மன்னாரில் பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு!

மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய பிள்ளையார் ஆலயத்தின் சிலைவிசமிகளால் அடித்துநொருக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயமானது, மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள விமான ஓடுபாதைக்கு முன்னால் சிறிய கோவில் மாதிரி அமைக்கப்பட்டு அதனுள் பிள்ளையார் சிலைவைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சிலையே நேற்றிரவு உடைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டிருந்தது. 17.10.17 காலை அவ்வீதியால் சென்ற மக்கள் இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

குறித்த சிலையானது ஏற்கனவே இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டு மக்களினால் மூன்றாவது தடவையாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாயாறு மற்றும் செம்மண் தீவுப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைகளும் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.