10.03.2021 அன்று 88வது அகவை காணும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களை வாழ்த்துகிறோம்!
(10.03.1933 — 10.03.2021 )
உலகத் தமிழினத்தின் உற்ற துணைவராகத் திகழும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் 88வது பிறந்தநாளான இந்நாளிற் தமிழீழ மக்களின் சார்பில் அவருக்கு எமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாட்டிலே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற் தன்னை முழுமையாக ஈடுபடுத்தித் தலைநிமிர்ந்து நிற்கும் தலைவர் அவர். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு உடன்பிறப்பாயும், விடுதலைக்கனல் பற்றியெரிந்து கொண்டிருக்கும் தமிழீழ மண்ணுக்கு இடுக்கண் களையும் நட்பாயும் என்றும் இருப்பவர்.
விடுதலைப்புலிகள் வரலாற்றின் தொடக்கக் காலத்தில், சிங்களப் படைகளின் கொடிய நடமாட்டத்தைப் பொருட்படுத்தாமற் சட்டம் உடைத்துக் கடல் தாண்டித் தமிழீழம் வந்து, தமிழீழ விடுதலைப் போருக்குத் தமிழ்நாடு என்றும் துணையிருக்கும் எனக்கூறி எமக்கெல்லாம் புதிய தெம்பும் உறுதியும் தந்தவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.
முதல் மாவீரன் லெப்.சங்கர் வீரச்சாவினைத் தழுவிய போது, விழி மூடிய அந்த மாவீரனுக்கு எமது தலைவருக்குப் பக்கத்தில் நின்று வீரவணக்கம் செலுத்தியவர்.
தமிழீழத் தேசியத் தலைவர் தமிழ்நாட்டிற் சென்னையிற் சிறைவாசம் கண்ட காலத்தில் அவரின் விடுதலைக்காக முயற்சிகள் மேற்கொண்டு அவரைச் சிறைமீட்டுத் தன் இல்லத்திலேயே தன் சிறகுகளால் மூடிக் காத்தவர்.
தியாகி திலீபன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட வேளையில், மீண்டும் சட்டம் உடைத்துக் கடல் தாண்டித் தமிழீழம் வந்து, மெல்ல மெல்ல விழி மூடிக் கொண்டிருந்த அந்த ஈகத் திருவுடலின் பக்கத்தில் நின்று விடுதலைப் பெருமூச்சோடு விம்மியவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.
தமிழீழ விடுதலைக்காகத் தமிழ்நாட்டிற் பல தடவை சிறைவாசம் கண்ட தலைவர் அவர். விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக ஐயா பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதையும், இன்று வரை அத்தடை நீக்கப்படவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தவித்து நின்ற தமிழருக்குத் தளராத கொள்கையுடன் துணிவு தந்தவர். தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழீழ மக்கள் பரவி வாழும் உலக நாடுகளனைத்திலும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் குரல் தமிழினத்தைத் தட்டியெழுப்பும் தூய்மையான, துணிச்சலான, நேர்மையான விடுதலைக்குரலாய் நிமிர்ந்தது.
இறையாண்மையுள்ள தமிழீழத் தனியரசை நிறுவுவதே தமிழீழ மக்களுக்குள்ள ஒரே தீர்வு என்பதிலும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழீழ மக்களின் ஒரே விடுதலை இயக்கம் என்பதிலும் மாறாத உறுதி கொண்டவர் அவர்.
சிங்களப் பேரினவாதப் படைகளின் திட்டமிட்ட இனப்படுகொலை வெறியாட்டத்துக்கு இரையாகி முள்ளிவாய்க்காலில் மடிந்த பல்லாயிரம் தமிழர்களின் துயரத்தை, விடுதலை தேடிய தமிழீழத் தேசிய இனத்தின் விம்மலைப் பெருமூச்சைத் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றமாய் நிறுவித் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை என்றும் அழியாத நினைவுச் சின்னமாக்கிச் சிலிர்ப்பவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.
தென்செய்தி தமிழ் இதழ் மூலம் தமிழீழ விடுதலை நெருப்பை உலகத்தின் திசை நாலும் அள்ளிக் கொட்டும் எழுத்தின் தீரர். எமது தேசியத் தலைவரின் வீர வரலாற்றை எழுதி நிமிர்ந்த எழுத்தாணி. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோன்றிய 1976ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை கிட்டத்தட்ட நாற்பது நெடிய ஆண்டுகளை, அவருடைய இன்று வரையான எண்பதாண்டு கால வாழ்விற் பாதிக்காலத்தைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கே தந்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் உற்ற துணையாய் வாழ்ந்து வரும் தனிப்பெருந் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறோம்.
நீங்கள் தமிழீழ விடுதலை மலரும் வரையும் மலர்ந்த பின்னரும் பல்லாண்டுகள் தமிழீழ வரலாற்றில் ஒளிச்சுடராய் வாழ்க வாழ்க.