மறக்க முடியாத நினைவுகள்! – தேவர் அண்ணா

மறக்க முடியாத நினைவுகள் !நீண்டகாலமாக நான் நேரிற் சென்று தரிசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்த கொளத்தூர் புலியூர் பிரிவுக்கு தம்பி மில்லர் மெய்யழகனோடு சென்று வந்தேன். அந்த மண்ணில் கால் பதித்த போது மறக்க முடியாத அந்த பழைய நினைவுகள் என் மனத்திரையில் வந்து மோதிச்சென்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் மறக்க முடியாத ஒருவர் பொன்னம்மான். 78 களின் ஆரம்பத்தில் தம்பி தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் அன்று நம்மால் தம்பி என்று பாசத்தோடு அழைக்கப் பெற்ற தேசியத்தலைவரின் நம்பிக்கைக்கு உரிய ஒருவராகவும், அவர்மீது அளவுகடந்த பாசத்துடனும் பழகியவர் அவர் அவர் மட்டுமல்ல அவரது பெற்றோர் சகோதரங்கள் உட்பட அனைவருமே இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சியின் பெரும் பங்காளர்களாகவும் விளங்கியவர்கள். 79 களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிளவுகள் ஏற்பட்ட போது உறுப்பினர்களில் பலர் உமாமகேஸ்வரனுக்கு சார்பாக செயற்பட்டு தேசியத்தலைவரை ஒதுக்கி ஓரங்கட்ட முனைந்த காலத்தில் தேசியத்தலைவருக்கு சார்பாக அவரின் பக்கம் நின்று அவர் சோர்ந்து விடாது தலைவரை மீண்டும் செயற்பட வைத்தவர்களில் பொன்னம்மானும் மிக மிக முக்கியமான ஒருவர் .

80 களின் போது ஆரம்பத்தில் யாழ் பிரவுண் வீதியில் அமைந்துள்ள பொன்னம்மானின் மாமனார் வீட்டுக்கு நானும் எங்கள் குடும்பமும் வாடகைக்கு குடியிருக்க சென்றோம். தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த தலைவர் உட்பட சிலர் சந்திக்கும் இரகசிய இடமாகவும் தலைவர் பாதுகாப்பாக தங்கும் இடமாகவும் எங்கள் வீடும் அமைந்திருந்தது. அந்த வேளைகளில் பொன்னம்மான் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். எங்கள் பிள்ளைகளோடு பாசமாகப் பழகுவார். “பிள்ளைமாமா பிள்ளைமாமா”என்று உறவாடுவார்கள்.

1981 இல் தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து நாமும் தேடுதல்களுக்கு உள்ளானோம்.பொன்னம்மானும் தேடப்பட்டதன் காரணமாக தமிழ்நாடு சென்றார். அதனைத் தொடர்ந்து 81 ஜூன் மாதம் 6ஆம் நாள் தலைவர் நான் உட்பட ஐவர் தமிழ்நாடு புறப்பட்டோம். ஆகஸ்ட் மாதமளவில் எனது குடும்பத்தினரையும் தம்பிமார் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து எங்களை குடும்பமாக பாண்டிச்சேரியில் குடியமர்த்தினார்கள். அப்போது தமிழ்நாட்டில் நாங்கள் யாரும் இயக்கம் என அடையாளம் காணப்படாத காலம். 83 இன் இனக்கலவரத்தின் பின் இயக்கத்திற்கு ஓரளவ அங்கீகாரம் கிடைக்கும் வரை கொன்னம்மான், லாலாரஞ்சன், ஆசீர்சீலன், புலேந்தி அம்மான் எனப் பலர் எங்கள் குடும்ப அங்கத்தினர்களாகவே எங்களோடு வாழ்ந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் எங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலும் பழக்க வழக்கங்களிலும் பெரும் பங்கெடுத்துக் செயற்பட்டவர் பொன்னம்மான். பின்னாளில் பயிற்சிக்கான புறப்பட்டுச் சென்றார்கள்.

பயிற்சிகளை முடித்த பின் கொளத்தூர பயிற்சி முகாமில் பொறுப்பாளராக பொன்னம்மான் செயற்பட்ட காலங்களிலும் நான் முகாமுக்கு சென்று வருவேன். அந்தப் பயிற்சிக்காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருந்த காலகட்டங்களில் பயிற்சியாளர்களுக்கு நல்ல உணவு, உடைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த பிரயாசைப்பட்டவர் பொன்னம்மான். அந்தக்காலகட்டத்தில் பொன்னம்மானுக்கு வலது கரமாக செயற்பட்டவர் தான் கப்டன் றோய். அப்போது தான் றோய் என்க்கு அறிமுகமானார். இயக்க வளர்ச்சிக்கு நிதி சேகரிப்பதற்காக சேலத்தில் கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அந்தப்பணியை தன் தலைமேல் சுமந்தவாறு பம்பரமாகச் சுழன்று செயற்பட்டவன் றோய்.

பின்னாளில் பல தடவைகள் றோய் புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு என்னை பிரச்சாரத்திற்காக அழைத்துச் சென்றவன். களத்தில் காயப்படும் வரை அவனுக்கும் எனக்கும் உள்ள உறவும் கைதியின் வெடிவிபத்தில் வீரச்சாவடையும் வரை பொன்னம்மானோடு நான் பழகிய உறவும் மறக்க முடியாதவை. அதே போன்று தான் கொளத்தூர் பகுதி மக்களும் மணி அண்ணாவும் அவர்களையும் மறக்க முடியாததின் காரணமாகவே இன்று புலியூர் பிரிவும் பொன்னம்மான் நினைவு நிழற்கூடமும் நிமிர்ந்து நிற்கின்றன. தமிழீழ மண்ணில் காயப்பட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டு இங்கு மரணம் அடைந்த அன்புத்தம்பி கோயில் வித்துடல் அவன் ஓடியாடித்திரிந்த கொளத்தூர் மண்ணில் விதைக்கப்பட்டிருக்கின்றது.அவன் விதைக்கப்பட்ட இடத்தில் றோயுக்கு ஒரு நினவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்!

(www.eelamalar.com)