நிலம் விடுவாய் நீயே…!

முள்ளிவாய்க்காலில் நாம்
அடைந்த அடைவுகள்
இன்னும் முடிந்தபாடில்லை.
மௌனித்துவிட்டோம் என்பதற்காக
எம் மீது காலூன்றி
நடந்து கொண்டிருக்கும்
கொழுப்பெடுத்த கொழும்பு
நகருக்கு எப்படி இது தெரியும்?

சொல்ல முடியா வேதனைகள்
எத்தனை எத்தனை
காணாமல் போன என் உற்றவர்கள்
மீளவே முடியாத என் உறவுகளின்
உயிரணுக்கள்
இன்னும் சிந்தி முடியாத
என் இனத்தின் குருதிச் சத்தங்கள்
ஆயிரம் ஆயிரம்
அடையாளங்கள் இன்னும்
எங்கள் வீதிகள் எங்கும்
குவிந்து கிடக்கிறது

வரிப்புலி வாசம் தொலைத்து
வரும் நெருப்புக் காற்று
எங்கள் வாசல்களை
தொட்டுச் செல்லும் போது
சொல்லாத துன்பமெல்லாம்
சேர்ந்து அழுத்துதையோ

நிமிர்ந்து நிற்க கூரையில்லை
நாடில்லை நிழல் இல்லை
நலிந்து போன எமக்கு
வாழ்ந்து விட வாழ்வில்லை
வீதியிலே கிடக்கின்றோம்
கிழக்கு வானச் சூரியனும்
எம்மூரைத் தேடவில்லை
ஆனால்
நல்லாட்சி நடக்குதெண்டு
ஊர்க்குருவி கத்துதையோ…..

மஞ்சள் பூசி
வெண்ணிற வேட்டி கட்டி,
தமிழ் மகள் போல் சேலை கட்டி
மாங்கல்யம் குங்குமமிட்டு
பெண்ணைத் துணையாக்கி
நானும் “திமிலன்” என
சொல்ல நினைக்கும்
வெள்ளை வேட்டி கட்டிய
வெக்கங் கெட்டவர்களே
கொஞ்சம் குனிந்து பாருங்கள்
உங்கள் கால்களைக்கிடையில்
மிதிபட்டுக் கொண்டிருக்கும்
நாங்கள் தான் தமிழர்.
நீங்களல்ல…

எம் பிள்ளைகளை கொன்றுவிட்டு
அள்ளி அள்ளி எங்கள் செல்வங்களை
எடுத்து பதுக்கிவிட்டு
ஆடம்பரமாய் உன் மகன்
பெண்ணோடு இணைந்தால்
நீ நாம் ஆகிவிட முடியாது காண்
ஏய் சிவப்புத் துண்டு கழுத்தில் போட்டவனே
சீனாக்காற சீமாட்டி சொன்னாளா
தமிழ்முறையில் தாலி கட்டு என்று
அல்லது
ஊர் சுற்றிச் சுற்றி காசு முழுக்க
காறி உமிழும் மோட்டு,
சீ சீ மோடி ராசா சொன்னாரா
இந்து முறையில் நீ தீயை
வலம் வந்திடு என்று தமிழனாவாய் என்று

மும் மதமும் சம்மதமோ உனக்கு?
முற்ற முதல் பிஞ்சுகளின்
இரத்தம் குடித்த பிசாசே
உன் மூஞ்சையிலே தெரிவது
ஒற்றைத் திமிரின் குறியோ?
அதனால் தான் எமக்கு இன்று
ஒற்றைச்சேலை வீதியோர
மரத்தில் கட்டப்பட்டு ஏணையாகிவிட்டது
கட்ட வேற துணியுமற்று
பிச்சுப் போட்ட பூவாக
எங்கள் தாய் நிலம் கிடக்கிறது

திட்டமிட்டுக் குந்தியுள்ள
மந்திகளே சென்று நீங்கள்
உங்கள் ஊரில் அமருங்கள்
சொந்த நிலம் எமக்கு வேண்டும்
சோறு பொங்கி உண்ண வேண்டும்
சுகமாய் என் பிள்ளை வாழ வேண்டும்
காணாமல் ஆக்கி விட்ட
என் கணவன் எனக்கு வேண்டும்

நாட்கள் மூவாயிரத்து அறுநூறைத்
தாண்டப் போகுதையோ
நடைப்பிண வாழ்வுக்கு
விடிவு என்றாவது வருமோ
எங்கள்
காணிக்குள் நாம் செல்லாமோ
எம் வீட்டை நாமே ஆளலாமோ
வானத்தை நோக்கி அழுகின்றோம்
கடவுளே
வழி எமக்கென்று வருமோ

தேம்பி அழும் எமக்கு
வாழ்வென்றும் வீதியோ
பச்சை உடை நாற்றத்தை
நுகர்வது தான் எம் விதியோ…..ச

வில்லங்கம் செய்கின்ற
அந்நியன் தொலையும் நாள் எதுவோ
நாட்காட்டி இல்லாமல்
நாட்கள் கழிவது முறையோ
செல்லடித்த ஊருக்குள்ளே
செல்லாய் அரிக்கும் பகையே
புல் முளைக்க வேண்டும் இங்கு
நிலம் விடுவாய் நீயே

சொல்லத் தான் முடியவில்லை
நாங்கள் படும் துயரம்
நாட்கள் சென்று தொலையுதில்லை
விடிவு பற்ற எம் நிலத்தை

போரடித்து ஆண்ட மண் 
வீறிட்டு வாழ்கிறதே
ஏர் பிடித்த கைகளுக்கு
விலங்கிட்டு மகிழ்கிறதே
சேறு பட்ட துணிகளெங்கும்
நாறி உயிர் குடிக்கிறதே
நஞ்சை உண்டு வாழ்வதற்கும்
வழி இன்றித் தவிக்கிறதே

வெட்டை வெளி தேசத்திலே
பட்ட மரமாய் நாங்கள்
பாய் போட்டு படுத்திருக்க
தெட்டத் தெளிவாய் என் வீட்டில்
நீ வந்து குடியிருக்க
எங்கள்
பெட்டை பெடி எல்லாமே
ரோட்டில் தானே தூங்குகிறார்

ஏனடா பகையே உனக்கு
இந்தப் பிடிவாதம்
என் வீட்டை நான் கேட்கின்றேன்
முறைத்துப் பார்க்க உரித்து
யார் தந்தார்?
சொந்தமில்லை நீ எனக்கு
சொத்தில் மட்டும் பங்கெதுக்கு
பங்கம் வர முன்னம் நீயாய்
தந்து விடு நான் வாழ்வதற்கு

பிஞ்சிலையே மரங்களையெல்லாம்
பறித்தெடுத்து சாய்த்து விட்டாய்
மிஞ்சிய எம்மை
கொஞ்சம் வாழ விட்டுவிடேன்
கெஞ்சிப் பார்த்துவிட்டோம்
மிஞ்ச நீ விட்டிடாதே…
வேலாயுதம் பள்ளியின்
பழைய சோறும் விளக்குமாறும்
நினைவிருந்து தொலையாது என்றும் உனக்கு…

இ.இ.கவிமகன்
31.01.2019