புலிகள் பதுங்கியதும் இல்லை! பயந்ததும் இல்லை!

வன்னிக் காட்டிலுள்ள புலிகள் பதுங்கியதும் இல்லை, எதிரிகளை விட்டு வைத்ததும் இல்லை என்பதனை வட மாகாண முதலமைச்சர் உணர வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் எம். தியாகராசா தெரிவித்தார். வவுனியாவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

download (4)

வவுனியா மாவட்டத்தை வட மாகாண விவசாய அமைச்சர் முற்றுமுழுதாக புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாய அமைச்சர் தான் ஒரு ராஜாவாக எண்ணிக்கொண்டு முதலமைச்சர் கூறியது போன்று பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதனைப் போன்று தான் ராஜாவாகவே எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்கள் முதலமைச்சரை ஒரு நீதியரசர் கனவான் என் நம்பியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,

தற்போதுதான் தெரிகின்றது முதலமைச்சர் ஒருபக்க சார்பாக நான்கு அமைச்சர்களின் சொல்லைக்கேட்டு 30 அங்கத்தவர்களின் கருத்தையும் புறக்கணித்து தன்னிச்சையாக செயற்படுகின்றமையை எண்ணி மனம் வருந்துவதாகக் கூறியுள்ளார். கரட்டி ஓணான் வெருட்டியே உறவு கொள்ளுமாம் என்பார்கள். அதுபோலவே மாகாண அமைச்சர்களும் முதலமைச்சரும் உறுப்பினர்களை வெருட்டி தமது வாழ்வை கொண்டு போகலாம் என எண்ணுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியாவில் உள்ள குளங்களை திருத்தம் செய்து விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என பல தடவைகள் விவசாய அமைச்சருக்கு கூறியிருந்தேன். ஆனால், இரண்டரை வருடங்கள் கடந்தும் ஒரு குளத்தையேனும் திருத்தம் செய்து ஒரு ஏக்கர் நிலத்தில்கூட விவசாயம் செய்யக்கூடிய வசதியை செய்து கொடுக்கவில்லை என்பதனை கூறி கண்டனமும் தெரிவித்தேன். அது மாத்திரமின்றி, வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்திருந்த மாகாண சபையின் விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான பல கோடி பெறுமதியான ஒரு ஏக்கர் காணியை எவரது அனுமதியும் இன்றி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளார்.

இதற்கு யாரிடம் கேட்டார், யாருடைய ஒத்தழைப்புடன் செய்தார் என்பது தெரியாது. இதனைவிட புளியங்குளம் திவிநெகும காணி பல கோடி ரூபா பொறுமதியானது என நான் அறிந்து இது மாகாணசபைக்குரிய சொத்து, வவுனியா மக்களின் சொத்து. எனவே, இந்த காணியை மாகாண சபைக்கு கோருமாறும் அமைச்சருக்கு தனிப்பட்ட ரீதியிலும் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. மாகாண சபையில் பிரேரணை கொண்டு வந்து மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பியிருந்தோம். ஆனால் அந்த பிரேரணை கூட செல்லாக் காசாகிவிட்டது. அதன் காரணமாக மத்திய அரசாங்கம் அந்த காணியை எடுத்துள்ளது. இதன் காரணமாக அதன் மூலம் வாழ்வாதாரத்தை நம்பியிருந்த சுமார் 150 போர் தொழில் இன்றியுள்ளனர்.

அது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்திலே பாத்தீனியத்தை அழிப்பது தொடர்பான திட்டத்தை எடுத்திருந்தார். இந்த நிலையில் மாகாணசபை அமர்விலும் அவரிடம் நேராகவும் சென்று யாழ்ப்பணத்தில் மாத்திரம் பாதீனியம் இல்லை முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டத்திலும் உள்ளது. எனவே ஏனைய மாவட்டத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரினேன். ஆனால் எதுவித அக்கறையும் செலுத்தவில்லை. முதலமைச்சர் தனது பதிவியில் இருந்து இறங்கி சபையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை செய்யாது குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரை திறப்பு விழாவொன்றில் நல்லவர் வல்லவர் என கருத்து தெரிவித்துள்ளமை நல்லதல்ல. ஆகவே முதலமைச்சர் போனது போகட்டும் என்று இல்லாமல் இனி வரும் காலங்களிலாவது அமைதியான மாகாண சபையாக இருந்து செயற்பட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என தெரிவிக்கின்றேன். அத்துடன் நாம் நான்கு அமைச்சுக்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவற்றை கடிதம் மூலமாக அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நடவடிக்கை எடுக்காத நிலை ஏற்படுமாயின் அவற்றை பகிரங்கப்படுத்தவும் தான் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(www.eelamalar.com)