பிரபாகரனியம் தொடர் 7

துரையப்பாவின் கொலைக்கு பின்னர் புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரன் என்பதும் ஈழம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. போலீசும் அல்பிரட் துரையப்பாவின் வழக்கில் பிரபாகரனை வலைவீசித்தேடியது.. ஆனால் பிரபாகரனின் உருவம் அவர்களுக்கு சரி வர தெரியவில்லை. பிரபாகரன் வீட்டை விட்டு புறப்படும் முன்னர் அவரின் போட்டோக்கள் யாவற்றையும் எரித்துவிட்டே புறப்பட்டார்,. போலீஸ்க்கு கிடைத்தது பிரபாகரனின் அக்காவின் திருமணப்படம் மட்டுமே. அதிலும் பிரபாகரன் சிறுபிள்ளை.. அவர்களால் அந்தப்படத்தை வைத்து பிரபாகரனை இனம் காண முடியவில்லை.. .
ஆனால் இந்தக்கொலையால் தமிழர்களுக்கு புது தெம்பு பிறந்தது. குறிப்பிடத்தக்க அளவு இளைஞர்கள் பிரபாகரனின் அணியில் வந்து இணைந்தார்கள். சிங்களவனை அடித்து நொறுக்க வேண்டும் என வெறியுடன் பல இளைஞர்கள் வந்து இணைகிறார்கள். சரி அவர்களுக்கு இருக்கும் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வைத்து பயிற்சி தர வேண்டும்.. பிரபாகரன் அதற்கு தேர்ந்தெடுத்த இடம் வவுனியா.
தந்தை காணி அதிகாரியாக இருந்த நேரத்தில் அந்த காடுகள் பிரபாகரனுக்கு அத்துப்படி. அடர்ந்த காட்டுப்பகுதி. ஆள் நடமாட்டமே இல்லாத இடம். அமைதியான சூழல்.. எவனுமே கண்டு பிடிக்க இயலாத இடம். அதை தேர்ந்தெடுத்த பிரபாகரன் அதற்கு “பூந்தோட்டம்” என பெயர் சூட்டினார்..

சுமார் 40 ஏக்கர் இருக்கும். அடர்ந்த காடு. அந்த இடத்தை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்தார்கள் போராளிகள். காய்கறிகள்,பழங்கள், கீரைகள் என அங்கேயே உற்பத்தி செய்ய செடிகளை நட்டார்கள். ஏற்கனவே அங்கு பல காய்கறிச்செடிகள் கொடிகள் இருந்ததால் அதை வைத்து சமைத்துக்கொண்டு எதிர்கால நோக்கத்திற்காக பல பயிர்களையும் பயிரிட்டார்கள்.

பயிற்சி ஆரம்பமானது.. அந்த நேரத்தில் பிரபாகரனிடம் இருந்தது மிகக்குறைந்த அளவிலான ஆயுதங்கள். தோட்டாக்கள். ஆக அதை வைத்து சமாளித்து சிறந்த பயிற்சி எடுக்க வேண்டும். அனைவரையும் மனஅளவில் திடப்படுத்தினார். கம்பு சுத்துதல்,சிலம்பு.. மரம் ஏறுதல், நீச்சல், பளுத்தூக்குதல்.மல்யுத்தம் என உடலளவிலான பயிற்சிகளையும் முக்கியமாக துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியும் போராளிகளுக்கு வழங்கினார் பிரபாகரன். போராளிகள் முழுமையாக தயார் ஆகிக்கொண்டு இருந்தனர். போலீஸ் ஒரு புறம் யாழ்ப்பாணத்தை சுற்றிவளைத்து தேட பிரபாகரனும் ஏனைய போராளிகளும் இன்னொரு மாவட்டத்தில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.. ஆனாலும் பிரபாகரனால் அந்தப்பயிற்சியை தொடர முடியவில்லை. காரணம் நிதிப்பற்றாக்குறை. இருந்த பணம் எல்லாம் முடிந்து விட்டது.. போராளிகள் கொண்டு வந்த பணத்தை வைத்துதான் பயிற்சியை வழங்கினார். எல்லாம் தீர்ந்தாகி விட்டது,

இனி உழைக்க இயலாது. அதற்கெல்லாம் காலம் இல்லை.. ஆனால் போராட பணம் தேவை,… என்ன செய்வது.. போராளி ஒருவரின் குரல் “சிவக்குமரன் அண்ணே முயற்சித்தது போல ஒரு சிங்கள வங்கியை கொள்ளையடிக்கலாம்”. ஆனால் குழுவில் எதிர்ப்பு. பிரபாகரனும் ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆனால் அந்த நேரங்களில் தமிழ் மக்களின் வரிப்பணமெல்லாம் சிங்களவனின் தெற்குப்பகுதியில் அபிவிருத்திக்காக செலவு செய்யப்படுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதனால் அந்த அரசாங்க சிங்கள வங்கியை கொள்ளையடிக்கலாம்.இதனால் அரசுக்குத்தான் நட்டம் வருமே தவிர மக்களுக்கு எந்த விதத்திலும் நட்டம் வரப்போவதில்லை என போராளிகள் விவாதித்து முடிவெடுத்தனர். பிரபாகரனும் அந்த முடிவை ஏற்றார். அதன் படி பல வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நோட்டம் விடப்பட்டது, இறுதியாக யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஒரு வங்கி தெரிவாகியது..

அதன் படி 1976 மார்ச் 5ம் திகதி வங்கிக்குள் இறங்கியது போராளிப்படை.. எவருக்கும் எந்தப்பாதிப்பும் வராத படி அங்கிருந்த 5 லட்சம் பணம் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான நகைகள் பிரபாகரன் குழுவால் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையடித்த பணம் பத்திரமாக பதுக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் பிரபாகரனுக்கு அது மனதை உறுத்துகிறது. என்னதால் அரசாங்கப்பணம் ஆனாலும் கொள்ளை தவறல்லவா?.. மற்றைய போராளிகள் அவரை சமாதானம் செய்தனர். இறுதியில் ஏகமனதாக எல்லோரும் சேர்ந்து சரி எடுத்த பணத்தில் ஒரு பகுதியை முத்துமாரி அம்மன் கோவில் அன்னதானத்துக்கு கொடுத்து விடலாம் என முடிவெடுத்து வல்வை அம்மன் கோவிலுக்கு அன்னதானத்துக்கான நிதியாக ஒரு பகுதியை வழங்குகிறார் பிரபாகரன்.

மிகுதிப்பணம் போராட்டத்திற்கான உடை உணவு ஆயுதம் என செலவு செய்யப்படுகிறது. இதனால் மிக உக்கிரமான கோபத்துக்கு ஆளாகிறது சிங்கள அரசு. அத்துடன் பயமும் வருகிறது.. தமக்கெதிராக பெரிய புரட்ச்சிப்படை உருவாகி வருகிறது என்பதையும் சிங்களம் உணர்கிறது.

அது ஒரு புறம் இருக்க சிங்கள அரசின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு பிரபாகரன் பயிற்சியை மேற்கொள்கிறார். போராளிகளும் வலுப்பெறுகிறார்கள். சரி இப்படியே சிறுபிள்ளைகள் போல பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தா சரியா? நமக்கென ஒரு கட்டமைப்பான இராணுவம் வேண்டாமா?. வேண்டும். அதற்கான முயற்சிகளில் பிரபாகரனும் அவர் குழுவும் ஆலோசனை செய்கிறது.

அதன் முடிவில் 1976 மே 5 இல் “தமிழீழ விடுதலைப்புலிகள்” இயக்கம் உருவாக்கப்படுகிறது. ஈழப்புலிகள் என்பதுதான் முதலில் எல்லோரினதும் விருப்பமாக இருந்தது. ஆனால் பிரபாகரனுக்கு அது விருப்பம் இல்லை. காரணம் பண்டைய இலக்கியங்களில் ஈழம் என்றால் இலங்கையை குறிக்கும் சொல். ஆக ஈழப்புலிகள் என்றால் இலங்கை நாட்டின் புலிகள் என அர்த்தம் ஏற்படும். ஆனால் நாங்கள் இலங்கையில் வாழவிரும்பவில்லையே? இலங்கையில் இருந்து தமிழருக்கான ஒரு நாட்டைப்பிரித்தல்லவா வாழவிரும்பினோம். ஈழப்புலிகள் வேண்டாம்.. தமிழருக்கான ஈழநாடு., ஆக தமிழீழ நாடு.

தமிழீழ நாட்டில் விடுதலையை வேண்டி போராடுவதால் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் என முடிவு செய்து அந்தப்பெயரை சூட்டுகிறார் பிரபாகரன். அதற்கு முன்னதாகவே தமிழகத்தில் தங்கி இருந்த போது மதுரையை சேர்ந்த ஒரு ஓவியரின் மூலம் தன் கற்பனையில் இருந்த புலிகளின் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார் பிரபாகரன்..

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகி விட்டது. அது சும்மா உருவாக வில்லை.. பலத்த கட்டுப்பாடுகளுடனும் ஒழுக்கத்துடனும் உருவாகியது.. காரணம் 1971 இல் கிளர்ச்சி செய்த சிங்கள அமைப்பான ஜேவிபி என்னும் கம்யூனியசக்கட்சி கிளர்ச்சியின் போது மது மற்றும் பெண்கள் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தனர் என செய்திகளில் படித்தார் பிரபாகரன்.

பிரபாகரன் அப்படியான ஒரு சம்பவம் தமிழர் படையிலும் நிகழ்வதை விரும்பவில்லை. அதற்காக ஒரு அரசியல் குழு அமைக்கப்பட்டது.. அது 5 பேர் அடங்கிய குழு.

1.செல்லக்கிளி
2.ஐயர்
3.நாகராஜன்
4.விக்னேஸ்வரன்
5. பிரபாகரன்

என ஐந்து பேர்தான் அந்தக்குழு.
அந்தக்குழுவில் ஏகமனதான முடிவில் படி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிரந்தர இராணுவத்தளபதியாகவும் தலைவராகவும் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பார், மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் அமைப்பில் பின்வரும் செயல்கள் தடைசெய்யப்ப்ட்டது

1. மது அருந்தல்
2. புகைப்பிடித்தல்
3. பெண்களுடன் தொடர்பு
4. இயக்க இரகசியங்களை வெளிவிடுதல்.
போன்றவை தடை செய்யப்பட்ட குற்றங்கள்..

அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையையும் வரையறை செய்தார்கள் புலிகள். அதன்படி 3 விதமான இராணுவ நடவைக்கைகள் பிரிக்கப்பட்டது. அதாவது

1. காட்டிக்கொடுக்கும் தமிழர்களை அழித்தல்/ போலீஸ் உளவு நெட்வர்க்கை அழித்தல்
2. இலங்கை அரசின் நிர்வாகத்தை முடக்குதல்
3. இலங்கை வடக்கு/கிழக்கு தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவத்தை அழித்தல்/அகற்றுதல்
என்று இராணுவ நடவடிக்கையை வகைப்படுத்தினார் பிரபாகரன்.

மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடிமறையும் “கெரில்லா தாக்குதல் படையாக இருந்து படிப்படியாக மரபுவழி இராணுவமாக உருவாக வேண்டும். அதற்கு இப்படியான திட்டமிடல்கள் அவசியம் என முடிவு செய்யப்படுகிறது, அதன் படியே வாரம் ஒரு முறை கலந்துரையாடல்,பயிற்சி என உக்கிரமான தயார் படுத்தலில் இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.

இதற்கிடையில் தியாகி சிவக்குமரனை காட்டிக்கொடுத்தது தமிழன் நடராஜன் தான் எனத்தெரிய வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு. காட்டிக்கொடுப்பது அதுகும் சொந்த இனத்தையே காட்டிக்கொடுப்பது குற்றமல்லவா? துரோகிகள் வாழத்தகுதியற்றவர்கள். பிரபாகரனின் உத்தரவின் பெயரின் நடராஜன் அவரின் வீட்டில் வைத்தே சுட்டுக்கொல்லப்படுகிறார்., சிங்கள அரசு உச்சகட்டமாக பயத்தை உணர்கிறது. வலுவான புலனாய்வுத்தகவல்களை திரட்டும் ஒரு அமைப்பு தமக்கெதிராக உருவாகி விட்டது என்பதை உணர்கிறது…

இதற்கிடையில் 1975 இல் உருவான “ஈரோஸ்” இயக்கம் எனும் தமிழர் இயக்கம் சற்று பிரபலம் அடைகிறது. அதன் முக்கியமான தலைவர் இரத்தினசபாபதி இலண்டனில் இருந்தார்.. அந்த அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப்போலவே வவுனியாவில் கன்னடித்தோட்டத்தில் ஆயுதப்பயிற்சி நடாத்தி வந்தது. அந்த இயக்கமும் சற்று பிரபலமாக வளர்ந்து வந்த இயக்கம். காரணம் அதன் தோற்றுவிப்பாளாரன இரத்தினசபாபதிக்கு பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பலத்த தொடர்பு இருந்தது.

அப்போதைய பாலஸ்தினத்தின் லண்டன் தூதுவரான சைய்ட் முகம்மதுவும் இரத்தின சபாபதியும் நெருங்கிய நண்பர்கள். ஆகையால் ஈரோஸ் அமைப்பில் இருந்து அருளர்.கனகசுந்தர்,தங்கர் ராஜி ஆகிய சிலர் லெபனானுக்கு ஈரோஸ் அமைப்பின் மூலம் அனுப்பப்பட்டு பலவிதமான நவீன போர்ப்பயிற்சிகளை பெற்றனர். ஈழம் வந்த அவர்களின் ஒருவரான அருளர் என்பவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் வவுனியா பயிற்சி முகாமுக்கு சென்று பயிற்சிகளை வழங்கியது மட்டுமல்லாது சிலரை லெபனான் அழைத்துச்சென்று பயிற்சியையும் அளித்தார்கள்;

இதற்கிடையில் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் பிரபாகரன் தேடபட்டு வந்ததுடன் தமிழ் பேசும் போலீஸ்காரர்கள் சிலர் சிங்களவனுக்கு உளவாளியாகவும் செயற்பட்டனர். அதனால் ஆத்திரமடைந்த புலிகள் அமைப்பு அவர்களை 1977 இல் தீர்த்துக்கட்டியது.. கருணாநிதி, ,சண்முகநாதன் ஆகியோர் தான் கொல்லப்பட்டனர்.

தொடரும்………………………………