thalavar (1)

தலைவர் பிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத தலைநிமிர்வு

வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்   ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன்

அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன் தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீரயுகமொன்றின் திருஷ்டிகர்த்தா தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.

குறுகிய ஒரு காலத்திற்கு முன்னாள் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன் இன்று தொன்மையும் செழுமையும் வாழ்ந்த பழம்பெரும் பாரம்படியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மாமனிதன்

தமிழன் அடிபட்டு தமிழன் துன்புற்று தமிழன் அலைந்தோடி தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்தகாலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன் வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து சாயாத மலையாக நிமிரும் வரலார்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்திய பெருந்தலைவன். தனியொரு மனிதனாய் நின்று தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி தமிழர்களையே வியக்கவைத்த பெரும் வீரன்

குலையாத கட்டுப்பாடும் வழுவாத நேர்மையும் தமிழனின் வாழ்வுநெறி பிறழாத ஒழுக்கமும் சளையாத போர்த்திறனும் இளாகாத வீரமும் யாரும் நினையாத வகையாக எவரும் மிகையாக நேசிக்கும் உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் கலையாத தேசப்பற்றும் சுதந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக ஆயிரமாயிரம் இளையோரை வனைந்தெடுத்து தளராத துணிவான தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு பெரும் சாதனை படைத்த தளபதி

பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள் அவர் ஒரு அற்புதமான மனிதர், அபூர்வமான மனிதர். ஆச்சரியமான பல தன்மைகளாலும் பண்புகளாளும் குணவியல்புகளாலும் நிறைந்திருக்கும் அதிசயப் பிறவி. அபரிதமான ஆற்றல்கள் மிக்க தனது அழகான ஆளுமையால் முழுத்தேசத்தையுமே ஆகர்சித்து நிற்கும் அசாதாரண தலைவர். தத்தமது தேசங்களிற்கும் இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது. பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ். என்றும் கிடையாத தலைநிமிர்வு.

தமிழர்களின் சேவகனாகி, தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி…. அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சுருண்டுகிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன். இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது தலைவரின் சிந்தனைகள் என்னும் நூலின் முன்னுரை.