மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஊழல் அம்பலம், விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார் – யோகேஸ்வரன்!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாள்சின் ஊழல், மோசடிகள் விசாரணை மூலம் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பின் நிற்காது எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட் ட அரசாங்க அதிபரை இம்மாற்றக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்பான ஊழல்கள் தொடர்ச்சியாக இணையத்தளங்களில் வெளிவந்தவண்ணமிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்திலும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தகாலத்தில் அப்போதும் அதிகார துஸ்பிரயோகம், ஊழல்களுக்கு எதிராக நான் நடவடிக்கையெடுத்தேன். அரச அதிபரை இடமாற்றவேண்டும் என்று அப்போதே நான் நடவடிக்கையெடுத்தேன்.

ஆனால் சிலர் அதனை தொடர்ச்சியாக தடுத்துவந்தனர். அந்த நிலையில் மாவட்ட செயலாளரின் மூன்று ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ,பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தேன். இது தொடர்பில் விசாரணைசெய்வதற்கு சில்வா என்பரின் தலைமையில் மாவட்ட செயலகத்திற்கு குழுவொன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் குறித்த மூன்று குற்றச்சாட்டுகளும் உண்மையென நிரூபணமானது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சரை நேரடியாக சந்தித்து உடனடியாக அரச அதிபரை இடமாற்றவேண்டும் என்று கோரியிருந்தேன். குற்றச்சாட்டுகள் உண்மை. ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று அமைச்சர் என்னிடம் கோரியிருந்தார். குற்றங்களுக்கு ஆதாரங்கள் உள்ளது.

இனியும் காலம் வழங்கமுடியாது. என்னால் குற்றம் நிரூபிக்கமுடியும் என்று கூறியிருந்தேன். இறுதியாக மாவட்டத்தில் 2013 இறுதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற வெள்ள நிவாரண ஊழலை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். முடிந்தால் விசாரணைசெய்து பாருங்கள் என்று அமைச்சர்களிடம் சவால்விடுத்தேன். அது தொடர்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு அதுவும் உண்மையென அறியப்பட்டுள்ளது. நடைபெற்ற ஊழல் தொடர்பில் பிரதேசசெயலாளர்களையும் விசாரணைசெய்யவேண்டும் என்று கோரியிருந்தேன். அந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையென கண்டறியப்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா தலைமையில் ஒன்றுகூடி பேசி உள்நாட்டலுவல்கள் அமைச்சரை அழைத்து மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றுமாறு கோரியிருக்கின்றோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். நிச்சயமாக அவரை இடமாற்றம் செய்வோம் எனத் தெரிவித்தார்.