ந்திருக்க கூடாதா?
உன் உண்மையான நேர்மையான தமிழ் உணர்வு
எம் விடுதலைக்கு
இன்னும் நெடும் காலம்
உரம் தந்திருக்கக் கூடாதா?
ஏங்கிச் சாகிறதடா எம் மூச்சு…
வாடிய பயிராய்
வதங்கி கிடந்த உன் கோலம்
இன்னமும் எம் நெஞ்சம் கொல்கிறது!
சாப்படுக்கையிலும் சாதி கேட்ட இழியர்க்கு
சாட்டையாய் பதில் சொன்னாய்…
தமிழ் சாதி நான் என்று!
சாதிப் பேய்க்கும் தீ வைத்து
தமிழரை மீட்டெடுத்தது உன் எரி பதில்!
உணருமா என் தமிழ் சாதி! திருந்துமா இனியேனும்????
பதினான்கு பக்க மரண அறிக்கை..
பதுக்கிட நினைத்தது காவல் துறை..
பிரதி எடுத்தது தமிழுலகு
அறிவு மதி கொண்டு நீ எடுத்த பிரதிகளை…
இன்றளவும் தமிழன் சோர்ந்து போகும் நேரமெல்லாம்
காலமிடும் கட்டளையை கடனென நினைவூட்டி
தமிழ் மாந்தர் நெஞ்சங்களுள் எழுச்சி மூட்டும்
நெருப்பு வரிகள் அவை…
ஒற்றை குடும்பத்தின் குமாரன் அல்ல
இவன் ஒட்டு மொத்த தமிழினத்தின் செல்வம்!
பயன்படாச் சாவு அல்ல இது…
பண்படா தமிழரை விழிக்க வாய்த்த சாவு இது!!!
என் இனமே உணர்வில் கொள்!
உணர்வை கொள்!
விதையாகிப் போன முத்தான எங்கள் முத்துக்குமரன் உயிரின் ஈகைக்கு உண்மையாக உழைக்கும் தீந்தமிழர் எல்லோரும் எம் இனத்தின் மொழியின் எம் தேசங்களின் விடுதலைக்காய் ஒன்று திரண்டு போராடுவது ஒன்றே உன்னதமான இந்த பெருமகன் ஈகைக்கு நாம் ஆற்ற முடிந்த ஒற்றை கடன்!!!!