சரத் பொன்சேகா கேள்விக்குட்படுத்தப்படும் யுத்தமீறல்கள்?
பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை. புதைக்கப்பட்டது’ என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். இது உண்மைகள் வெளிப்படும் காலமா? அல்லது சரத் பொன்சேகா தன்னிடமுள்ள ரகசியங்களை அவிழ்த்து, உண்மைகளைச் சொல்ல விரும்புகிறாரா? அப்படி அவர் விசுவாசமாகவே உண்மைகளைச் சொல்ல விரும்பினால், இன்னும் பல உண்மைகளை அவர் சொல்ல வேண்டும். அந்தப் பொறுப்பு அவருக்குண்டு. அவருக்குத்தான் அவைபற்றிய உண்மைகள் தெரியும்.
1. போரின்போது அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட மையங்களுக்குள் எறிகணை வீச்சுகளை நடத்திப் படுகொலைகளை மேற்கொண்டமை எப்படி நடந்தது? அதற்கு யார் பொறுப்பு?
2. அப்பொழுது மக்கள் வாழும் பகுதிகளின் மீது கொத்துக்குண்டுகளை வீசியதும் பொஸ்பரஸ் தாக்குதல்களை மேற்கொண்டதும் ஏன்? இதைச் செய்ததற்குக்கட்டளையிட்டது யார்? இந்தத்தீங்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தது யார்? எங்கிருந்து இந்த ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன?
3. இறுதிப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? அதற்குரிய பொறுப்பு எவரைச் சாரும்?
4. போரின்போதும் போருக்குப் பின்னரும் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன ஆயிற்று?
5. பிரபாகரனுடைய உடல் புதைக்கப்பட்டதென்றால், அது எங்கே புதைக்கப்பட்டது?
6. இறுதிப்போரின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், பணம், தங்கம் ஆகியற்றின் அளவு என்ன? அவை எங்கே, யாரிடம் ஒப்படைக்கப்பட்டன?
7. சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கான ஆதரங்கள் ஒளிப்படங்களாக உள்ளன. அவற்றைப் படம் பிடித்தவர்களே படையினர்தான். இதைப்பற்றிய உண்மைகள் என்ன? இந்தக் கொலைகள் எப்படி நடந்தது? இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இதைத்தடுக்க முடியாமற் போனது ஏன்? அவர்களுக்கான தண்டனை என்ன? இதற்குப் பொறுப்பானவர்களை எப்படி விசாரணை செய்வது?
8. கைது செய்யப்பட்டவர்களிலும் சரணடைந்தவர்களிலும் ஒரு தொகுதிப் பெண் போராளிகள் பாலியல் ரீதியாகச் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பை யார் ஏற்பது? இதற்குப் பொறுப்பாக இருந்தவர்களுக்கான தண்டனை என்ன? இந்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணம் என்ன? நியாயம் என்ன?
இது போலப் பல அநீதிகளைப் பற்றியும் அவற்றின் உண்மைகளைப் பற்றியும் சரத்துக்குத் தெரியும். இந்த உண்மைகளை அவர் சொல்லும்போதும், அவற்றை அவர் பகிரங்கமாக நிரூபிக்கும்போதும்தான் அவர் உண்மையான பீல்ட் மார்ஷல் என்ற தகுதியைப் பெற முடியும். மட்டுமல்ல, சர்வதேச அளவில் அவருடைய கீர்த்தி மேலும் உயரும். அப்படியில்லாமல், அவர் இப்பொழுது வகித்துக் கொண்டிருக்கும் அரசியலுக்காக இப்படி நாடகமாடினால் வழமையான – நேர்மையற்ற அரசியல்வாதி என்ற அடையாளத்துக்கும் பழிக்கும் ஆளாகுவார். வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தள்ளப்படுவார்.
சரத் எதைத் தெரிவு செய்யப்போகிறார்?
தனக்குத் தெரிந்த, தான் பொறுப்புச் சொல்ல வேண்டிய எல்லா உண்மைகளையும் சொல்லப்போகிறாரா? அல்லது தன்னுடைய அரசியல் நன்மைகளுக்கு ஏற்றமாதிரிச் செயற்படப்போகிறாரா? ஒரு போர் வீரனுக்குரிய துணிச்சலோடும் தியாக சிந்தையோடும் அவர் தனக்கு முன்னே இருக்கின்ற சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு உண்மைகளைப் பேசுவாராக இருந்தால், சரத் இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் மட்டுமல்ல, நீதியின் நாயகனாகவும் கருதப்படுவார். ‘எந்தத் தயக்கமுமில்லாமல், பிறருடைய மறுப்புகளையும் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், ‘எந்த நிலையிலும் உண்மைக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன். உண்மைக்காக என்னையே ஒப்புக் கொடுப்பேன்’ என்ற திடசங்கற்பத்துடன் வாய் திறப்பாரா?
இப்படி உண்மைகளைச் சொல்வதால் ஏற்படும் லாப நட்டங்களைப் பொருட்படுத்தாமல் சத்தியத்துக்கும் சாட்சிக்கும் நேர்மையாக இருப்பாரா? அதையே பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நீதியாளர்கள் விரும்புகிறார்கள். சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. சரத் எடுத்துக் கொண்ட விசயங்கள் எளியவை அல்ல. மிகச் சிக்கலும் உணர்ச்சிமயமானவையுமாகும். இனவாதிகளையும் சிங்கள சமூகத்தையும் இலகுவில் பெருங்கொந்தளிப்புக்குள்ளாக்கக் கூடியவை. ஆகவே இதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் சரத்திற்கு மீண்டும் சிறைக்கதவுகளே திறக்கும். சிலவேளை அவருடைய தலைக்கே உலை வைக்கப்படும்.
ஆகவேதான் சரத் என்ன செய்யப்போகிறார்? எப்படி இந்த விசயங்களைக் கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் எங்கும் உருவாகியிருக்கிறது. சரத் சாதாரண மனிதர் அல்ல. முன்னாள் இராணுவத்தளபதி. இலங்கையில் பீல்ட் மார்ஷல் என்ற படைத்துறைப் பட்டத்தைப் பெற்ற ஒரே தளபதி. பல போர்க்களங்களைக் கண்டவர். விடுதலைப் புலிகள் என்ற மிகப் பெரிய இராணுவ வல்லமையுள்ள அமைப்புடன் முப்பது ஆண்டுகளாகச் சமரிட்டு அதைத் தோற்கடித்தவர்.
அரசியலில் செல்வாக்குடையவர். மேற்குலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றவர். இந்த அங்கீகாரத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 45 லட்சம் வாக்குகள் பெற்றவர். வெற்றியடையாத நிலையிலும் நாட்டின் தலைவரோடு மோதியவர். அதனால் பதவிகளையும் பட்டங்களையும் இழந்தவர். மட்டுமல்ல சிறை சென்றவர். சிறையிலிருந்து கொண்டே தொடர்;ந்து சவால்களை விடுத்தவர். சிறைமீண்டு மீண்டும் அரசியில் உயர் நிலையை எட்டியவர்.
ஆகவே, இத்தகைய ஒரு பாராம்பரியத்தையும் வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டுள்ள சரத் எழுந்தமானமாக எதையும் சொல்ல முடியாது. சரத் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லும் முக்கியமானவை. அதிலும் இறுதிப்போர் பற்றி அவர் தெரிவிக்கின்ற விடயங்கள் கவனத்திற்குரியவை. அவற்றைப்பற்றிய தகவல்களை ஆதாரபூர்வமாகப் பேசக்கூடிய தகுதிநிலைப் பொறுப்பாளி அவர். பல உண்மைகள் தெரிந்தவரும் பொறுப்புச் சொல்லக்கூடிய நிலைக்குரியவரும் அவர்.
சரி, சரத் எதற்காக இப்பொழுது இந்த உண்மைகளைச் சொல்கிறார். அல்லது எதற்காக இந்த ரகசிய முடிச்சுகளை அவிழ்க்கத் துடிக்கிறார்?
நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு பழக்கப்பட்ட சரத்துக்கு மேலும் அவற்றை எதிர்கொள்வதில் தயக்கமிருக்காது. தவிர, சரத் தான் இந்த உண்மைகளை முதன்முதலில் சொல்கிறார் என்றுமில்லை. இந்த உண்மைகளைப் பகுதி பகுதியாக ஏற்கனவே பல படையினர் வெளிப்படுத்தி விட்டனர்.
அவை போர்க்குற்ற ஆதாரங்களாக ஆவணப்படுத்தப்பட்டுமிருக்கின்றன. ஆனால், ஒரு வேறுபாடு என்னவென்றால், அந்தப் படையினர் தங்களைப் பகிரங்கப்படுத்தவில்லை. சரத் தன்னைப் பகிரங்கப்படுத்துகிறார். அப்படித் தன்னைப் பகிரங்கப்படுத்தக்கூடிய ஒரு நிலை அரசியல் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் சரத்துக்கு இன்று உருவாகியுள்ளது. ஆகவே அவர் இப்பொழுது துணிகரமாகக் களமாடலாம்.
இந்த இடத்தில் சரத்தை நோக்கிச் சில கேள்விகள்.
1. இப்பொழுது இந்த உண்மைகளைப் பேசத் துடிக்கும் சரத் முன்னர் இவற்றை ஏன் பேசவில்லை?
2. நடந்த குற்றச்செயல்களும் அத்துமீறல்களும் சரத்தின் பதவிக்காலத்திலேயே நடந்தன. அப்பொழுது அவற்றை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ அவரால் ஏன் முடியவில்லை?
3. யுத்தத்தை நெறிமுறைகளின்படி நடத்தாதற்கான பொறுப்பை சரத் தனக்குரிய தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்வாரா? அல்லது அதில் தனக்கு எந்த விதமான பங்குமில்லை என்று கைகளைக் கழுவிக் கொள்வாரா?
இப்படிப் பல கேள்விகள் சரத்தின் முன்னால் உள்ளன. சரத் இன்று தனியே ஒரு படைத்தளபதி மட்டுமல்ல. அரசியற்தலைவரும் கூட. தான் ஒரு அரசியற் தலைவர் என்ற அடிப்படையில்தான் அவர் இப்படி உண்மைகளைப் பேச முன்வந்திருக்கிறார்.
அப்படியானால், அதற்கான அரசியல் ஒழுக்கங்களை அவர் பின்பற்ற வேண்டும். அந்த அரசியல் ஒழுக்கங்களின்படி, இலங்கையின் அனைத்துச் சமூகங்களுக்கிடையிலான நீதிக்கும் நம்பிக்கைகளுக்கும் நல்லிணக்கத்துக்கும் நல்லுறவுக்கும் அவர் பங்களிக்க வேணும். என்றால் சிறுபான்மையினருக்கு அல்லது சிங்களரல்லாத பிற தேசிய இனங்களுடைய அரசியல் உரிமைகளைக் குறித்து சரத்தின் நிலைப்பாடு என்ன? இனப்பிரச்சினைத்தீர்வுக்கு அவருடைய பங்களிப்புகள் எவ்வாறு அமையவுள்ளன?
அல்லது தனக்கு நேரடிச் சவாலாக உள்ள ராஜபக்ஷக்களை முறியடிப்பதற்காகத்தான் அவர் இந்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக் களமாட முற்படுகிறாரா? அப்படித் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகவும் பழிதீர்த்தல்களுக்காகவும்தான் இவற்றை அவர் பேசுகிறார் என்றால் அது அதிக நன்மைகளைத் தரப்போவதில்லை. சில கணப்பிரகாசமும் சில நாட்களின் பரபரப்புமாகவே இந்த உண்மைகள் எழுந்து, தோன்றிக் கண்களைக் கூசச் செய்து அடங்கி விடும்.
ஆனால், என்னதானிருந்தாலும் இப்பொழுது சரத்தின் வாக்குமூலங்களைப் பின்தொடர்ந்து நீதிக்கான விசாரணைப்பொறிகளை இனங்காண முடியும். அப்படி அந்தப் பொறிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நீதிக்கான பெருஞ்சுடரை உண்டாக்கவும் இயலும். இதைச்செய்வதற்கு அரசியல் சாணக்கியமும் அர்ப்பணிப்பும் செயற்திறனும் மிக்க தலைமைகளும் தரப்புகளும் தேவை. குறிப்பாகத் தமிழ்ச்சக்திகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பு.
நேர்மையான முறையில் சரத் உண்மைகளைப்பேசினாலும் சரி, ராஜபக்ஷக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்காகப் பேசினாலும் சரி, அவர் சில விசயங்களைப் பற்றிப் பகிரங்கப்படுத்துகிறார். எதிராளிகள் மோதும்போது பல உட்சங்கதிகள் பகிரங்கமாவதுண்டு. அத்தகைய ஒரு நிலை இன்று உருவாகியுள்ளது. இதை வேடிக்கை பார்ப்பதோ பரபரப்பாக்குவதோ அல்ல இன்றையை வேலை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இதை வைத்துக்கொண்டு மூடப்பட்டிருக்கும் இருண்ட பகுதிகளின் கதவுகளைத் திறக்க வேண்டும். அதுவே ஏனையோருக்கான பொறுப்பும் சவாலுமாகும்.