பிரபாகரனியம் – பகுதி 9

தமிழர் விடுதலைக்கூட்டணியில் இருந்து விலகி சிங்கள ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்த கனகராசா சுடப்பட்ட நிகழ்வை இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. உடனடியாக பிரபாகரனையும் உமாமகேஸ்வரனையும் கைது செய்யுமாறு பாஸ்தியம் பிள்ளை என்னும் போலீஸ் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்தது இலங்கை சிங்கள அரசு.

பாஸ்தியம் பிள்ளையும் புலிகளையும் பிரபாகரனையும் பலமாக எதிர்த்தவர்.. அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் இருந்து பிரபாகரனை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தவர்.

யாழ்ப்பாணம் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுகிறது. அதில் உமாமகேஸ்வரன்,நாகராஜா,வாமதேவன் என்னும் மூன்று போராளிகளின் படமும் இடம்பெற்றது. ஆனால் பிரபாகரனின் படம் அவர்களிடம் இல்லை.. காரணம் பிரபாகரன் வீட்டை விட்டு புறப்படும் போதே எல்லா படங்களையும் எரித்து விட்டார்.
ஆகையால் பிரபாகரன் என்னும் பெயர் மட்டுமே பாஸ்தியம்பிள்ளைக்கு தெரிந்திருந்தது.. அவரின் முகம் அவர் எப்படி இருப்பார் என்பது இலங்கை அரசுக்கு தெரியாது.. அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்படுகிறது. தேடுதலும் மிகுந்த முனைப்புடன் நடைபெறுகிறது.
திடீரென ஒரு நாள் போலீஸ் அதிகாரி பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. மன்னார் காட்டுப்பகுதிக்குள் விடுதலைப்புலிகள் இருப்பதாகவும் அந்த குழுவில் அல்பிரட் துரையப்பா,மற்றும் கனகராஜா ஆகிய கொலைகளுடன் தொடர்புடைய பிரபாகரனும் மற்றும் அவரின் தோழர்களான உமாமகேஸ்வரன் மற்றும் செல்லக்கிளி ஆகொயோர் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது.
அந்த தகவலை அடுத்து 1978 ஏப்ரல் 7ம் திகதி இலங்கை போலீஸ் அதிகாரிகளான பாஸ்தியம் பிள்ளை,,பாலசிங்கம்,பேரம்பலம் மற்றும் ஜீப் வண்டி ட்ரைவர் உட்பட அனைவரும் மன்னார் நோக்கி பயணிக்கிறார்கள். மன்னார் காட்டை அடைந்தவுடன் வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு காட்டுக்குள்ளே பிரவேசிக்கிறார்கள்.
அந்த சமயத்தில் செல்லக்கிளி,உமாமகேஸ்வரன்,நாகராஜா ஆகியோர் அந்த காட்டுக்குள்தான் இருந்தார்கள். ஆனால் அதிஸ்டவசமாக பிரபாகரன் அன்று மன்னார் காட்டுக்குள் இல்லை. அவர் வவுனியாக்காட்டுக்குள் இருந்தார்,
மரத்தின் மேல் சிறியதாக அமைக்கப்படிருந்த குடிசை போன்ற கண்கானிப்பு கோபுரத்தில் இருந்த உமாமகேஸ்வரனும் நாகராஜாவும் போலீசை கண்ட அடுத்த கணமே காட்டுக்குள் இருந்த செல்லக்கிளிக்கு அறிவிக்கிறார்கள்.
செல்லக்கிளி பதற்றமடையவில்லை. சரி வரட்டும் என காத்திருக்கிறார்.. போலீஸ் கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். . செல்லக்கிளி இரு இளைஞர்களை அழைத்து பின்வருமாறு கூறுகிறார்

“போலீஸ்காரர் வருகினம். எந்த பதற்றமும் இல்லாமல் அந்த வழியில செல்லுங்கோ. அவையள் மறிச்சு ஏதாவது கேட்டால் இங்க கூட்டி வாங்கோ. மெதுவா சாதாரணமா நடந்து போங்கோ” என்று சொல்கிறார். செல்லக்கிளி சொன்னது போலவே நடந்து சென்ற இரண்டு இளைஞர்ளையும் வழிமறிக்கிறார் பாஸ்தியம் பிள்ளை. விசாரிக்கவும் செய்கிறார். முடிவில் சரி சரி வாங்கோ அந்த குடிசையை போய் Check பண்ணலாம் என கூறி அந்த இரு இளைஞர்களையும் அழைத்துக்கொண்டு குடிசைக்குள் வருகிறார் பாஸ்தியம்பிள்ளை.

அங்கே அமைதியாக செல்லக்கிளி நின்றுகொண்டிருந்தார். வந்த அடுத்த நிமிடமே குடிசையை சல்லடை போட்டு சோதிக்கிறார் பாஸ்தியம்பிள்ளை, . எல்லா இளைஞர்களையும் நீயா பிரபாகரன்? நீயா உமாமகேஸ்வரன் என விசாரணையும் நடத்துகிறார். . முடிவில்
“சரி சரி பிரச்சனை ஒன்னும் இல்ல. ஒரு சம்பிரதாயத்துக்கு போலீஸ்நிலையத்திற்கு வந்து ஒரு அறிக்கை கையெழுத்தை போச்சு விட்டு செல்லுங்கள்” என சொல்கிறார். செல்லக்கிளிக்கு போலீஸ் நிலையம் சென்றால் எப்படியான கவனிப்பு கிடைக்கும் என்பதும் எப்படி சித்திரவதை செய்யப்படுவோம் என்பதும் தெரியும்
சுதாகரித்துக்கொண்ட செல்லக்கிளி. அதற்கென்ன செல்லலாமே” . போறதுக்கு முதலில ஒரு சூடான காபி குடித்துவிட்டு போகலாம் ஐயா என்கிறார். பாஸ்தியம்பிள்ளையும் சரி சரி கொண்டு வாங்கோ குடிச்சிட்டே கிளம்பலாம் என சொல்லி காபித்தண்ணீர் வரும் வரை காத்திருக்கிறார்,

5 நிமிடத்தில் காப்பி தயார் ஆகிறது.. மிகுந்த பணிவுடன் பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு கோப்பையில் காப்பியை வழங்குகிறார் செல்லக்கிளி. பாஸ்தியம்பிள்ளையும் கையில் இருந்த இயந்திட நவீன துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு காப்பியை வாங்குகிறார். கண்ணிமைக்கும் நேரம்தான், காப்பியை வாங்கி வாயில் வைக்கும் முன்னர் கீழே வைக்கப்பட்ட இயந்திரத்த்துப்பாக்கியை பாய்ந்து எடுக்கிறார் செல்லக்கிளி.

எடுத்த அடுத்த கணம் இரண்டு குண்டு போலீஸ் அதிகாரியான பாஸ்தியம்பிள்ளையின் மார்பில் பாய்கிறது. அடுத்த போலீஸ்காரர்கள் தடுக்க வரும் முன்னர் அவர்களை சுட்டுத்தள்ளுகிறார் செல்லக்கிளி. பாலசிங்கம், பேரம்பலம், ஜீப் டிரைவர் .மற்றும் பாஸ்தியம்பிள்ளை. நால்வரும் அதே இடத்தில் உயிரை விடுகிறார்கள்… சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரையும் அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு போலீஸ் காரர்கள் வந்த வண்டியிலேயே ஏறி கிளிநொச்சி நோக்கி வேகமாக செல்கிறார்கள் செல்லக்கிளி,நாகராஜா மற்றும் செல்லக்கிளி . கிளிநொச்சியை அடைந்தவுடன் ஜீப் வண்டியை பெற்றோல் ஊற்றி எரித்துவிட்டு ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையை நோக்கி பிரிகிறார்கள்
இலங்கை முழுவதும் போலீஸ்காரர்கள் கொலை பற்றித்தான் பேச்சு. சிங்களவர் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் ஒரே பேச்சுத்தான்.. “பெடியள்களும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லத்தான்” என வீதிக்கு வீதி ஒரே பேச்சு,
(ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை பேச்சுவழக்கில் பெடியள் என்றுதான் சொல்வார்கள்)

சம்பவம் நடந்து சில நாட்களில் உமாமகேஸ்வரன் மற்றும் செல்லக்கிளி ஆகியோர் பிரபாகரனை வவுனியாக்காட்டுக்குள் சந்திக்கிறார்கள். செல்லக்கிளியை கண்டவுடன் பிரபாகரன் துள்ளிக்குதித்து கட்டியணைக்கிறார். “தமிழர் வரலாற்றில முக்கியமான வேலையை செய்துவிட்டாய் என்ற கருத்தில் புகழ்ந்து தள்ளுகிறார். இதுவரை காலமும் நாட்டுத்துப்பாக்கியை வைத்து பயிற்சி எடுத்த புலிகளுக்கு போலீசாரின் இயந்திரத்துப்பாக்கி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

இதனிடையே உமாமகேஸ்வரன் ஒரு கருத்தை கூறுகிறார்.
“சும்மா துரோகளிகள கொலை செய்தா மட்டும் போதாது. மக்களுக்கு அதை நாங்கதான் செய்தனாங்க எண்டு சொல்லவும் வேணும்” அன்று சொல்கிறார். பிரபாகரனுக்கும் அது சரி என படுகிறது,
இதன் படியே புலிகளால் கொலை செய்யப்பட்ட துரோகிகளின் பெயர்களை பட்டியலாக தயாரித்து கொழும்பு கொண்டு செல்கிறார் உமாமகேஸ்வரன்,. அப்போதுதான் ஊர்மிளா என்னும் திருமணமாகி விவாகரத்தான ஒரு பெண்ணை சந்திக்கிறார் உமாமகேஸ்வரன்.. தாங்கள் கொலை செய்த 11 பேரின் பெயர்களையும் டைப் செய்து தருமாறும் அதன் கீழே புலிகள் என பெரிய எழுத்தில் எழுதமாறும் கேட்டார். அதன் படியே துரோகிகள் என கொலை செய்யப்பட்ட 11 பேரின் பெயரும் எழுதப்பட்டு ஒரு கடிதம் உருவானது. அந்த கடிதம் பின்வருமாறு இருந்தது..

“யாழ் நகர் மேயர் ஆல்பிரட் துரையப்பா தொடங்கி பாஸ்தியம் பிள்ளைவரை மொத்தம் 11 பேரை விடுதலைப்புலிகளாகிய நாங்கள்தான்கொன்றோம். புதிய தமிழ்ப்புலிகள் (டி.என்.டி) என்ற பெயரில் இயங்கி வந்த நாங்கள், இப்போது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.ஈ.) என்றபெயரில் இயங்கி வருகிறோம். இந்தக் கொலைகளுக்கு எந்த ஒரு தனிநபரோ, வேறு எந்த இயக்கமோ பொறுப்பேற்க முடியாது. அவ்வாறுசெய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இப்படியாக ஒரு உத்தியோகபூர்வக்கடிதம் அச்சிடப்பட்டு இலங்கை ஜனாதிபதி பிரதமர் மற்றும் சகல பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை அரசாங்கமும் சிங்கள அரசியல் கட்சிகளும் இடி விழுந்தது போல ஆட்டம் கண்டது. இலங்கையின் தெற்கு பகுதிகள் முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. அரசுக்கு பல தரப்புகளும் அழுத்தம் கொடுக்கத்தொடங்கின. சுதாகரித்த அரசாங்கம் 38 பெயர் கொண்ட தேடப்படுவோர் பட்டியலை அரசுவெளியிட்டது. இதில் பிரபாகரன் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதில்பெரும்பாலானோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர்அணியைச் சேர்ந்தவர்கள். சில தமிழர்கள் தாமாக வந்து சரணடைந்தாலும் முக்கியமான விடுதலைப்புலிகள் சிக்கவில்லை,

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க பிரபாகரன் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவெடுத்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த கலவரத்தில் பழிதீர்க்கும் வகையில் அரசாங்கத்தை கதிகலங்க வைக்க வேண்டும். சரி சரி என்ன செய்யலாம்??.

குழுவாக கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்தின் ஒரு சொத்தை சேதம் செய்யலாம்.ஆனால் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுக்கிறார். அதன் படி இலங்கை விமானம் ஒன்றை வெடிக்கச்செய்யலாம். ஆனால் பொதுமக்களுக்கு எந்த வித சேதமும் இருக்க கூடாது என முடிவெடுக்கிறார் பிரபாகரன்.. திட்டம் தீட்டப்படுகிறது.அதன் படி 1978 செப் 7 ம் திகதி அன்று பலாலியின் இருந்து ரத்மலானை விமான நிலையத்திற்கு 35 பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பிரபாகரனும் பேபி சுப்பிரமணி என்பவரும் டைம் பாம் தயார் செய்து பேபிசுப்பிரமணி மற்றும் இராகவன் என்னும் இருவரின் கைகளிலும் கொடுக்கபடுகிறது.

முறையே இருவரும் செப் 7 அவ்ரோ 748 என்னும் இலங்கை அரசுக்கு சொந்தமான விமானத்தில் ஏறி ரத்மலான விமான நிலையத்தௌ அடைந்ததும் சகல பயணிகளும் இறங்கிய பின்னர் வெடிக்குண்டை மறைத்து வைத்து விட்டு கீழே இறங்குகிறார்கள்.. இறங்கிய சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடித்து விமானம் முற்றாக சிதறுகிறது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.ஆனால் விமானம் சேதமானது.

இலங்கை அரசு அதை எதிர்பார்க்கவே இல்லை. சர்வதேசம் திகைத்து விட்டது. யார் செய்தார்கள் என்பதை கண்டு பிடிக்க முதலே இந்தத்தாக்குதலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகள்,என்னும் கடிதம் வெளியிடப்படுகிறது, தமக்கெதிரான பாரிய அமைப்பு ஒன்று உருவாகியதை இலங்கை அரசு முற்றுமுழுதாக உணர்ந்தது.. இனிமேலும் இதை விட்டுவைத்தால் அது நாட்டுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த இலங்கை சிங்கள அரசு ஊர் முழுக்க சல்லடை போட்டு புரட்சிகர சிந்தனையாளர்களான இளைஞர்களை கைது செய்கிறது.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அடுத்தகட்ட நடவடிக்கையை தயார் செய்கிறது தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு.. தாக்குதலுக்கும் இயக்கத்திற்குமான பணம் போதாமல் இருந்ததால் வங்கிக்கொள்ளைக்கு திட்டமிடுகிறது பிரபாகரனின் புலிகள் அணி. அதன் படி 1978 டிசம்பர் 5இல் திருநெல்வேலி (ஈழத்தின் திருநெல்வேலி) வங்கிக்கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். அந்த கொள்ளையில் 12 லட்சத்துக்கும் அதிகமான தொகையுடன் தப்பித்து சென்று தலைமறைவாகுகின்றனர்,

போராட்டம் சூடு பிடிக்கத்தொடங்குகின்றது. விமானத் தகர்ப்புக்குப்பிறகு, கிட்டு என்கிற கிருஷ்ணகுமார், மாத்தையாஎன்கிற மகேந்திர ராஜா, ரகு மற்றும் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில்சேர்ந்தனர். கிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். பிரபாகரனின்உறவினர். மற்றது மாத்தையா, பருத்தித்துறைக்காரர். ரகு என்பவர் போலீஸ் துறையில் சேரமுயற்சி செய்தார். தமிழர் என்ற காரணத்திற்காக அனுமதிமறுக்கப்பட்டதால், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார். அவருக்கும் வல்வெட்டித்துறைதான் சொந்த ஊர்..

பயிற்சி,சிறு சிறு எரிப்பு,ஆர்ப்பாட்டம் என ஈழமே போராட்ட பூமியாக மாறிக்கொண்டு இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள்தான் தமிழரின் பிரதிநிதிகள் என்றும் அவர்கள்தான் தமிழருக்கான உரிமைப்போராளிகள் என ஈழத்தமிழர்களிடையே சிறு உணர்வு ஏற்படத்தொடங்கியது… அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது..

புலிகள் அமைப்பில் முதல் பிளவுச்சம்பவம்.. போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த உமாமகேஸ்வரன் பற்றிய ஒரு செய்தி தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு எட்டுகிறது. “ஏற்கனவே கல்யாணம் செய்து கணவனை இழந்த ஊர்மிளா தேவி என்னும் பெண்ணும் உமாமகேஸ்வரனும் காதலிக்கிறார்கள் என்றும் கல்யாணம்தான் செய்யவில்லை ஆனால் கணவன்-மனைவியாக வாழ்கிறார்கள் என்றும் செய்தியை கேள்விப்படுகிறார் பிரபாகரன்.

பிரபாகரனுக்கு சரியான அதிர்ச்சியும் கோபமும். உமாமகேஸ்வரனின் மேல் மிகுந்த மனஸ்தாபத்திற்கு ஆளாகிறார்,சரி அவரை நேரில் அழைத்து விசாரிக்கலாம் என முடிவெடுக்கிறார் பிரபாகரன்..

உமாமகேஸ்வரனை அழைத்து விசாரிக்கிறார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. இறுதியில் இயக்கத்தை விட்டு வெளியேறுமாறு உமாமகேஸ்வரனிடம் சொல்கிறார் பிரபாகரன். இருவருக்கும் இடையில் பிரச்சனைன் முற்றுகிறது. வெறும் காதல் விடயம்தானே ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக பிரபாகரன் பெரிதாக்குகிறார் என குழுவில் இருந்த அனைவரும் பேசுகிறார்கள்.

சிறிது காலத்திற்கு முன்பு, விடுதலைப்புலிகளின் தலைவராக உமாமகேஸ்வரனை உலக நாடுகளில் உள்ள போராளிப் பிரதிநிதிகளிடம்அறிமுகம் செய்து வைத்த லண்டன் பிரதிநிதிகள், இந்த மோதலை அறிந்துஅதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சார்பாக கிருஷ்ணனும், ராமச்சந்திரனும் வந்து பிரபாகரனைச் சந்தித்தனர். “உமா மகேஸ்வரன் பெரியதவறு எதுவும் செய்யவில்லை. காதல்தானே! விட்டு விடுங்கள்” என்றுஅவர்கள் பிரபாகரனிடம் பரிந்துரை செய்தனர்.

“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர் ஊர்மிளா. அவரோடு இயக்கத் தலைவர் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்பதுதெரிந்தால், யாரும் தங்களுடைய சகோதரியையும், மகளையும்இயக்கத்துக்கு அனுப்ப மாட்டார்கள்” என்று பிரபாகரன் கூறியபோது, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. மோதல் முற்றியது.1980ம்ஆண்டு உமா மகேஸ்வரன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்துநீக்கப்பட்டார்.

பிரபாகரன் மீது உமா மகேஸ்வரன் சரமாரியான குற்றச்சாட்டுகளைக்கூறினார். “விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஜனநாயகமே இல்லை. எல்லாமுடிவுகளையும் பிரபாகரனே எடுக்கிறார். சுருங்கச் சொன்னால் அவர் ஒருசர்வாதிகாரி” என்றார். இதை பிரபாகரன் மறுக்கவில்லை. “ஆமாம். நான்சர்வாதிகாரிதான். முடிவுகளை நான்தான் எடுப்பேன். விருப்பம்உள்ளவர்கள் மட்டும் இயக்கத்தில் இருந்தால் போதும்” என்று அவர் பதில்அளித்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், விடுதலைப்புலிகள் இயக்கம், “பிரபாகரன் குழு” என்றும், “உமா மகேஸ்வரன் குழு” என்றும் இரண்டு பிரிவாக பிரிந்துகுழப்பத்தில் மூழ்கி இருந்தது

பிரபாகரனியம் 10 இலிருந்து போராட்டத்தின் போக்கு சூடு பிடித்தது பற்றியும் இந்தியாவின் பங்கீடு பற்றியும் எழுதப்படும்