பயங்கரவாதமல்ல விடிவிற்கான பயணம்…!

சர்வதேச அரசியல் என்பது தேசங்களின் அரசியல், இராணுவ, பொருளாதார, புவிசார் கோட்பாடுகளின் பிரதிபலிப்புக்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நியதியாகிவிட்டது. இங்கு நியாயபூர்வமான எதிர்பார்ப்புகளுக்கும், நீதியான அமைவுகளுக்கும் இடம் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நடவடிக்கை மூலம், அமெரிக்கா இந்த உலகப் பொது விதியை மீள ஒருமுறை நிருபித்துள்ளது. தென்னாசியப் புராந்தியத்தில் தாம் வகுத்துக்கொள்ள விழையும் பனிப்போருக்கு பிற்பட்ட காலத்திற்குரிய வெளிவிவகார கொள்கைகளின் வெளிப்பாடாகவே அல்லது தவறான கோட்பாட்டு முன்னுரிமை சார்ந்தோ அமேரிக்கா இம் முடிவினை எடுத்துள்ளது. ஆயினும் இது உலகத்தின் முடிவெல்லையில்லை. ஒரு தேசிய இனத்தின் ஆத்மார்த்தமான விடுதலை வேட்கைக்கும், நியாயபூர்வமான கோபாவேசத்திற்கும் இவ்வாறான தவறான தீர்மானங்கள் முடிவெல்லையாக இருக்கவும் முடியாது. மாறாக விடுதலைப் புலிகள் வோஷிங்க்டன் நீதிமன்ர்ரத்தின் முன் தாம் சமர்ப்பித்துள்ள மனுவில் குறிப்பிட்டதுபோல், அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தவறான நடவடிககியினை எதிர்க்க வேண்டிய தார்மீகக் கடமை எமக்கு உண்டு.

இன்று போர் முனையில் தமிழீழப் போரணிகள் மரபுசார் தந்திரோபாயங்களுடன் ஒரு நவீன இராணுவமாக பரிணாமம் கொண்டு வருகின்றது. சிங்கள அரசின் “ஜெயசிக்குறு” போர் நடவடிக்கை, இப் பரிணாமத்தின் சூட்டை ஒன்று அனுபவபூர்வமாக உணர்ந்து வருகின்றது. (1997ம் ஆண்டு அவரையப்பட்ட சமகால ஆய்விலிருந்து தேசக்காற்று 2015 மீள் பதிப்பாய்)

மறுபுறம் சிங்கள அரசின் ‘தீர்வுப் பொதி’ போலியானதொரு வெற்றுவேட்டு என்பது சகல தரப்பினராலும் உணர்ந்துகொள்ள்ளபட்டு வருகின்றது. எதுவித தேசிய இனமுரண்பாட்டைத் தீர்க்கும் பண்பியல் குறியீடுகளும் அற்ற இச் ‘சந்திரிக்காவின் தீர்வுப் பொதி’, நவீனமயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த இனவாதத்தின் தந்திரோபாயங்களையும், உத்திகளையும் கொண்டதாகும்.

இவ் அரசியல், இராணுவ சூழ்நிலையில் தமிழர்களின் அரசியல் இலட்சியத்திற்கான போரியல், சர்வதேசத் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய அமெரிக்காவின் தவறான நடவடிக்கையினைச் சுட்டிக்காட்டி மாற்றி அமைக்கக் கோரும் தாமீகக் கடமைகூட புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு உண்டு.

எமது விடுதலைப் போருக்கான சர்வதேசப் பாதுகாப்பு அரணாகத் திகழவேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமாகும். விடுதலைப் போருக்கு இரத்தம் சிந்தி உயிர்கொடுக்கும் போராளிகளும் பொதுமக்களும், இத் தம் எதிர்பார்ப்பை காலம்காலமாக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்பார்ப்பின் தாக்கத்தை உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் கூட்டணி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது ஜனநாயக உரிமைகளைக் கூட பறித்துவிட பல்வேறு பிரச்சார தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அமெரிக்காவின் நடவடிக்கை துணை போகலாம்.

ஆனால், நாம் தளர்ந்துவிட முடியாது. அமெரிக்க நடவடிக்கையை ஒரு அங்கீகாரத்தின் தொடக்கமாக எடுத்துக்கொண்டு நாம் ஒரு தேசிய இனம், எமக்கு பிரிந்து சென்று சுயமாக வாழும் சுயநிர்ணய உரிமை உண்டு நாம் அடக்குமுறையையும், வன்முறையையும் எதிர்கொள்ளும்போது, அதனை ஆயுதம் தரித்து எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தின் அங்கீகாரத்திற்கு உரித்துடையவர்கள் என்பதை உலகமெங்கும் பறைசாற்றுவோம்.

மூலம்: தமிழீழத்தின் 1997ம் ஆண்டு சமகால ஆய்விலிருந்து…
“தேசக்காற்று”