புலிகளைப் பழி தீர்க்க இரட்டைக் கொலை;
கூட்டணியின் தலையில் சுமத்திய புளொட்!

நினைவழியா நினைவுகள் 11

புலிகளும் ரெலோவும் ஒன்றாக இயங்கிய காலகட்டத்தில் நிறைவேற்றிய சுந்தரம் என்பவருக்கான சாவொறுப்புக்கான காரணங்களை ‘துரோகத்துக்குப் பரிசு’ எனும் துண்டுப் பிரசுரத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரம் இந்தியாவிலேயே அச்சிடப்பட்டிருந்தது. இதனை மக்கள் மத்தியில் விநியோகித்தவர்களில் ஒருவர் அப்போது தீவிர ஆதரவாளராக விளங்கிய பொட்டு. இந்தத் துண்டுப் பிரசுரம் வெளிவருவதற்கிடையில் தாங்களே புலிப் படையினர் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உமாமகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். புலிகளின் இலச்சினையைக் கண்டதும் மக்களுக்கு உண்மை புலனாகியது. அடுத்து இலச்சினையுடன் வெளிவந்த துண்டுப் பிரசுரத்தின் தலைப்பு “நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு”. ஐ.நாவுக்குள் புகுந்து இலங்கைப் பிரதிநிதி பேசுவதற்கிடையில் அவருக்கான நேரத்தில் தமிழரின் பிரச்சினையை வெளிக்கொணர முயற்சித்தார் கிருஷ்ணா வைகுந்தவாசன் என்பவர். இவர் பின்னர் 1982 ஆம் ஆண்டின் தைப்பொங்கல் நாளன்று சுதந்திரத் தமிழீழம் என நாடு கடந்த நிலையில் பிரகடனம் செய்திருந்தார்.

ஒரு வலுவான நிரந்தர ஆயுதப்படை இல்லாத நிலையில் வெளிநாடுகளின் மத்தியில் எமது போராட்டம் பற்றிய நியாயத் தன்மைகள் கொண்டு செல்லப்பட்டிருக்காத வேளையில் வெறுமனே பரபரப்புக்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது பிரகடனத்துக்கான காலம் அதுவல்ல எனப் புரிந்து கொண்டமையால் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இணைந்த ரெலோ – புலிகள் குழுவினருக்கு இருந்தது. புலிகளின் இலச்சினையுடன் இக்கருத்துக்கள் வெளிவந்ததாலேயே மக்கள் உண்மை நிலையினை விளங்கிக் கொண்டிருந்தனர். இதனை விநியோகித்தவர்களிலும் பொட்டு அடங்கியிருந்தார். தான் ஏற்கனவே விநியோகித்த இடங்களிலேயே இத்தடவையும் இப்பணியையும் மேற்கொண்டார். சாவகச்சேரியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்குள் அவர் நுழையும்போதே அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் சொன்னார், “ஆ… புலிப்படைத் தம்பி வாறார்”, இவரது முகம் அங்கிருந்தோரிடையே மனதில் பதிந்திருந்தது. இவர் தொடர்ந்து ஊரிலேயே சனசமூக நிலையத் தலைவராகவும் இருந்தார். அதனால் எச்சரிக்கையுடன் வெளியுலகில் பழக வேண்டியிருந்தது.

தமது உறுப்பினர் சுந்தரம் சுடப்பட்டமையால் சினமடைந்த புளொட் குழுவினர் புலிகள் மீது தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வெளித்தனமாகத் திரிந்தனர். தாங்கள்தான் புலிகள் என்று காட்ட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதால் எப்படியும் பழிவாங்க வேண்டும் என அலைந்தனர். கல்வியங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் இருந்து புளொட் உறுப்பினர்கள் இதுபற்றிக் கலந்துரையாடினர். நாயன்மார்கட்டில் இந்த இடத்தில்தான் புலிகள் இருக்கின்றனர் என்று இவர்கள் உரையாடியதை அந்த வீட்டுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட யுவதி ஒருவர் கேட்டுள்ளார். இம்முயற்சியைத் தடுத்தே ஆக வேண்டும் என முடிவெடுத்த அவர், தனியே புறப்பட்டார். இந்த வீடு இருந்த சந்தியை வந்தடைந்து இவர் வீட்டைப் பார்ப்பதை தேவி அக்கா கண்டுகொண்டார். உடனே அங்கு விரைந்தார். “நீ யார்…? ஏன் இந்த வீட்டைப் பார்க்கிறாய்…? ஒரு பொம்பிளைப் பிள்ளை பெடியள் இருக்கிற வீட்டைத் தேடி வந்தா உன்னைப் பற்றி மற்றவை என்ன நினைப்பினை… சோலி சுரட்டில்லாத இந்தப் பெடியள் தங்கடைபாட்டில இருக்கிறாங்கள். உன்ரை அம்மா… அப்பா இப்பிடிப் பெடியள் தனியா இருக்கிற வீட்டுக்குப் போட்டு வா எண்டு விட்டிருக்க மாட்டினதானே…?”, எனக் கேள்விகளால் வறுத்தெடுத்து விட்டார்.

சுயகௌரவத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் இக்கேள்விகள் இருந்ததால் அழுகையே வந்துவிட்டது அந்த யுவதிக்கு, எனினும் இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றோ, அவர்களுக்கு என்ன நேரக்கூடும் என்பதையோ வெளிப்படுத்தாமல் பொறுமை காத்தார். எந்த இடர் வந்தாலும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குவதில்லை என முடிவோடு இருந்தார்.

தேவி அக்கா போனதும், போராளிகள் வெளியில் வந்தனர். “நீங்கள் ஆரென எனக்குத் தெரியும். இனி இஞ்சை இருக்காதைங்கோ”, என்று சொல்லிவிட்டு ஆபத்து நேரவிருப்பதை எச்சரிக்கையாகச் சொன்னார். அந்த எச்சரிக்கையைப் போராளிகள் புறந்தள்ளவில்லை. அங்கிருந்து வெளியேறினர். பொட்டு தொடர்ந்தும் ஊரிலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். எனினும் உடனே வந்து போகக்கூடியதாகத் தொடர்பும் இருந்தது. பொறுப்போடு அந்த யுவதி செயற்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் தமது முயற்சியை புளொட் குழுவினர் கைவிடவில்லை. தேடித் திரிந்தவர்களுக்கு தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன்தான் அகப்பட்டனர். அவர்களைச் சுட்டுப் பழி தீர்த்துக் கொண்டனர். அவர்களுக்கு அப்போதைய தேவை இந்தப் பழியை யார் தலையில் சுமத்துவது என்பதுதான். ஏனெனில் விடுதலையை விரும்பும் இளைஞர் சக்திகளுக்கிடையே இறைகுமாரன், உமைகுமாரன் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர்.

புலிகள் மீதே போடலாம் என்றால் அவர்கள் இலச்சினையுடனான துண்டுப் பிரசுரம் மூலம் மறுத்து விடுவார்கள். செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கிறார் என்றொரு சொற்றொடர் உள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியும், அதன் தலைமையும் இருக்கிறதுதானே. வடிவேலுவின் பாணியில் சொன்னால் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என முடிவெடுத்தனர். மட்டக்களப்பு நகர மண்டபத்தில் ஒரு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. இன்று புலம்பெயர் நாட்டிலிருந்து சித்தாந்தங்களை அள்ளி இறைத்துக் கொண்டிருப்பவரும், புலிகள் எதைச் செய்தாலும் அது தவறுதான் என நிரூபிக்கத் தலைகீழாக நிற்பவருமான யோகன் கண்ணமுத்து இந்த உண்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சிக்குத் தலைமை வகித்தார். அப்போது அரசியற் கைதியாக இருந்தவரும் பின்னாளில் விடுதலைப் புலிகளில் இணைந்தவருமான இரா. பரமதேவாவின் அண்ணன் வாசுதேவாதான் பிரதம பேச்சாளர்.
அனல் பறக்கப் பேசினார் வாசுதேவா. “ஆமா… ஆமா…”, என்று தலையாட்டினார் யோகன் கண்ணமுத்து. பேசுபொருள் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் அமிர்தலிங்கமே. அவர் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியே.

இதை அறிந்ததும் கடும் சினம் ஏற்பட்டது அமிர்தலிங்கத்துக்கு. பகிரங்கமாக அறிவித்தார், “சுட்டவர்களே அஞ்சலி செலுத்துகிறார்கள்” இப்படியொரு பதில் தாக்குதலை யோகன் கண்ணமுத்துவும் வாசுதேவாவும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சமாவது மனச்சாட்சி இருந்திருந்தால் அன்றே அந்தக் குழுவில் இருந்து விலகியிருப்பார்கள். தொடர்ந்தும் அந்தப் படுகொலைகளை மறைத்துப் புளொட்டை நிலைநிறுத்த முயற்சித்தனர். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் இந்தப் படுகொலைகளுக்கு தலைமை வகித்த சந்ததியாரே பின்னாளில் புளொட் தலைமையால் காணாமல் போகச் செய்யப்பட்டார்.

இறைகுமாரன், உமைகுமாரன் விடயத்தில் இன்னொன்றும் நடைபெற்றது. ஒரு திருமணச் சடங்கில் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கலந்து கொண்டிருந்தார். திருமணம் என்றால் காஞ்சிபுரம் சேலை அணிவது இயல்புதானே. அங்கு வைத்தே இப்படுகொலைகள் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. இந்த இருவரையும் தனது தம்பிமார் போலவே கருதினார். கருத்து ரீதியாக தனது கணவருடன் அவர்கள் முரண்பட்டாலும் அவர்கள் மீதான மதிப்பும் அன்பும் குறையவில்லை. உடனே அளவெட்டிக்குப் புறப்பட்டார். தான் என்ன ஆடை அணிந்திருக்கிறேன் என எண்ணவில்லை. இருவரின் சடலங்களையும் இவர் பார்த்தார். இவர் என்ன கோலத்தில் வருகிறார் என்பதை இந்த இருவரின் குடும்பத்தினர் மட்டுமல்ல, ஊரிலுள்ள அனைவருமே பார்த்தனர். “பார் செத்த வீட்டுக்குக் காஞ்சிபுரம் கட்டிக்கொண்டு வாறா! அவ்வளவு சந்தோசம் அவவுக்கு”, இதைப் பின்னர் பலரும் சுட்டிக்காட்டியபோதுதான் தனது தவறை உணர்ந்தார் மங்கையற்கரசி. இதை எப்படியும் நியாயப்படுத்த முடியாதுதானே? எந்த நிகழ்விலும் எந்தெந்த ஆடை அணிய வேண்டும்; எந்தெந்தக் கோலத்தில் போகக்கூடாது என்பதற்கு இதுவோர் உதாரணம்.

கொல்லப்பட்ட இருவரில் உமைகுமாரன் நகைச்சுவை உணர்வுள்ளவர். “தமிழீழ இலட்சியத்தைக் கைவிடமாட்டோம்”, என தந்தை செல்வாவின் சமாதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் (சம்பந்தன் ஐயா, ஆனந்தசங்கரி உட்பட) சத்தியம் செய்து விட்டே 1977 பொதுத்தேர்தலில் குதித்தனர். இது தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு. இதுவே ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு செல்வதற்காக நாம் போட்டியிடும் கடைசித் தேர்தல் என்றார்கள். இத்தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட குமார் பொன்னம்பலம் விரும்பினார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே தனியே யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். உடனே, மு.சிவசிதம்பரம், “தம்பி குமார் அவசரப்பட்டுவிட்டார்; பொறுமையாக இருந்திருந்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்கியிருப்போம்” என்றார். உடனே குமார், “இதுதான் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கான கடைசித் தேர்தல் என்கிறீர்கள்; பிறகென்ன அடுத்த தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்குவது?” எனக் கேட்டார். அன்று தமிழீழக் கோரிக்கை தேர்தலில் அரசியல் உத்தியாகப் பயன்பட்டதே தவிர வேட்பாளர்கள் உளமார தந்தை செல்வாவின் சமாதியில் சத்தியம் செய்யவில்லை.

தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவராகும் சந்தர்ப்பம் அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்தது. இந்தப் பதவி மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று பரப்புரை செய்வோம் என்றார். வண்ணை. வீரமாகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற அமிர்தலிங்கத்தின் தலையில் மலர்க் கிரீடம் கட்டினர் ஆதரவாளர்கள். அந்தக் கோயிலில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சங்கிலி மன்னனுடையது எனக் கருதப்படும் வாள் இருந்தது. அதனையெடுத்து தலையை மூன்றுதரம் வாளால் சுற்றி “தமிழீழ இலட்சியத்தைக் கைவிட மாட்டேன் என்று சத்தியம்”, செய்தார்.

எதிர்க்கட்சித் தலைவரானதும் முதன்முதலாக இங்கிலாந்துக்குச் சென்றனர் அமிர்தலிங்கம் தம்பதியினர். அவர்கள் திரும்பி வரும்போது எந்தெந்தத் தலைவர்களைச் சந்தித்தீர்கள்; தமிழீழக் கோரிக்கையை அவர்களுக்கு தாங்கள் சுட்டிக்காட்டியதும் அவர்களது கருத்துக்கள் என்னவாக இருந்தது என்பதை அறிய விமான நிலையத்துக்குச் சென்றனர் பத்திரிகையாளர்கள். திருமதி மங்கையற்கரசியிடம் “இந்த இங்கிலாந்து விஜயத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டனர். “மருமகள் ஞானசியாமளாவைப் பிரிந்து வருவதுதான் எனக்குள்ள கவலை”, எனப் பதிலளித்தார் அவர். ஊடகவியலாளர்கள் எதிர்பார்த்தது இந்த விஜயம் அரசியல் ரீதியாகத் தமிழருக்கு ஏதாவது பலனுள்ள வகையில் அமைந்ததா என்பதை அறிய. ஆனால், அது அவர்களின் தனிப்பட்ட விஜயமாக மகனின் (கண்டீபன்) திருமணம் தொடர்பானது என்பதை அறிந்ததும் சப்பென்றாகி விட்டது பத்திரிகையாளர்களுக்கு.

மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து கூரையிலேறியிருந்து போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அமிர்தலிங்கம் ஏணி வைத்து கூரையிலேறிப ‘உயர்தமட்ட’ப் பேச்சு நடத்தினார். சில உத்தரவாதங்களை வழங்கினார். இவரது உத்தரவாதங்களை அடுத்து மாணவர்கள் கீழே இறங்கினர். பின்னர், மாவட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயன்றது. இந்த மாவட்ட அபிவிருத்தி சபைகள் தமிழீழத்துக்கான பாதையின் தங்குமடங்கள் என்றார் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் அப்பா தர்மலிங்கம் எம்.பி.

மாவட்ட அபிவிருத்தி சபைகள் குறித்த தீர்மானத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர். சந்தோஷம் மற்றும் சில மாணவர்கள் இணைந்து ‘உணர்வு’ என்றொரு பத்திரிகையை வெளியிட்டனர். அதன் தலைப்பு “கூட்டணி ஜே.ஆரின் சூழ்ச்சிக்குப் பலி”. ஆனால், மாவட்ட சபைகள் மூலம் எல்லைகளைப் பாதுகாக்கலாம் என விளக்கமளிக்க முயன்றார் அமிர்தலிங்கம். மாணவர்களைச் சந்திக்க யாழ். பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவரோடு பலத்த கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அங்கு நின்ற உமைகுமாரன் அடுக்கடுக்காகப் பல கேள்விகளைக் கேட்டார். அமிர்தலிங்கத்துக்கு அதனால் கடுப்பு ஏற்பட்டது. “உன்ரை விசர்க் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை”, என்றார் அமிர்தலிங்கம்.

“ஓம் ஐயா… உங்களுக்கு ஓட்டுக்கு மேல ஏறினவங்களை இறக்கவே நேரம் காணாது. இதுக்கும் நேரம் காணாதுதான்”, என்று கிண்டலடித்தார் உமைகுமாரன். அப்படிப்பட்டவரைத்தான் புளொட் கொன்று தொலைத்தது.

பிரமாதமாகப் பேசப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் அதிகாரம் பற்றி இறுதிக் காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட தலைவர் நடராசா சொன்னது, “எனக்குக் கிடைத்தது இந்த மேசை ஒன்றுதான்”

அன்று தமிழீழம் – மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்றார்கள். இன்று புதிய அரசமைப்பு என்கிறார்கள். எப்படியிருந்தாலும் தமிழருக்கு இறுதியில் கிடைப்பது ஆரியப்பட்டாவின் கண்டுபிடிப்புத்தான் – பூச்சியம்.

தொடரும்