பிரபா அண்ணா மீண்டும் வா…! போராளிகளின் அன்பு அழைப்பு…!

ஈழ தமிழனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் தலைமைகளினால் முடியாது போன போது தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டி ஈழ தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் சுய உரிமையுடன் வாழ போராட்டம் நடாத்திய தலைவா உனது கொள்கையின் பிடிப்புடனும் உத்வேகத்துடனும் போராடிய பல்லாயிரகணக்கான அன்றைய இளைஞர்களில் நானும் ஒருவனே.

நீர் எம்மை வழி நடாத்திய காலப்பகுதியில் எம்மை கண்டு அரசியல்வாதிகள் கொடுத்த மதிப்பும் மரியாதையையும் ஒரு கனம் என் மனக்கண் முன்னே தோன்றி மறைகின்றபோது எனது கண்களில் இந்த கடும் வரட்சியிலும் எங்கிருந்துதான் இவ்வளவு நீர் வந்து கண்ணீராக கொட்டி என் முகத்தையே நனைத்துவிட்டதோ நான் அறியேன்.

உங்களின் தலைமையில் தமிழ் மக்களுக்காக நாங்கள் போராடியபோது சுதந்திரமாக தமிழ் மக்கள் தங்களின் விவசாயத்தை கண்ணும் கருத்தாக ஈடுபட்ட நிலங்கள் யாவும் இன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிதைந்து போய் பற்றை காடுகளாக இருக்கின்றது அங்கே மக்கள் நடமாடக்கூடாது என்ற அறிவிப்பையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மக்களின் வீடுகள் யாவும் கூரைகள் அகற்றப்பட்டும் பாழடைந்துபோய் யன்னல் கதவுகள் அகற்றப்பட்டும் மயான அமைதியாகவே இன்றும் காட்சி தருகின்றது. சிதறிய தேங்காய்போல் அங்காங்கே நிலங்கள் கையளிக்கப்பட்டபோதும் முழுமையாக விடுபடவில்லை.

அரசியல்வாதிகளோ தங்களின் அரசியல் இலாபத்திற்காக எம்மை மறக்காது தேவைப்படும் நேரங்களில் எல்லாம் உங்களை புகழ்வதும் அவர்கள் உங்களுக்காகவே அரசியலை அக்காலத்தில் செய்ததாகவும் தமிழ் மக்களிடமும் தெற்கு பகுதிக்கு சென்றால் உங்களைப்பற்றி மௌனம் சாதிப்பதும் தங்களின் கடமையாக்கிவிட்டார்கள்.

வட கிழக்கில் 20 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அவர்கள் அரசை ஆதரிப்பதால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வருடாந்தம் நிதி ஒதுக்கப்பட்டு அவர்கள் தீர்மானிக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கு அந்நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளவும் அரசு வழிவகை செய்துள்ளது. அரசு ஒதுக்கும் நிதிகளுக்கு இந்த நிதி மேலதிகமானதாகும்.

ஆனால் அந்த நிதிகள் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றது என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கின்றது. நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஆரம்ப பாடசாலை சிறுவர்களுக்கும் பாடசாலைகளுக்கும் சிறு நாட்காலி மேசைகள் மற்றும் அப்பியாச கொப்பிகளை வழங்குவதும் அப்படி வழங்கும் வைபவங்களில் வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கான உதவிகள் என்றும் குறிப்பிடுவதையும் மறக்காது விளம்பரம் செய்வதோடு இணையத்தளங்களில் 25 மாணவர்களுக்கு அப்பியாச புத்தகம் வழங்கப்பட்டால் 35 படங்களையாவது பார்க்கக்கூடியவகையில் விளம்பரங்களை செய்கின்றார்கள் . இதற்காக சில ஆயிரம் ரூபாய் பணம் போதுமானதாகும்.

ஆனால் அரசால் கிடைக்கும் 20 கோடிக்கு மேலான தொகைகளுக்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்குமே தெரியாத நிலையே காணப்படுகின்றது. அது மட்டுமா அரசால் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் பாரிய தொகையான நிதிகளை முறையான திட்டங்களுக்கு செலவு செய்ய அபிவிருத்தி கூட்டங்களில் தீர்மானம் எடுக்க போட்டி தன்மை நிலவுவதால் அந்த நிதிகளும் மீண்டும் திறைசேரிக்கே சென்றுவிடுகின்றதாம்.

போராட்டத்தில் அவயங்களை இழந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து இன்றும் அன்றாட உணவுக்காக போராடும் அவல நிலையிலையே விடுதலைப்போராளிகளாகிய நாங்கன் வாழ்ந்து வருகின்றோம். எமக்காக இந்த அரசியல்வாதிகள் எவ்வித உதவிகளையும் செய்யாத போதும் இவர்கள் எம்மை கஞ்சா கடத்தல் போதைவிற்பனைக்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் நிலையை நாங்கள் எதிர் நோக்குகின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி எம்மை இவர்கள் சமூகத்திற்கு எதிரான செயல்பாட்டில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பவே முயல்கின்றார்கள். சமூகத்தில் எம்மை குற்றவாளிகளாக்கி தாங்கள் குடும்பதிற்காகவும் உறவுகளுக்காகவும் பணம் சேர்க்கவே இன்றும் முயல்கின்றார்கள்.

இதனால் அரசு ஒதுக்கும் நிதியை கூட வட கிழக்கு மக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. தமிழ் அரசியல்வாதிகள் மூலமே அபிவிருத்திகளை செய்ய வேண்டும் அல்லது அவர்கள் சிபாரிசு செய்யும் ஒப்பந்தக்காரர்கள் மூலமே அவர்களால் குறிப்பிடப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படல் வேண்டும் இல்லையேல் அந்த திட்டத்திற்கு மாறுபட்ட கருத்துக்களை மக்களிடம் கூறி தடுப்பதையே இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் எமது நிலையோ அபாயத்தில் எமது குடும்பங்களோ பட்டினியில் வாழ வேண்டிய நிலை.

இந் நிலையில் எமது தலைவரே பொருமை காத்தது போதும் மீண்டும் வாருங்கள் எம்மையும் எமது சமூகத்தையும் முதலில் தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் இதுவே போராளியான எமது கோரிக்கையாகும்.

…Raj Eelam