சில நினைவுகள் நம் வாழ்நாளில் மறக்க முடியாததாக மாறிவிடும். வற்றாது எமது வன்மம்!
சில நினைவுகள் நம் வாழ்நாளில் மறக்க முடியாததாக மாறிவிடும். பிஸ்கெட் சாப்பிட்டபடி அமர்ந்து வெறித்து பார்க்கும் பாலச்சந்திரனின் கண்கள்.. முத்துகுமாரின் கடிதம்.. கர்ப்பிணி தாயின் வயிறு கிழிந்து வெளியே தொங்கும் சிசுவின் கால்பாதங்கள் என்று மங்காத சில நினைவுகள் எனக்குண்டு.
அதில் ஒன்று மே 19 அன்று வெளியான தினத்தந்தியின் இந்த முதல் பக்கம். முதல் பக்கத்தில் இரண்டே இரண்டு முக்கியச்செய்திகள் இடம்பெற்றிருந்தன. இரண்டுமே தமிழினத்திற்கு மறக்க முடியாத செய்திகள்.
பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தளபதிகளின் வீர மரணத்தை சொல்லும் செய்தி தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருந்தது. முள்ளிவாய்க்காலில் ஒரு இனத்தின் பெரும் கனவு கலைக்கப்பட்ட செய்தி அது.
அதற்கு கீழ் ஒரு செய்தி இருக்கிறது. அது அந்த இனத்தின் பெரும்கனவு கலைக்கப்பட துணை நின்றதற்காக கிடைக்கப்போகும் எலும்பு துண்டை பொறுக்க குடும்பத்துடன் டெல்லி சென்ற ஒரு ஈனத்தலைவனின் பதவிவெறி பற்றிய செய்தி. ஆளும் கட்சிக்கு ஏற்ப மாறிக் கொள்வதுதான் தினத்தந்தியின் பாலிஸி என்று பொதுவாக தினத்தந்தி குறித்து சொல்வார்கள்.
ஆனால் தமிழின வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் இவ்விரு செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிட்டதற்கு அப்போதைய தினத்தந்தியின் செய்தி ஆசிரியரின் மன உணர்வுகள் முக்கிய காரணமாக இருக்கும். ஒரு இனம் அழிக்கப்பட்டு நிற்கும்போது பதவிவெறிக் கொண்டு டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியை அம்பலப்படுத்த தனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த செய்தியை முதல் பக்கத்தில் பயன்படுத்தியிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தினத்தந்தியின் இந்த முதல் பக்கம் ஒரு வரலாற்றுச்சுவடு.
ஆண்டுகள் கடந்துவிட்டால் கருணாவின் கண்ணீர் நாடகங்கள் எல்லாம் மறந்துபோகுமா என்ன. என்ன செய்தாவது போரை நிறுத்திவிட முடியாதா என்று ஒவ்வொருவரும் ஏங்கி தவித்தபோது, கண்ணீர் அஞ்சலி.. மனிதசங்கிலி என்றெல்லாம் நடித்துப் பார்த்தும் முடியாமல் முதுகுவலி என்று மருத்துவமனைக்குள் ஓடி ஒளிந்து கொண்ட கபட நாடக நயவஞ்சகர் கருணா அவர்களே.. கவலைப்படாதீர்கள்.. உங்களை அத்தனை எளிதில் தமிழர்கள் நாங்கள் மறந்துவிடமாட்டோம்.
எந்த நாற்காலிக்காக எமது இனத்தை பலி கொடுத்தீர்களோ.. அந்த நாற்காலி உமக்கு எத்தனை கடைசித் தேர்தல் வந்தாலும் கனவாகவே போகும். பலரும் என்னை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டு கருணாநிதியை அதிகம் விமர்சிக்கிறேன் என்பது. உண்மைதான்.. நள்ளிரவு இரண்டு மணிக்கு மூலகொத்தளம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தபோது எடுத்த முடிவு அது. என் கோடுகள் இருக்கும் வரை வற்றாது அந்த வன்மம்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா