sornam anna

தங்கத் தலைவனின் அடிச்சுவட்டில் உன் பாதம்பதித்து,கந்தகத் தீயினில்கரைந்த செந்தமிழ் வீரனே! இன்று உன் வீரவணக்க நாள்.

தங்கத் தலைவனின் அடிச்சுவட்டில் உன் பாதம்பதித்து,கந்தகத் தீயினில்கரைந்த செந்தமிழ் வீரனே! இன்று உன் வீரவணக்க நாள். மூத்த புலியொன்றின்மூச்சடங்கிய நாள். அண்ணை அண்ணை என உச்சரித்த உன் நாவின் பேச்சிழந்த நாள். இன்று தமிழீழ மக்கள் நாம்,கண்ணீர் சிந்திக் காணிக்கைசெலுத்தி, வண்ணமலர் கொண்டுவந்து உன்பாதம் பணிகின்றோம்.

புல்லர்கள் அழிந்திடப் புனிதப்போர் புரிந்தவனே,வல்ல உன் துணிவுதனை வரலாறு சொல்லும். நாம் பெறும் வெற்றியின் வேரே,வீரத்தின் விளைநிலமே, வீழ்ந்தாலும் நீ விதையாகிப்போனாய். ஈழதேசத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றவனே உன் உயிரின் துடிப்பு அடங்கும்போதும், எங்கள் உரிமைகேட்டல்லவோ அடங்கியது. சோதனை பல சந்தித்து சாதனை படைத்தவனே,துணிவு உன் காலடியில் துவண்டுகிடந்தது. அச்சத்திற்கு உன்னை அண்டுவதற்கே அச்சம்,அதனால் உன்னிடம் அச்சமில்லை. உன் செயலில் உயிர்ப்பிருந்தது,அதனால் உன் கடமையில் துடிப்பிருந்தது. விடுதலை எனும் இலட்சியப் பசி உனக்குள்ளே தீயாய் எரிந்ததால், மரணம் உன் காலடியை மண்டியிட்டது.

மலையென உயர்ந்து தமிழர் மனங்களில் நிறைந்து,மலரும் நினைவாய் வாழும் மூத்த தளபதியே,எங்கள் தலைவன் புன்முறுவலுடன் உச்சரிக்கும் பெயர் உன் பெயர்தானே. அந்த சொர்ணத்தை எங்கள் நெஞ்சத்து நினைவுக்கருவறையிலிருந்து மறப்போமா?அல்லது மறைப்போமா? இல்லவே இல்லை. அது எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட சரித்திரம். என்றென்றும் தமிழீழ தேசத்தில் ஒலிக்கப்படும் வேதம்.

உறங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிய ஈழத்தின் வெற்றிச் சங்கொலியே, மீட்கப்படும் எம் தேசத்தில் உன் கல்லறை நிமிர்ந்து நிற்கும். அது எங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ,அன்றேல் மலர்வளைய மரியாதைக்காகவோ அல்ல,மாறாக எங்கள் மண்ணின் நிலைவாழ்விற்கு உனது மனவுறுதி மகுடம் சூட்டவேண்டும் என்பதற்காகவே. நீ சுமந்த விடியலின் கனவுகளும்,எங்கள் தேசத்திற்காக வெகுண்டெழுந்த உணர்வுகளும்,தமிழீழ வரலாற்றில் என்றென்றும் நிலைத்துநிற்கும். என்றென்றும் தமிழீழ தேசம் உன் நினைவைச் சுமந்திருக்கும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

யேர்மன் திருமலைச்செல்வன்.

(www.eelamalar.com)