துரோகியாக மடிந்த அமிர்தலிங்கத்தை தியாகியாக்கி ஈ.சரவணபவன்!
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் துரோகியாக மடிந்த அமிர்தலிங்கத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தியாகியாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சித்தலைவராகப்பதவி வகித்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் சிலை 18.03.18 திறந்து வைக்கப்படவுள்ளது.
எழுபதுகளின் ஆரம்பத்தில் யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்தமிழர்களால் துரோகியாகக்கருத்தப்பட்டார். சுதந்திரக்கட்சி ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அல்பிரட் துரையப்பா செயற்பட்டுவந்திருந்தார்.
அப்போது தமிழர்களின் பேராதரவு பெற்ற கடசியான தமிழர் விடுதலைக்கூட்டணி எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு வந்தது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பவர்களை துரோகிகள் என விமர்சித்து வந்தது தமிழர் விடுதலைக்கூட்டணி. தமிழர் விடுதலைக்கூட்டணியின் தளபதி அமிர்தலிங்கத்தின் உணர்ச்சிமயமான வீராவேசப்பேச்சுகளால் கவரப்பட்ட சிவகுமாரன் துரையப்பாவை கொலை செய்ய முயற்சித்தார். எனினும் அவரது எண்ணம் ஈடேறவில்லை.பின்னர் தமிழீழ தேசிய தலைவர் அமிர்தலிங்கத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார்.
தொடர்ந்து தமிழர் விடுதலைக்கூட்டணி அமிர்தலிங்கத்தின் தேர்தல் தொகுதியான வட்டுக்கோட்டையில் ஒன்று கூடி தமிழ் ஈழ தீர்மானத்தை நிறைவேற்றினர். தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் ஈழ தீர்மானத்தை நிறைவேற்றியதைத்தொடர்ந்து ஆயுதப்போராட்டம் தீவிரம் பெற்றது. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு கங்கணம் கட்டிய ஜே.ஆர். 1979ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழர்களின் தலைவர் என வர்ணிக்கப்பட்ட தளபதி எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களெவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி உட்பட எவரும் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.
காரணம் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்க மாட்டோம் என அமிர்தலிங்கம் ஏற்கனவே ஜே.ஆருக்கு வாக்குறுதி வழங்கி விட்டார். ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்த்து வாக்களித்தது. இடதுசாரிக்கட்சிகளும் இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் என்பன போராட்டங்களை மேற்கொண்டன. அருட்தந்தை போல் கஸ்பர் வீதியில் இறங்கி போராடினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்ப்புத்தெரிவித்து உரையாற்றிய ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான மைத்திரிபால சேனநாயக்க பின்வருமாறு கூறினார். இந்தச்சட்டம் வடபகுதியில் ஹிட்லரின் ஆட்சிக்கு வழி வகுக்கும் என்றார். அத்துடன் 1979 டிசம்பர் 31 க்கு முன்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு காலக்கெடு விதித்தது ஹிட்லர் யூதர்களை ஒழிப்பதற்கு காலக்கெடு விதித்ததற்கு ஒப்பானது எனவும் மைத்திரிபால சேனநாயக்க குறிப்பிட்டார். மைத்திரிபால சேனநாயக்க மேலும் தனதுரையில் இந்தச்சட்டம் வடமாகாணத்தை ஒரு பொலிஸ் மாநிலமாக மாற்றுமெனவும் கூறியதுடன் தமிழர்களின் பிரச்னைக்கு இராணுவரீதியில் தீர்வு காண முடியாது எனவும் கூறினார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என்று தெரிந்தும் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் அதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை.தமது பதவியிலேயே குறியாக இருந்தனர். நீங்கள் (தமிழர் விடுதலைக்கூட்டணியினர்) பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டால் நான் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீடிக்கிறேன் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் உங்களது எதிர்க்கட்சித்தலைவர் பதவி பறிபோய் விடும் என ஜே.ஆர். மிரட்டினார் அல்லது ஆசை வார்த்தை காட்டினார்.
தொடர்ந்து அடுத்த நாடாளுமன்றத்திலும் தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சித்தலைவர் பதவி தனக்கு கிடைக்கப்போகிறது என்பதை உணர்ந்த அமிர்தலிங்கம் தாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்க்க மாட்டோம் என ஜே.ஆருக்கு வாக்குறுதியளித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் அமுலுக்கு வந்ததைத்தொடர்ந்து பிரிகேடியர் வீரதுங்கவுக்கு விசேட அதிகாரங்களை வழங்கி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார். ஜே.ஆர். இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் உங்களுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நீங்கள் உங்களுக்கு தேவையான சகல வளங்களையும் பாவித்து குறிப்பாக யாழ் மாவட்டத்திலிருந்து 1979 டிசெம்பருக்கு முன்னர் பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என ஜே.ஆர். பிரிகேடியர் வீரதுங்கவுக்கு ஆணையிட்டார். பிரிகேடியர் வீரதுங்க யாழ் மாவட்ட இராணுவத்தளபதியாக பதவியேற்றத்தைத்தொடர்ந்து இன்பம் , செல்வம் உட்பட பதினைந்து இளைஞர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட இளைஞர்களின் சடலங்கள் பண்ணை கடற்கரையிலும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பாகங்களிலும் கண்டெடுக்கப்பட்டன. சடலமாக மீட்கப்பட்ட உடல்களில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்களும் காணப்பட்டன. . இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவாதிக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் அமிர்தலிங்கம் வடகிழக்கிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
1979ம் ஆடு ஜூலை 14இ15ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டபின்னர் ஜூலை 24ம் திகதி அமிர்தலிங்கம் ஜே.ஆருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக்கடிதத்தில் பின்வருமாறு அமிர்தலிங்கம் எழுதினார் அமிர்தலிங்கத்தின் வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன் ( ( I never expect this to happen. we agreed certain measures. but what happened was bit extreme)
பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயகத்தை குழி தோண்டிப்புதைப்பதற்கான ஒரு சட்டம் .அத்துடன் இது தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டம் என்று தெரிந்திருந்தும் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காமல் விட்டதன் மூலம் தனது வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி விட்டது என சிங்கள ஊடகவியலாளர்கள் அப்போதே கட்டுரைகளை வரைந்திருந்தனர்.
இன்று வரை தமிழ் இளைஞர்கள் காலவரையறையின்றி சிறைகளில் வாடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்.
கடந்த இருபத்தொன்பது வருடங்களாக வடகிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமலாக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டதற்கும் சித்திரவதை செய்யப்பட்டதற்கும் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தமைக்கும் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒரு காரணம். துரையப்பாவின் துரதிரஸ்டம் வரலாற்றில் அவரது பெயர் துரோகி என பதிவு செய்யப்பட்டு விட்டது. தமிழர்களின் அழிவுக்கு உடந்தையாக இருந்த அமிர்தலிங்கத்தின் பெயர் இப்போது ஈ.சரவணபவன் போன்றவர்களது புண்ணியத்தில் தியாகிகள் பட்டியலில் இடம் பெற்று விட்டதென ந.பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.