“தேசத்தின் கலைஞன்” சாந்தன்…!

அது ‘ஜெயசிக்குறு’ படைநடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த காலம். மாங்குளம் பகுதியில் முன்னணிக் காப்பரண் வரிசையில் கடுமையான சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரம். முன்னணியில் உள்ள போராளிகளுக்கான தமிழீழ இசைக்குழுவின் நிகழ்வொன்று கிழவன்குளம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்விற்கு பாடகர் சாந்தனும் வரவிருப்பது போராளிகளுக்கு மிகுந்த ஆர்வத்தையும் மகிழ்வையும் ஏற்படுத்தியிருந்தது. நிகழ்வு தொடக்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சாந்தனின் முறை… நெஞ்சத்தை உருகவைக்கும் மாவீரர் கானம்..பாடல் முடிந்ததும் ஒரு நீண்ட நிசப்தம்…பாடலின் தாக்கம் ஒவ்வரு போராளியின் உள்ளத்திலும் உணர்வலைகளை பொங்கச் செய்துகொண்டிருந்தது.

அப்போது நிகழ்ச்சி அறிவிப்பாளர் அந்த செய்தியை கூறினார்…..

‘பாடகர் சாந்தன் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என நாங்கள் நினைக்கவில்லை.. ஆனால் இது களமுனைப் போராளிகளுக்கான நிகழ்ச்சி என்பதால் தான் அவசியம் வரவேண்டும் என கூறி சாந்தன் வந்தார். அவருடைய மகன்( இரண்டாம் லெப்டினன்ட் கானகன்) சிலநாட்களுக்கு முன்னர்தான் இதே மாங்குளம் களமுனையில் வீரச்சாவடைந்திருந்தார். இந்த நிலையில் நாங்கள் அவரை அழைத்துவர எண்ணவில்லை…’

போராளிகளின் மனதில், கண்ணீர் வடியும் அந்த மனிதனின் முகம் அழப் பதிந்து போனது.

அடுத்து வந்த பாடல்களில் சாந்தனின் கம்பீரக் குரல் துள்ளல் இசையுடன் வீரர்களின் நரம்புகளில் புதுக் குருதி பாய்ச்சி நின்றது…எப்படி முடிகிறது….இந்த மனிதனால்..

இந்த தேசத்தின் விடுதலைப்போரில் போரிட்டு மடிந்த இரு மாவீரர்களின் தந்தை( கானகன்,இசையரசன்)
தேசத்தை,போராளிகளை நேசித்த விலைபோகாத எம் தேசத்தின் கலைஞன்…சாந்தன்..

(தமிழன் வன்னிமகன்)