நியாயம் தேடும் தமிழீழப் பெண்கள் வாழ்வு . உலகப் பெண்கள் நாளில் ஓர் பார்வை

வேலைக்கான நேரக் குறைப்பு ,ஆண்களுக்கு சமமான ஊதியக் கொடுப்பனவு ,வாக்குரிமை போன்ற பிரதான காரணிகளை முன்னிறுத்தி புரட்சிகர எழுர்ச்சியின் உந்துதலால் உலகில் நிறுவப்பட்டதும் ,அனைத்து நாடுகளின் அங்கீகாரம் கிடைத்ததுமான ,அனைத்துலகப் பெண்கள் நாளிலே உணர்வுகளாலும் ,உரிமைகளாலும் மறுக்கப்பட்டு ,இருள் சூழ்ந்த வாழ்வுக்குள் முடங்கியபடி ,அடிப்படை மனித வாழ்வுக்கே நியாயம் எனும் தூய ஒளிதேடும் தமிழீழப் பெண்களின் வாழ்வு பற்றிய ஓர் பார்வை சமகாலத்தில் சாலப் பொருத்தமாதலால் இக்கட்டுரை வீச்சுக் கொள்கிறது . ஃதமிழீழத் தனியரசை நிறுவுதல் எனும் பாதையில் அத்தூய இலட்சியத்தை சோரம்போகவிடாது, மாறிவந்த காலங்கள் ஒவ்வொன்றும் கையளித்த கடமைகளை சுமந்தபடி ,சவால்களும் ,துன்பங்களும் ,இடர்பாடுகளும் இயங்கு விசைக்கு தடையாக குறுக்கிட்ட போதிலும் ,அவற்றை இலட்சிய மையங்கள் கரைந்து போகாமல் ,ஆண்களுக்கு சமனாக பெண்களும் தாங்கு சக்தியாக ,சரித்திர நாயகிகளாக நிமிர்ந்து நின்ற பெருமைமிகு அடையாளங்களின் பார்வை உலகையே வியக்க வைத்தது . பெண்மை மென்மையானவள் எனும் பழமைவாத ங்களைத் தோற்கடித்து ,புதிய புரட்சியாளர்களாக நிமிர்வு பெற்ற பெண்களின் வாழ்வு ,தமிழீழ மண்ணில் பல வரலாற்றுச் சாதனைகளை பதிவுசெய்து ,மூடனம்பிக் கைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த குறுகிய வட்டச் சிந்தனைகளை தகர்த்தெறிந்து ,தாயக விடுதலையும் அதனுடன் பெண்விடுதலையும் ஒன்றித்த இலட்சியத்தோடு புலரும் திசை நோக்கி நிமிர்ந்து நடந்தார்கள்.

உலகின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புரட்சிப் பெண்களுடன் ,அல்லது அதற்கும் மேலான நிலையில் ஒப்பீடு செய்யும் அளவுக்கு பெண்களின் தனித்துவம் தமிழீழ மண்ணில் மேன்மை பெற்றது .இம்மேன்மைக்கான திறவுகோலாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே .பிரபாகரன் அவர்களின் தலைமையிலான சுதந்திரப் போராட்ட காலமே அமையப்பெற்றது. அது பெண்களின் தனித்துவங்களை நிலைநாடும் ஒரு பொற்காலமாகவே திகழ்ந்தது .சுதந்திரமான நடமாட்டம் தொடக்கம், வகைசொல்லல், தீர்மானித்தல், நடைமுறைப்படுத்தல், நிர்வகித்தல், படை நடத்தலென பன்முக ஆளுமைகளை ஆய்வு ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் ஆணுக்குப் பெண் சமனாக துலங்கிய காலமாக அமைகிறது.

இவை அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டபடி 2009ல் முள்ளி வாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் அமைதி கொண்டபோது ,மீண்டும் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனமும் சிங்களப் பேரினவாதத்தால் அடிமை கொள்ளப்பட்டது .உலக வல்லாதிக்க வல்லரசுகளின் படைக்கல ஆதரவுகளோடு தோற்க்கடிக்கப்பட்ட எம்மினத்தின் போர்முறமைகளோடு, தமிழீழப் பெண்களின் தனித்துவங்களும் தோற்கடிக்கப்பட்டு அடிமை கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிடப்பட்ட போரின் அழிவுச் சாட்சிகளுள் பூக்களும், பிஞ்சுகளும், இளையோரும், முதியோருமாக பலதரப்பட்டோரும் உள்ளடங்கினர். பிரதானமாக கணவனை இழந்து நிற்கும் விதவைப் பெண்களின் கண்ணீரின் கனதி தமிழர் தாயகப் பகுதியான வட -கிழக்கின் பெரும்பாலான வாசல்கள் எங்கும் சிதறியே கிடக்கின்றது. கணவனை இழந்தபின் குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமைதாங்கியாக மாறும் பெண்களில் பலர் அனுபவ முதிர்ச்சியோ, பட்டறிவோ இல்லாத இளவயதினராக உள்ளனர். குடும்பச் சுமைக்கான பொருளாதார நிலையினை திட்டமிட்டு முன்னெடுத்து நாளாந்த ஜீவனோபாயத்தை நிவர்த்தி செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.

முன்னைநாள் போராளிகளாக இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும், கைது செய்யப்பட்டும், புனர்வாழ்வு எனும் பெயரில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியும், மனங்கள் நிறைந்த வேதனைகளைத் தாங்கியும், சற்றேனும் மனவிருப்பற்ற அரைகுறைத் தீர்வுகளை திணிப்பின் மூலம் ஏற்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் மறைமுகமான ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களின் மிரட்டலும், கண்காணிப்பும், கட்டாய இராணுவப் பணிக்கு நிர்ப்பந்திப்பதும், பாலியல் இச்சைகளுக்கு தூண்டலுமான மிகக் கொடிய செயல்கள் தம் சொந்த மண்ணின் மடியிலேயே நிகழ்வதானது, உலகின் மனித நேயர்களுக்கும் ,பண்பாளர்களுக்கும் ஏனோ துலங்கவில்லை .

இக்கொடிய துன்பங்களோடு வாழ்ந்துவரும் பெண்களின் அமைதியை வெறுமனே பலவீனமாகக் கருதி அவர்களை இலகுவாக தமது குறுக்குவழி சம்பாத்தியங்களுக்கு பயன்படுத்த எத்தனிக்கும் சிங்களப் பேரினவாதிகளின் குரூரமான எண்ணங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தமக்கான அச்சமற்ற இயல்பான வாழ்வுக்கும் ,தாம் பெற்றெடுத்த பிள்ளைகளின் விருப்புக்களை ஈடு செய்யும் சாதகமான நிலைக்குமான நியாயங்கள் உலகப் பரப்பில் வாழும் நியாயாதிகளினுடாக பெறவே துடிக்கின்றனர்.

காணாமல் போகச் செய்யப்பட்டோரின் தொடர்பை ஏற்ப்படுத்தலாமெனவும், அதற்காக பெருந்தொகை பணம் தேவைப்படுமெனவும் கூறி பாதிப்புற்ற பெண்களை மேலும் ஏமாற்றி அவர்களிடம் இருக்கும் சொற்ப பொருளாதாரங்க ளையும் சுரண்டும் கேடுகெட்ட செயலுக்கு ,தமிழ்த் தாயின் வயிற்றில்ப் பிறந்து எதிரிக்குத் துணை நிற்கும் ஒட்டுக் குழுக்களும் காரணமாகி நிர்ப்பதானது எக்காலத்திலும் மன்னிக்க முடியாத குற்றமாகவே பெண்களாகிய நாம் பதிவு செய்கின்றோம்.

காணாமல்ப் போகச் செய்யப்பட்டோர் இறந்துவிட்டதாகக் கூறி மரணச் சான்றினையும் ,அத்துடன் மரணக் கொடுப்பனவாக தலா ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபா பணத்தினையும் வழங்கிவிட்டால், எல்லாவற்றையும் மறைத்துவிடலாமென ஸ்ரீலங்கா அரசினால் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தினை ஏற்க மறுக்கும் பெண்கள் ,தம்முன்னே ஒப்படைக்கப்பட்ட, சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட குடும்பத் தலைவர்களின் விடுதலையே வேண்டுமென உறுதிபடக் கூறி முன்னெடுத்துவரும் ,நியாயம்தேடும் ஜனநாயக வழிமுறைப் போர்களை இன்னும் ஸ்ரீலங்கா அரசானது திட்டமிட்டுப் புறக்கணித்தே வருகின்றது.

சிறையிலிருந்து மீண்டுவரும் பெண்களை சொந்தச் சமூகம் 2ம் ,3ம் தர நிலையில் வைத்துப் பார்ப்பதும், கருத்துச் சுதந்திர நுழைவாயிலுக்குள் செல்லவிடாது தடுப்பதும், தொழில்சார் பயிற்ச்சி நிலையங்களிலோ, தொழில் மையங்களிலோ உள்வாங்கப் பின்னிற்பது, அவதூறான வார்த்தைப் பிரயோகங்களால் மனங்களைப் புண்படுத்துவது போன்ற அறியாமையின் புத்திகளுக்கும் நல்லறிவு எனும் நியாயத்தையும் சேர்த்தே தேடவேண்டிய நிலையுள்ளது. எமதருமைச் சொந்தங்களே! புலம்பெயர் தேச உறவுகளே! உலக மனிதநேய வல்லுனர்களே! பெண்விடுதலை பற்றி பறைசாற்றும் பண்பாளர்களே! எம்மினப் பெண்களின் ,குறிப்பாக தாயக வாழ் தமிழ்ப் பெண்களின் நியாயத் தேடலுக்கு துணைபுரியுங்கள்.கிடைக்கும் நியாயம் உலகில் சிறகடிக்கும் ஏனைய சுதந்திரப் பெண்களின் வாழ்வோடு சமநிலை பெற்று மிளிரட்டும் .