சீறிப் பாய்ந்து வரும் குண்டுகளிடமிருந்து, தன்னைக் காத்துக் கொள்வதற்காக, மனிதன் கண்டுபிடித்த எளிமையான, வலிமையான தற்காப்பு ஆயுதம், பதுங்கு குழி.

பதுங்கு குழி மடி.

அறுக்கப்பட்ட முலைகளில்
பாலை ஊட்டப்பட்ட
எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில்
பிறந்து வளர்கிறார்கள்.

அவதிப்படும் நகரத்தில்
அவர்களின் நித்திரை
குருதி பிரண்ட தோட்டாக்களை
வீதிகளில் பொறுக்கி
கணக்கிட்டு தங்கள் புலமையை
வளர்த்துக்கொள்கிறார்கள்.

பீரங்கிகளின் முகங்களின் தேவைகளையும்
கவசவண்டிகளின் இரைச்சல்களின்
அதிகாரத்தையும்
அவர்கள் தினமும் பார்த்து நிற்கநேரிடும்.

அடையாளங்களுக்கு கீழ்
அவர்களுக்கும் விசாரனைகள் நடக்கும்
சோதனைகள் நடக்கும்
தண்டனையும் உண்டு
புன்னகையிழந்த
எனது பிள்ளைகளின் உரிமை
துப்பாக்கிகளின் குறிக்குள்.

சுருங்கிப்போயிருக்கும்
எப்போதும்போல்
பதுங்கு குழியின் மடியில்
எனது பிள்ளைகள்
கண்களை மறைத்திருக்கிறார்கள்
நாடொன்றின் தேசிய பாதுகாப்பின் பெயரில்.