0403204447

தற்கொலை அங்கி சூத்திரதாரி பிரபாகரனின் நண்பர்

தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் சாவகச்சேரி பிரதேசத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி சந்தேநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முக்கிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை, வாகனமொன்றிலிருந்தே பெற்றுக்கொண்டதாக, ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டனர். தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால், மீன்களைப் பிடிப்பதற்கு மேற்படி வெடிபொருட்களைப் பயன்படுத்த நினைத்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் போது அச்சந்தேகநபர் கூறியிருந்தார். எவ்வாறாயினும், மேற்கண்ட தகவல்களுக்கு மாறுபட்ட தகவல்களையே மேற்படி சந்தேகநபர், தற்போதைய வாக்குமூலத்தில் வழங்கியுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள மணற்குவியலொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாக்குமூலத்தை அடுத்து, அவர் கூறிய இடத்துக்கு பொலிஸார், அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், அவ்விடத்திலிருந்து வெடிபொருட்களை மீட்டதற்கான எந்தவொரு தடயமும் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாரைக் குழப்பும் நோக்கத்தில், மாறுபட்ட தகவல்களை அச்சந்தேகநபர் வழங்கி வருவதாகவும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், சாவகச்சேரியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களை அரச பகுப்பாய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதன் அறிக்கை இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் உண்மைத் தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதிலுமிருந்து, வெடிபொருட்களைக் கண்டுபிடித்த சம்பவங்கள் பத்தாயிரம் இடம்பெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

(www.eelamalar.com)