தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

தமிழக அரசு தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சிவில் சமூக அமையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஈழத் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தோழர். திருமுருகன் காந்தி அவர்களும் மற்றும் இன்ன பிற மே 17 இயக்க தோழர்களும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பிலான நினைவேந்தலை ஒழுங்கு செய்தமை தொடர்பில் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தமிழக அரசால் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் ஆழ்ந்த கரிசனை கொள்கின்றோம்.

ஈழத் தமிழர்கள் தொடர்பில் குரல் கொடுத்து வரும் தமிழகம் சார்ந்த முக்கிய சமூக இயக்கங்களில் மே 17 இயக்கம் தலையையானது. மே 17 இயக்கத்தினர் எம்மவர்களின் அரசியல் விடுதலை, நீதிக்கான போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பு செய்து வருகின்றமை மட்டுமல்லாது தமிழகத்தின் சமூகப் பிரச்சனைகளில் பல முற்போக்கான நிலைப்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமானவர்களும் பங்காளிகளும் ஆவார்கள்.

ஈழத்தில் தமிழர்களின் நினைவு கூறும் உரிமைக்காக இலங்கை காவல் துறையினரின், இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக நாம் இலங்கையின் நீதிமன்றங்களிலும் மக்கள் போராட்டங்கள் மூலமாகவும் போராட வேண்டியிருக்க ஈழத் தமிழர்களின் நினைவாக தமிழர்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழக அரசு தமிழக மண்ணில் ஈழத் தமிழர்கள்  மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூறுவதற்குத்  தடை விதிப்பதும் ஏற்பாட்டாளர்களை கைது செய்து அடைத்து வைத்திருப்பதும் பெரும் மன வேதனையையும் சோர்வையும் தருகின்றது.

உடனடியாக  நினைவேந்தலை ஒழுங்கு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஈழத் தமிழ் சமூக செயற்பாட்டாளர்களின் சார்பில் நாம் தமிழக அரசை வேண்டுகிறோம்.

குமாரவடிவேல் குருபரன் மற்றும் எழில் ராஜன்
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்
இலங்கை