download (7)

பெண் போராளிகள் பற்றி தமிழீழ தேசிய தலைவர் சொன்னது என்ன…..?

பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.

அவரின் அந்த சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி எனும் பெண்கள் இராணுவப் பிரிவு.

உலகில் பெண்களுக்கு சமவுரிமை கொடுத்து, அவர்களையும் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி களத்திற்கு கொண்டுவந்து பாரதியின் கனவை நனவாக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தினை மாற்றி, அடுப்பு ஊதும் பெண்களாலும், களத்துடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தவர் அவர் தான்.

இந்நிலையில் ஒரு போராட்ட இயக்கம் தன் போராட்டத்தில் சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டது விடுதலைப் புலிகள் தான்.அதன்படியே விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி உருவாக்கப்பட்டு, இன்றுடன் 31 ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றது.

1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் பல்லாயிரம் பெண்கள் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீர மரணத்தையும் அடைந்துள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலின் பின்னர் பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்கியது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீர மரணமடைந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவானது விடுதலைப்புலிகளின் சகல வேலை திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.