பிப்ரவரி 6ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா

தடை பல தாண்டி வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திங்கட்கிழமையன்று, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார் சசிகலா. இதற்காக நாளை (5ஆம் தேதி) அதிமுக எம்.எல்.ஏ.கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை, தமிழக முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. அன்றைய தினம் (5ஆம் தேதி) மாலை சென்னை வரும் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளிக்க உள்ளார்கள்.

அதையடுத்து, 6ஆம் தேதி சசிகலா தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க அனைத்து திட்டமும் தயாராகி வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் தினத்தன்று நவமி இருப்பதால், அன்று மாலை 5 மணிக்கு மேல் நவமி முடிவடைந்ததும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர், மறுநாள் வளர்பிறை தசமி தினத்தன்று 6ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா மறைந்த 62 நாட்களுக்குப் பின்னர், சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு தயாராகவுள்ளார்.