பேரறிவாளன் பரோலை மீண்டும் நீட்டிக்க கூடாது! – திருநாவுக்கரசர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீடிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காங்கிரசுக்கு 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் 50 லட்சம் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். பஞ்சாப், கேரளா, இடைத்தேர்தல் முடிவின் மூலம் தென் கோடியில் இருந்து வடகோடிவரை மோடிக்கு எதிரான அலை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் மக்களிடையே அதிருப்தியும், மனச்சோர்வும் தான் ஏற்பட்டுள்ளது. எனவே, வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்தான் பிரதமர் ஆவார் என்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து மருத்துவ குழுவை அனுப்பியிருக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடும். அமோக வெற்றி பெறும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீடிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழக அரசு தனக்குள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்த கூடாது.
காங்கிரஸ் அமைப்பு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தலைவர் மாற்றப்படலாம் என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. டெல்லியில் நானும் இளங்கோவனும் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்து விட்டு தான் வந்தோம். யார் தலைவர் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.விசுவநாதன், கோபண்ணா, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர் மற்றும் தணிகாசலம், ஓட்டேரி தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.