புதிய கட்சி தொடக்கம்?: 24-ந் தேதி முடிவை அறிவிக்கும் ஜெ.தீபா

புதிய கட்சி தொடங்குவது குறித்து 24-ந் திகதி தெளிவான முடிவை அறிவிப்பேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி விட்டீர்கள். அது புதிய கட்சியா? அ.தி.மு.க.வில் தொடருவீர்களா?.

பதில்:- அதை வருகிற 24-ந் திகதி (ஜெயலலிதா பிறந்த நாளன்று) வெளியிடலாம் என்று நினைக்கிறேன். நிச்சயமாக தெளிவான பதில் இருக்கும்.

கேள்வி:- ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராசன் அ.தி.மு.க.வை உடைக்க சதி நடப்பதாக கூறி இருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது அவருக்கு தான் தெரியும். எனக்கு தெரியாது.

கேள்வி:- சசிகலாவுடன் இணைந்து நீங்கள் பணியாற்றும் சூழல் உள்ளதா?

பதில்:- நிச்சயமாக இல்லை. உறுதியாக அதை கூறுகிறேன். இதுபோன்ற செய்திகளை வெளியில் உலவ வைத்து இருக்கிறார்கள். அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அது இல்லை என்று உங்களுக்கு உறுதிப்பட தெளிவாக கூறுகிறேன். அந்த சூழ்நிலை உருவாகவும் வாய்ப்புகள் கிடையாது. என்னுடன் ஒரு உறவை ஏற்படுத்தி எனக்கு நலன் செய்வது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறான செய்தி. அதிகாரபூர்வமாக நான் அதை இன்று மறுக்கிறேன்.

கேள்வி:- உங்களுடைய சுற்றுப்பயணம் எதை அடிப்படையாக கொண்டு இருக்கும்?

பதில்:- இளைஞர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் எத்தகைய அரசியல் சூழ்நிலையை விரும்புகிறார்கள்? என்று அவர்களுடன் கலந்துரையாடி தெரிந்து கொள்ள வேண்டும். முதற்கட்ட பயணம் மாவட்ட தலைநகரங்களில் தான் இருக்கும். அடுத்தகட்டமாக கிராமப்புறங்களுக்கு நான் செல்வேன்.

கேள்வி:- முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

பதில்:- நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவரின் செயல்பாடு நன்றாகவே உள்ளது. அதை தவிர வேறு விமர்சனங்களை நான் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி:- நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு தாமதமாகவே செல்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:- குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் கலந்து கொள்ள வந்தேன் என்றால், அங்கே காவல்துறையை வைத்து தடுத்து நிறுத்துகிறார்கள். அனுமதி வாங்கி தான் வரவேண்டும் என்று கூறுகிறார்கள். நிறைய தடைகள் ஏற்படுகின்றன. இதை அச்சுறுத்தல் என்று சொல்ல முடியாது. தடை என்று தான் குறிப்பிடுகிறேன்.

கேள்வி:- உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

பதில்:- இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. அதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தீவிரமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது பார்க்கலாம்.

கேள்வி:- உங்களை தடை செய்வதில் யாராவது பின்புலமாக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

பதில்:- காவல்துறையை இயக்கக்கூடிய அளவுக்கு அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ? அவர்களாக தான் இருக்க முடியும்.

கேள்வி:- சசிகலா தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்த வந்தார்களா?

பதில்:- இதுவரைக்கும் யாரும் அதுபோல் வரவில்லை. ஆனால் அதுபோல் தோற்றத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி:- கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதே? அதை பார்வையிட நீங்கள் செல்வீர்களா?

பதில்:- நான் அங்கு சென்று பார்க்க இயலாது. அந்த செய்திகளையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.