thileepan05aFotor0903180531

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”

லெப். கேணல் திலீபன்

29 ஆண்டுகளுக்கு முன்பு நல்லூர்க் கந்தசாமி கோவில் வீதியில் ஓருயிர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டது. தனது மக்களின் விடிவுக்காக, தனது வாழ்வைத் தியாகம் செய்து, தனது சாவைச் சந்திப்பதற்காக அந்த உயிர் தன்கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் அகிம்சை என்ற அழைக்கப்பட்ட கோட்பாடு ஆகும்!. 29 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லாயிரக் கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க தன் உடலையும், உயிரையும் துடிக்கத் துடிக்க தற்கொடையாக்கிய ஒரு மாவீரனின் தியாகம் நமக்கு சொன்ன, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தி என்ன?

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் போரும், சமாதானமும் மாறி மாறி முக்கிய பங்கினை வகிக்கின்ற இன்றைய கால கட்டத்தில் திலீபன் தன் தியாகத்தின் மூலம் சொல்லிச் சென்ற செய்தியை, அதன் முக்கியத்துவத்தை தன் பரிமாணத்தை அதன் படிப்பினையை உள்வாங்கிச் சிந்திப்பதுவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

29 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கிய திருப்பத்தை சந்தித்தது. பிராந்திய வல்லரசான இந்தியா தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக நேரடியாக தலையிட்டது. தமிழீழ மக்களின் பிரச்சனை குறித்து இந்தியாவினதும், சிறிலங்காவினதும் அன்றைய அரசுகள் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் பாராளுமன்றத்திலும், சிறிலங்காவின் யாப்பிலும் பின்னர் ஏற் றுக் கொள்ளப்பட்டது. இந்தியா தனது இராணுவத்தை தமிழீழப் பகுதிகளில் நிலை கொள்ளச் செய்திருந்தது. இந்திய – சிறிலங்காவின் இந்த ஒப்பந்தம் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை முற்றாக அணுகாமல் தமிழ் மக்களைக் கலந்து கொள்ளாமல் கைச்சாத்திட்டிருந்த போதிலும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த சில அடிப்படை விடயங்கள் அமலாக்கப்படும் என்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

தமிழீழ மக்கள் இவ்வாறு எதிர்பார்த்திருந்ததற்குக் காரணம் அவர்கள் சிறிலங்கா அரசு மீது கொண்டிருந்த நம்பிக்கை அல்ல! மாறாக வெளிநாடு ஒன்று இம்முறை தமிழ் மக்கள் பிரச்சனையில் நேரடியாகவே தலையிட்டிருக்கின்றது. அத்தோடு இந்த வெளிநாடு வேறு எதுவும் அல்ல! நமது அண்டை நாடான இந்தியா அல்லவா? அதுமட்டுமல்லாது இந்தியா வெறும் அண்டை நாடு மட்டுமல்ல, ஒரு பிராந்திய வல்லரசும் கூட! தமிழ் மக்களின் பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள இந்திய வல்லரசு இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறைந்த பட்ச சரத்துக்களையாவது அமலாக்கம் செய்ய முற்படும். அதற்குரிய இராஜதந்திர அரசியல் அழுத்தங்களை சிறிலங்கா அரசுமீது இந்திய அரசு மேற்கொள்ளும் என்று எமது மக்கள் மனப்பூர்வமாகவே நம்பியிருந்த காலம் அது.

அப்பொழுதுகூட சிறிலங்கா அரசைத் தமிழீழ மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால் எந்தச் சிங்கள அரசம் தமிழ் மக்களுக்கு நியாயமான சமாதானத்தீர்வை தரப்போவதில்லை என்பதைத் தமிழீழ மக்கள் தங்களுடைய பட்டறிவு மூலம் தெரிந்தே வைத்திருந்தார்கள் அவர்கள் அன்று நம்பியிருந்தது வெளிநாடும், அண்டைநாடும் பிராந்திய வல்லரசுமான இந்தியாவைத்தான்!.

ஆனால் தமிழீழ மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தது போல் எதுவும் நடைபெறவில்லை. சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் குறியீடான சிறிலங்கா அரசு தனது வழமையான அணுகுமுறையிலிருந்து மாறாமல் தொடர்ந்தும் தனது அரச பயங்கரவாத செயல்;களைப் பல வழிகளில் மேற்கொண்டு வந்தது. இவற்றைத் தடுக்கும் முகமாக இந்திய அரசு தகுந்த அழுத்தங்களைச் சிறிலங்கா அரசின் மீது மேற்கொள்ளும் என்று அவ்வேளையிலும் தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள்.

‘இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் கிட்டாது’ என்பதைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ஏற்கனவே வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் இந்தக் கருத்தை தெட்டத்தெளிவாக கூறியிருந்தார்.

‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும் என்று நான் நம்பவில்லை சிங்கள இனவாதப்பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை’ என்று தேசியத் தலைவர் அன்றே கூறியிருந்தார். அந்த கூட்ட நிகழ்வுக்குப் பெரும் பங்கினைத் தியாகி திலீபன் ஆற்றியிருந்தான்.

தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான பார்வையின்படியே சிங்கள அரசு நடந்து கொண்டது. தமிழ் அகதிகள் தங்களுடைய சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலையை சிங்கள இராணுவம் உருவாக்கியது. வேக வேகமாகச் சிங்கள குடியேற்றங்களை சிங்கள இராணவத்தின் துணையுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வந்தது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண் மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. கிழக்கு மாகாணத்தில் பெருவாரியாகச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் மேலும் விரிவாக்கப்பட்டது. தமிழ்த் துரோகக் குழுக்கள் இந்திய சிறிலங்கா இராணுவங்களின் துணையுடன் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற கொடுஞ் செயல்களைப் புரிய ஆரம்பித்தன. நிலைமை விபரீதமாகப் போய்க் கொண்டிருந்தது. அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல சரத்துக்கள் நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.

இவற்றை இந்திய அரசும், இந்திய இராணுவமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தன. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை முறையாக அமல் படுத்த வேண்டிய தம்முடைய கடமையைச் செய்யாமல் இவற்றிற்குத் துணைபோகும் சக்தியாகவே இந்தியா நடந்து கொண்டது.

இவை குறித்துச் சிறிலங்கா அரசிடமே முறையிடுவதையும் விட ஒப்பந்தப் பாதுகாவலனாக வந்த இந்திய அரசிடம் முறையிடுவதுதான் முறையானதாகும் ஏனென்றால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்படுவதற்கான பொறுப்பும,; கடமையும் இந்தியாவினுடையதாக இருந்தது. இந்தியாதான் தமிழ் மக்களின் உரிமைக்கு உத்திரவாதத்தை அளித்து தமிழ் மக்களி;ன் ஆயுதப் போராட்டத்தையும் நிறுத்தி வைத்தது. எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக தேசியத் தலைவர் தமது சுதுமலை பிரகடனத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஆகவே இந்திய அரசு தமிழ் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காப்பாற்றும்படி கோரி பின்வரும் ஐந்து கோரிக்கைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன் வைத்தது.

• பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் மற்நும் சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

• ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

• இடைக்கால அரசு நிறுவப்படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

• வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

• இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் இந்தியத் தூதுவரின் கைகளில் 13-09-87 அன்று நேரடியாக கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்கப்பட்டு 24 மணிநேர அவகாசமும் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்தியத் தூதுவரிடமிருந்து எந்தவிதமான பதிலோ, சமிக்ஞையோ வரவில்லை.

இந்த ஐந்து கோரி;க்கைகள் புதிதாக வைக்கப்பட்ட கேரிக்கைகள் அல்ல! ஏற்கனவே ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசாலும் சிறிலங்கா அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப் பட்டவைதாம் இவை!. தவிரவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் மிகவும் இலகுவாக அமலாக்கப்படக் கூடிய மிக எளிமையான சரத்துக்கள்தாம் இவை!.

இந்தக் கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்வதற்காக தமிழனினம் தெரிந்து எடுத்துக் கொண்ட போராட்ட வழிமுறை, அகிம்சை போhட்டமாகும்!.

சிறிலங்கா அரசுகளுக்கு எதிராக உண்ணா விரதப் போராட்டங்களை அகிம்சை வழிப் போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று இன்று எவரும் கருத்து வெளியிட மாட்டார்கள் இப்படி யாராவது கருத்து வெளியிட்டால் அது இன்று நகைப்புக்கு இடமாகும் என்பதில் சந்தேகமில்லை. சிங்களப் பௌத்த பேரினவாத அரசு அகிம்சைப் போராட்டங்களை வன்முறை கொண்டு நசுக்கும் என்பதை வரலாறு காட்டி நிற்பதோடு எமது மக்களும் பட்டறிவினால் உணர்ந்துள்ளார்கள். அகிம்சைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எவரும் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாது என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் அகிம்சைப் போராட்ட விடயத்தில் இந்தியாமீது எமது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அகிம்சைப் போராட்டங்களை, உண்ணாவிரதப் போராட்டங்களை, சாத்வீகப் போராட்டங்களை இந்தியா மதிக்கும் என்று தமிழினம் மனப்பூர்வமாக நம்பியிருந்தது. ஏனெ;றால் நவ இந்தியாவின் அடிப்படைத் தத்துவம் ஆன்மீகத் தத்துவம் உயர்வான தத்துவம் யாவுமே அகிம்சைக் கோட்பாடுகள்தாம். எனவே சிங்கள பௌத்த பேரினவாத அரசகள் தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை அலட்சியம் செய்து வன்முறை கொண்டு அடக்கியது போல் இந்தியா செய்யாது. இந்தியா எமது அகிம்சைவழிப் போராட்டங்களை செவிமடுக்கும். எமது போராட்ட நியாயங்களுக்கு இந்தியா தலைவணங்கும்.! என்று எமது தமிழினம் சத்தியமாகவே அன்று நம்பியது.

அந்த வேளையில்தான் எமது இனத்தின் விடுதலைக்கான பாதை எந்தத் திசை நோக்கி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் தனியொருவனாக ஒரு புலி வீரன் புறப்பட்டான். அதற்காக, அவன் அன்று ஏந்திய ஆயுதம் இந்தியாவின் அதே அகிம்சை ஆயுதம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளுக்கான எதுவித பதிலோ சமிக்ஞையோ இந்தியாவிடமிருந்தோ, இந்தியாவின் தூதுவரிடமிருந்தோ வரவில்லை. ஆகவே இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசிடம் நீதி கேட்டு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டான் திலீபன் என்ற ஓர் உன்னத இளைஞன். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தபோது ஒரு சொட்டு தண்ணீரையாவது உட்கொள்ளாமல் உண்ணாவிரத்தை மேற்கொள்ள வேண்டும் – என்று திலீபன் முடிவு எடுத்தான். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ளவரை உறுதியோடு போராடுகின்ற உளவலிமையுடைய இலட்சிய உறுதி!.

இந்த இலட்சிய உறுதியின் அடித்தளத்தையும் திலீபன் தேசியத் தலைவரிடமிருந்தே பெற்றுக் கொண்டான். 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழீழ தேசியத் தலைவர் இந்தியாவில் இருந்தவேளையில் தகவல் தொடர்பு சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து புதிய அத்தியாயம் ஒன்றை தேசியத் தலைவர் ஆரம்பித்து வைத்தார். இரண்டாம் நாளே இந்திய அரச பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேசியத் தலைவர் வெற்றி பெற்றார். தனது தலைவனின் வழியை பின்பற்றி உயிர்த் தியாகப் போராட்டத்தை திலீபன் ஆரம்பித்தான்.

ஆனால் இந்திய அரசு இறங்கி வரவில்லை. சிறிலங்கா அரசு மீது எந்தவிதமான அழுத்தத்தையும் இந்தியா மேற்கொள்ள வில்லை. தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் 265 மணித்தியாலங்கள் ஒரு சொட்டு நீரும் கூட அருந்தாமல் உண்ணா விரத நோன்பினை மேற்கொண்டு உடல்துடித்து உயிர்விட்டது ஒரு உத்தம ஆத்மா! உண்ணாவிரத வேளையில் சுயநினைவுடன் இருந்தபோது புதுஆடைகளை மாற்றுவதற்கு சகபோராளி ஒருவர் முயன்றதற்கு ‘சாகப்போகின்றவனுக்கு எதுக்கு புதுஉடுப்பு’ என்று சிரித்துக் கொண்டே திலீபன் கேட்டான். எப்போதும் ஒரு சட்டையையே தோய்த்துத் தோய்த்து அணிந்து வந்த எளிமையானவன் அல்லவா அந்த தியாகச் செம்மல்.

தியாகி திலீபனின் சாவும் வித்தியாசமான ஒன்றுதான்! இந்தியா அரசு திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில்; திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உயிரோடிருந்தபோதே அவன்மீது இரங்கற்பா பாடப்பட்டது. அவன் உயிரோடு இருந்தபோதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.

தியாகச்செம்மல் திலீபன் உயிர்த் தியாகம் செய்து பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அன்று அவன் தன் தியாகத்தின் ஊடாகச் சொன்ன செய்தி ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுத்தப் பட்டே வருகின்றது. அன்று இந்திய அரசு தமிழர் விவகாரத்தில் தலையிட்டபோதும் சரி, இன்று உலகநாடுகள் தமிழர் விவகாரத்தில் தலையிட்டுள்ள போதிலும் சரி, சிறிலங்கா அரசு மீது இவை முறையான அழுத்தம் எதையும் கொடுக்க வில்லை. எந்த ஒரு சிறிலங்கா அரசும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான சமாதானத்தீர்வை எப்போதும் தராது என்கின்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.

அன்று பிராந்திய வல்லரசான இந்தியா, தமிழர் பிரச்சனை தொடர்பாக ஒரு மலினமான ஒப்பந்தத்தை சிறலங்கா அரசுடன் மேற்கொண்டிருந்த போதிலும், அதனால் எந்த விதமான பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது இராணுவத்தை இல்ஙகைத்தீவில் நிலை கொள்ளச் செய்திருந்த போதும், அது எந்தவிதமான அழுத்தத்தையும் சிறிலங்கா மீது ஏற்படுத்தவில்லை. மாறாக அரசின் அலட்சியப் போக்கையே இந்தியாவும் மேற்கொண்டதனால் மீண்டும் போர் வெடித்தது.

இதே செயற்பாடுகளைத் தான் இ;ப்போது மீண்டும் நாம் காண்கின்றோம். முன்பு இந்தியா இருந்த இடத்தில் இப்போது பல உலக நாடுகள் ஆனால் இந்தியாவிற்கு உள்ள பிராந்தியச் செல்வாக்கு, இந்த உலக நாடுகளுக்கு இல்லை. இந்தியா சிறிலங்கா அரசோடு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருந்தது. இந்த உலக நாடுகள் அவ்வாறு செய்யவில்லை. இந்தியா தனது படைகளை இலங்கையில் தரையிறக்கியிருந்தது. இந்த உலக நாடுகள் அவ்வாறு செய்யவில்லை.

அதாவது ஒப்பீட்டளவில் இந்த உலக நாடுகளையும் விட அன்று இந்தியா பலம் பொருந்திய செல்வாக்கோடு இருந்தது. எனினும் இந்தியா சிறிலங்கா அரசிற்கு உரிய அழுத்தத்தை கொடுக்கவில்லை. அல்லது கொடுக்க முடியவில்லை. மாறாக தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் மீதுதான் தேவையற்ற அழுத்தத்தை இந்தியா பிரயோகித்து. அச்சொட்டா இதே செயல்களைத்தான் இன்று இந்த உலக நாடுகளும் செய்கின்றன. சிறிலங்கா அரசும் தன்னுடைய பாணியில் அச்சொட்டாக அதே செயற்பாடுகளைத்தான் செய்து வருகின்றது.

திலீபன் தனது உயிர் தியாகத்தின் மூலம் ஒரு மிகத்தெளிவான செய்தியை சொல்லியுள்ளான். எந்த ஒரு சிறிலங்கா அரசும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான சமாதானத் தீர்வை தராது என்கின்ற உண்மையைத்தான் அவன் சொல்லிச் சென்ற செய்தியாகும். தமிழீழ மக்களுக்கு எந்தவிதமான உரிமையையும் கொடுக்க கூடாது என்பதில் சிங்கள அரசுகள் மிகத்தெளிவாக உறுதியாக இருக்கின்றன. இந்த விடயத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புகளுக்கும் சிறிலங்கா அரசு முன்வரப் போவதில்லை.

உலகநாடுகள் தம்மைச் சம்மந்தப்படுத்திக் கொண்ட கடந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளும் திலீபனின் செய்தியை நிரூபித்து நிற்கின்றன. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது அடுத்த கட்ட நகர்வை மேற் கொள்ள வேண்டியதானது காலத்தின் கட்டாயமாக அமையக் கூடும். ஆகவே இவ்வேளையில் தியாகச் செம்மல் திலீபன் சொல்லிச் சென்ற கருத்துக்களை வாசகர்களின் முன் வைக்கின்றோம்.

“ஒரு மாபெரும் சதி வலைக்குள் சிக்கி வரும் எமது மக்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும்.”

“என் அன்புத்தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!”

(www.eelamalar.com)