பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்!

தியாகி லெப்.கேணல் திலீபன் இந்தியாவிடம் நீதி வேண்டி நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தியாகச்சாவடைந்து 30 வருடங்கள் கடந்து விட்டன.

30 வருடங்களாகியும் பார்த்தீபன் பசியோடுதான் இருக்கிறான். 15-09-1987 அன்று நல்லூர் வீதியில் நீராகாரம் எதுவும் இன்றி உண்ணா நோன்பினை பார்த்திபன் என்ற யாழ். இந்துக்கல்லூரி தந்த திலீபன் தியாக பயணத்தை ஆரம்பித்தான் உண்ணாவிரத மேடையில் கூட புத்தகங்களை படித்துக்கொண்டிருந்தான் அந்த புத்திஜீவி.

அகிம்சைப் போராட்டத்துக்கே இலக்கணமான காந்தி பிறந்த மண்ணிடம் நீதிகோரி திலீபன் தன் வயிற்றுடன் போர் தொடுத்தான்.

இரண்டாம் நாள் 16 ஆம் திகதி திலீபன் மக்கள் மத்தியில் உரையாற்றினான். அந்த உரை…..

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனோ என்பது தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம், அறுநூற்று ஐம்பது பேர் இன்று வரை மரணித்துள்ளார்கள். மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதிவரை இருந்தேன்.

;நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம் என்று கூறிவிட்டு, வெடிமருந்து நிரபப்பிய லொறியை எடுத்துச் சென்றான். இறந்த அறுநூற்று ஐம்பது பேரும் அநேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்கமாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தலைவரின் அனுமதியினைக் கேட்டேன். அப்போது தலைவர் கூறிய வரிகள் எனது நினைவில் உள்ளன.

திலீபன்! நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன் என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரைச் சிறிது கூட மதிக்காத தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். இதனை வானத்தில் இருந்து, இறந்த அறுநூற்று ஐம்பது போராளிகளுடன் சேர்ந்து, நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மன ரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.

விடுதலைப் புலிகள் உயிரிலும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கின்றார்கள். உண்மையான, உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்.

அன்று அறுநூற்று ஐம்பது மாவீரர்களுடன் வானில் இருந்து தமிழீழத்தை பார்த்து மகிழ்வேன் என்றான் பார்த்தீபன். ஆனால் இன்று முப்பதாயிரத்திற்கு மேற்பட்டமாவீரகள் தியாகி திலீபனுடன் கலந்து திலீபன் சொன்ன மக்கள் புரட்சிக்காய் காத்திருக்கிறார்கள்.

அன்று ஆயுதங்கள் மௌனிக்ப்பட்ட போது அகிம்சை ஆயுதமாகியது. இன்றும் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகி விட்டன. ”எழுக தமிழ்” தொடந்து எழட்டும்!

கேப்பாய்புலவு, இரணைதீவு ….என மக்கள் புரட்சியின் விளிப்பில் நின்று ஆக்கிரமிக்க பட்ட நிலங்களை மீட்கின்றார்கள்.

காணமல் போனாரின் உறவுகள் வட தமிழீழம் முழுவதும் 100 நாட்களைத் தாண்டியும் கவனயீர்பு போராட்டம்  தொடர்கிறது… பார்த்திபன் பாதையில்……. பயணங்கள் தொடரட்டும்! ஆனால் இன்றும் பார்த்திபன் பசியோடுதான் இருக்கிறான்.