நத்தார் தினத்தில் வன்னி மண்ணும் புலிகளின் தலைமையும்….

 வன்னி மண்ணும் புலிகளின் தலைமையும் இன்றைய நத்தார் தினத்தை நினைப்பது இன்றைய நாட்களின் நினைவுகள்.. உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்..

மறக்க முடியாத அந்த கிறிஸ்த்துமஸ் கொண்டாட்டம்.!

1989 இன் நடுப்பகுதியில் மணலாற்றுக் காட்டில் இருந்து தமிழ்நாட்டில் குடும்பத்தினரோடு வாழந்து கொண்டிருந்த எனக்கு உடனடியாக புறப்பட்டு வருமாறு கூறி தலைவரின் அழைப்பு வந்து சேர்ந்தது. படகேறி கடல்வழியாக தமிழீழத்தின் செம்மலைப் பகுதியை சென்றடைந்து கடற்கரையிலிருந்து கானகத்தினூடாக தம்பிமார் என்னை தலைவர் இருந்த புனிதபூமிக்கு அழைத்துச் சென்றார்கள்.

இந்தியப்படைகள தலைவரைப் பிடிப்பதற்காக அல்லது கொன்றுவிடுவதற்காக 87 அக்தோபர் 10 ஆம் திகதி யாழ் மருத்துவ பீட வளாகத்தில் உலங்குவானூர்திகள் மூலம் சீக்கியப்படைகள் தரையிறக்கப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் பிரகடனம் செய்யப்பட்ட அனறு கடைசியாக சந்தித்ததன்பின் கானகத்தில் சந்தித்தபோது எனது மனம் நிறைவடைந்தது.இரண்டொரு நாட்கள் ஓய்வின்பின் எனக்கான பணி தலைவரால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.பெண்போராளிகளுக்கு தட்டெழுத்துப் பயிற்சி வழங்குவதே எனது பணி.

புனித பூமியில் வாழ்ந்த அந்த இனிய நாட்களை அங்கு வாழ்நத யாரும் என்றுமே மறக்க மாட்டார்கள். நத்தார், தைப்பொங்கல் தினங்களை போராளிகள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆண்கள் முகாமுக்கு அண்மையிலேயே பெண் போராளிகளின் முகாமும் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் அமைக்கப்பட்டிருந்தது.

நத்தார் தினத்தன்று பெண் போராளிகளின் முகாமில் கிறீஸ்தவ பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.சிறிது நேரத்தில் தலைவர் முன்னேவர அவரின் பின்னால் நத்தார் பப்பாவும் பெண் போராளிகளும் ஆடல் பாடலோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார்கள்.அன்றைய நாள் பூராவும் ஒரே கொண்டாட்டம்தான்.

அன்று இரவு போராளிகளைப் பயிற்றுவித்து என்னால் இயக்கப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டது.அந்த முகாம்களில் அன்று எம்மோடு வாழ்ந்த பலர் மாவீரர் வரிசையில் சேர்ந்து கொண்டுவிட்டார்கள்.எஞ்சி உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் போன்ற சிலரும் நாடு நாடாக அகதிகளாக மறக்க முடியாத அந்த நினைவுகளோடு……….

Tamil Elim 01 Tamil Elim 02 Tamil Elim

(www.eelamalar.com)