புன்னகை பூக்கும் திருமுகம்…!

புன்னகை பூக்கும் திருமுகமும்
புதுத்தமிழ் பேசும் இன்குரலும் – தாய்
மண்ணினைச் சுமக்கும் தனிப்பலமும்
அன்னை தமிழ் தந்த பெருவரமோ
தமிழின் செல்வனாய் நீ பிறந்தாய்…

தமிழின விடுதலைக்காய் உழைத்தாய்
களத்தில் நின்றும் போரிட்டாய்
கயவரால் உயிரை நீ விட்டாய்
புலம்பெயர் மண்ணில் வலம் வந்தாய் – தமிழர்
உளம்தனில் வீரம் நீ விதைத்தாய்…

இளையோர் முதியோர் அனைவரையும் – உன்
இனிய பேச்சால் கவர்ந்திழுத்தாய்
விலையே இல்லா உந்தனைத்தான்
வீழ்த்தினன் எதிரி குண்டாலே
மலையே சரிந்து வீழ்ந்ததய்யா – தமிழன்
மகிழ்ச்சியும் தொலைந்து போனதய்யா
சிரித்த உன்முகம் தேடி நின்றேன்
திசைகள் யாவும் சிரித்து நின்று…

எழு எழு தமிழா என உரைத்த – உன்
இனிய குரலும் ஒலித்ததய்யா
தமிழர் நெஞ்சம் அனைத்தினிலும் – எம்
தமிழச்செல்வா நீ வாழுகின்றாய்
விழுவான் தமிழன் எழமாட்டான் -என
வீணர் கூட்டம் நினைத்தய்யா
எழுவோம் எழுவோம் நாங்களும்தான்
உறுதி எடுத்தோம் இந்நாளில்
பழுதாய் ஆன மனங்களும்தான் – உன்
பிரிவால் வருந்தித் திருந்தியதே
தமிழகம் என்றும் எம்முடனே
தரமாய்க் கைகள் கோர்த்ததய்யா
சாகும் தமிழை மீட்டெடுக்க – அங்கே
சத்திய வான்கள் வெகுண்டெழுந்தார்…

உன் சுவாசம் எல்லாம் தமிழீழம்
உன் கர்ச்சனையே தமிழ் மானம்
அசுர வத சமநிலை போர் நிறுத்தி
பாகப் பிரிவின் பாங்கினை பகர்ந்து
தேசக்குரலோனுடன் தேசியம் சொன்ன
தத்துவப் புதல்வன் நீ.

கவிஞர்:அம்பிகா –