நீலக்கடலில் கடற்புலிகள் உடன் புலிகளின் தலைவர்
கடற்புலிகளின் வளர்ச்சியை நினைத்துப்பார்க்கிறேன்.
அன்று : எதிரியின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகத் தம் படகுகளின் வேகத்தைக் கூட்டவேண்டியவர்களாக இருந்தனர்; ஆனால்
இன்று : தப்பியோடும் எதிரியைத் துரத்தித் தாக்குவதற்காக எமது வேகப் படகுகளின் வேகத்தைக் கூட்ட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
அடக்கியாள நினைத்த சிங்களப் பேரினவாதத்திற்குக் கெதிராக எம் முன்னைய அரசியற் தலைவர்கள் அகிம்சை முறையில் தம் எதிர்ப்புகளைக் காட்டிய போதெல்லாம் வன்முறை கொண்டு அவற்றை முறியடித்து வந்தவேளையில், குட்டக்குட்டக் குனிவது முறையல்ல. ஊனுக்கு ஊன் எனும் பழமொழிக்கேற்ப வன்முறையில் எம்மை அடக்கிய சிங்களப் பேரினவாதத்தை அவ்வன்முறை மூலமே வெல்ல வேண்டுமென வன்முறைப் போராட்டங்கள் தோன்றிய வேளையில் அதில் ஒன்றாக ஆரம்பித்ததே விடுதலைப் புலிகள் இயக்கம்.
இவ்வமைப்பு அதன் தலைவரின் தீர்க்கதரிசனப் பார்வையாலும், தொலைநோக்குக் கண்ணோட்டத்தாலும், கொண்ட கொள்கையிலிருந்து வழுவிடாத கொள்கைப்பற்றாலும் பல இளைஞர்களைத் தன்னகத்தே கொண்டு வளர்ந்தது. எந்தவொரு நாட்டின் பலமும் அதன் கடற்படையின் வலிமையிற் தங்கியிருக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்ட அவரால் தோற்றுவிக்கப்பட்டதே கடற்புலிகள் அமைப்பு. விடுதலைப் போராட்ட அணிகளிலேயே கடற்படையைக் கொண்ட அமைப்பு என வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப் படுவதிலிருந்தும் தலைவரின் தூரநோக்கின் தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும்.
இப்படி உருவான கடற்புலிகள் அமைப்பு தன் கடந்த காலங்களில் பல வேதனைகளையும், சாதனைகளையும் தாங்கி இன்று விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் என்று தமிழீழத் தேசியத் தலைவரால் பாராட்டப்படக்கூடிய நிலையில் வளர்ந்து நிற்கின்றது. இந்நிலையில் இந்த அமைப்பின் வரலாறு பற்றி அதாவது கடந்து வந்த பாதையில் இவர்கள் சந்தித்த இழப்புக்கள், இவ் இழப்புகளின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள், தம் மக்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தம் உயிரைத் துச்சமெனக் கருதிப் போரிட்டு வீரகாவியமான மாவீரர்கள், ஏன் ஒரு பிடி மண்கூட எமக்கெனக் கேளோம் என்று உரைத்துச்சென்று தம்மை ஆகுதி ஆக்கிய கடற்கருவேங்கைகள் என்று விரிந்து செல்லும் இவர்களின் அணையாத தாகத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் வரலாற்றை “நீலக்கடலில் கடற்புலிகள்” எனத் தொகுப்பது சாலச்சிறந்ததாகும் என்ற நோக்கில் தேசக்காற்றில் பல அத்தியாகங்களாக பதிந்து செல்ல எத்தனித்துள்ளோம். இது கடற்புறா என்ற பெயரில் தொடங்கிய காலத்திலிருந்து 02.10.1995 காலப்பகுதி வரையான சம்பவங்களை தாங்கி எழுத்துருவில் வடிக்கின்றோம்.
இதுவரை கடலிலும், தரையிலும் என வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்துக் கடற்புலி மாவீரருக்கும் இவ் வரலாற்று காவியத்தை சமர்ப்பணமாக்கி பல அத்தியாகங்களாக பதிந்து தொடர்கின்றோம்.
எழுத்துருவில் என்றும் அ.ம.இசைவழுதி.