மாவீரன் – தலைவரின் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த வீரனின் கதை-!

ஒரு விடுதலைவீரன் சாதாரண வாழ்க்கைவாழும் ஒரு சாதாரண மனிதப்பிறவியல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்துக்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்துக்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப்பிறவிகள்.
– தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்.

தேசியத்தலைவர் அவர்களின் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த வீரன் ஒருவனின் கதை இது.
மாவீரன்.
அவனுடைய முகத்தில் எப்போதும் அவனுக்கே உரிய மென்புன்னகை ஒட்டியிருக்கும். ஒரு முக்கியபணிக்காக அவன் தான்வாழ்ந்த பகுதியைவிட்டு புறப்பட்டான். அது அவனுக்கு மிக முக்கியமான பணியும் கூட. யாரையோ பிடித்து, தென்பகுதியில் ஒரு பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்ந்துகொண்டான். கடைமுதலாளி மிகவும் நல்லவர்.

கடவுள்நம்பிக்கையும், கருணையுள்ளமும் கொண்டவர். எங்கிருந்தோ வந்து, இட்டபணி எல்லாவற்றையும் செய்யும் இவனை அவருக்குப் பிடித்துப்போயிற்று, களவுபொய் இல்லை. குடிவெறி பீடி சிகரெட் இல்லை. பெண்களுடன் வழியும் குணம் இல்லை.
கடவுள்தான் தனக்கு இவனை தந்து அருளியதாக அவர்நினைத்துக்கொண்டு பெருமைப்படுவார். எப்போதாவது அவர் சம்பளம் என்று ஏதாவது கொடுத்தால் வாங்கிக்கொள்வான். வாய்விட்டு எதுவும் கேட்கமாட்டான்.

கடைக்கு சனங்கள் வராத நேரங்களில் கூட சும்மா இருக்கமாட்டான். கடையை துப்பரவு செய்வதிலும், பொருட்களை அடுக்குவதிலும் ஈடுபடுவான். கடைக்கு சிகரெட் உள்ளிட்ட பொருட்களை வாங்கவரும் இராணுவத்தினரோ அல்லது வேற்றுஇன மக்களோ கூட இவனை அன்பு பாராட்டினார்கள்.

‘இப்பிடி ஒருபிள்ளையை நான் வாழ்க்கையிலை கண்டதேயில்லை… சரியான அப்பிராணி… ‘ என்று தனக்குள்ளாக அவர் சொல்லிக்கொள்வார்.
அவனைப்பழகப் பழக அவருக்குள் ஓர் எண்ணம்வளர்ந்தது. அவனிடம் கேட்கலாமா இல்லையா என்றுகூட நினைப்பார். வேலைக்கு சேரும்போது தனக்கு தாய்தந்தை இல்லை என்று அவன் சொல்லியிருந்தான் என நினைத்துக்கொண்டார்.

ஒருநாள் அவனிடம், ‘ தம்பி… உம்மோடை ஒரு விசயம் கதைக்கவேணும்…. என்ரை தங்கச்சிக்கு சின்னவயதிலை புருஷன்காரன் செத்திட்டார்…. ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளை… படிச்சிட்டு வீட்டிலை இருக்கிறாள்… அவளுக்கு ஒரு நல்லதை செய்துகுடுக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு…. உம்மைப்பார்த்த பிறகு… அந்தப் பொறுப்பை நிறைவேற்றலாம் எண்ட நம்பிக்கை எனக்கு வந்திருக்கு… நான் வற்புறுத்தேல்லை… நீர் விரும்பினால் தங்கச்சியின்ரை மகளை உமக்கு கட்டித்தரலாம்… உம்மை எடுக்க தங்கச்சிக்கும் விருப்பம்…..’ என்றார்.

அவன் எதுவும் பேசவில்லை.
‘ ஏதோ யோசிச்சு…. ஆரும் தெரிஞ்சவை அறிஞ்சவையிட்டை அறிவுரைகேட்டு ஆறுதலாகச் சொல்லும் தம்பி…..’
அவனுக்கும் அந்தக் காலகட்டத்தில் அந்தச்சூழ்நலையில் அங்கு தனியனாக இருப்பது ஆபத்தானது என விளங்கியது. எப்போதாவது வழியில் தெருவில் ஏதாவது நடந்தால், சுற்றிவளைப்பில் தானும் அள்ளுப்பட்டு செல்லவேண்டி ஏற்படும் என்பது தெரிந்திருந்தது அவனுக்கு.

தன்னுடைய பணிக்கு ஒருபாதுகாப்பாக இந்த திருமணவாய்ப்பு அமையும் என அவன் நினைத்துக்கொண்டான். உரிய அனுமதியுடன் அவனுக்கும், கடைமுதலாளியின் தங்கை மகளுக்கும் எளிமையாக ஒரு சைவக்கோயிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் கடையில் அவனுக்கு உரிமைநிலையை அதிகமாக்கியிருந்தாலும், அவன் எளிமையான தொழிலாளியாகவே இப்போதும் இருந்தான். அவனுடைய எளிமையும் அமைதியும் அவனுடைய பணிணை இலகுவாக்கிக்கொண்டிருந்தன.
வழமைபோல இரவு பத்துமணிக்கு கடைபூட்டியவுடன் வீட்டுக்கு போவான். அதிகாலையில் முதலாளிக்கு முன்னதாகவே கடைக்கு வந்தும்விடுவான்.

அந்தக்குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அவன் இயல்பான ஓர் அப்பாவியாகவே வாழ்ந்து காட்டிக்கொண்டிருந்தான். தன்னுடைய பணியிலும் அவன் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.

அவனுடைய வாழ்வுப்பயணிப்பில் ஆண்குழந்தைக்கு தந்தையாகினான். மகனும் துணைவியுமே அவனது உலகமாகக் கருதிக்கொண்டான்.

‘ இப்பிடி ஒரு நல்லவாழ்க்கை என்ரை பிள்ளைக்கு கிடைக்குமெண்டு நான் நினைச்சுக்கூட இருக்கேல்லை… அருமையான மருமகன்…. ‘ எனப் பரவசப்பட்ட அவனது துணைவியின் தாயார் கூட அவனை,

‘ மகன்… மகன்….’ என்றுதான் வாய்க்குவாய் அழைத்து மனம் மகிழ்ந்து கொண்டிருந்தார்.
இந்தவாழ்க்கையில் ஒருநாள் அவனுடைய அயலில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இராணுவத்தினர் நிலைகுலைந்துபோனார்கள். இராணுவப் புலனாய்வுவிசாரணைகளில் இவனிலும் அவர்களுக்கு ஐயம் எழுகிறது. ஆனால் இவன் அந்தக்கடையின் தொழிலாளியாக இருப்பவன் என்பது அவர்களுக்கு ஏனோ தகவல் தெரியவில்லை.
ஓர் இரவு இவனைப் பின்தொடர்ந்து அவர்கள் துரத்துகிறார்கள். துப்பாக்கிச் சூடுநடத்துகிறார்கள். அவன் தப்பி ஓடி ஒருவாறு வீடுவந்து சேருகிறான். காலில் சிறு காயம். எதுவும் நடக்காதது போல வீட்டில் இருக்கிறான். இரவு மனைவி உறங்கியதும் தனது முக்கிய தகவல்களை அழித்துவிடுகிறான்.

அவர்கள் சுற்றிவளைப்பு நடாத்துவார்கள். காலில் காயத்துடன் தான் பிடிபட்டுவிடக்கூடும் என நினைக்கின்றான்இ வேறு வழியில்லை. அதிகாலை தான் உறவினர் வீடு செல்வதாகவும், வர இரண்டொருநாள் ஆகுமென்றும் மனைவியிடம் கூறி, மனைவியையும் மகனையும் முத்தமிட்டு விடைபெறுகிறான்.

அவனே எதிர்பாராதவிதமாக அவனுடைய பயணத்தில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. இருளோடு இருளாக நகர்ந்து, படையினரின் கட்டுப்பாட்டுநிலம் தாண்டி தன்னவர்களிடம் வந்துசேர்ந்துவிட்டான்.

சில நாட்கள் அவதானித்ததில் அவனுடைய மனைவி, மகனுக்கு எதுவித சிக்கலும் இல்லை எனத் தெரியவருகிறது. கடைமுதலாளிக்கு மெல்லத் தொடர்பு கொள்கிறான்.
மனைவியையும் மகனையும் தன்னிடம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறான். ஓரிரு வாரத்தில் அவர்கள் அவனை வந்தடைகிறார்கள். வசதியான வாழ்க்கை வாழ்ந்தவளுடன் போர்நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, மின்சாரமற்ற, பொருளாதார வசதிகளற்ற வன்னியின் கிராமம் ஒன்றில் குடிசையமைத்து தங்கிக்கொள்கிறான்.
மனைவிக்கு விறகு அடுப்பில் சமைக்கத்தெரியாது. அவனே விறகு கொத்தி அடுப்பில் சமைப்பான். சிறுவர் பாடசாலைக்கு மகனை அழைத்துச் செல்வான். கடைகளில் பொருட்கள் வாங்கிவருவான். எப்போதும் அவளுடனேயே இருந்தான்.

ஆனால் அவனுக்கோ பணிகள் காத்துக்கிடந்தன. மீண்டும் மீண்டும் படையினரின் கட்டுப்பாட்டு நிலப்பகுதிக்குள் சென்றுவரவேண்டிய பணி அவனுடையது. அப்படி போகும்போது தனக்கு எப்போதும் உயிரிழப்பு வரலாம் என்பதும் அவனுக்கு தெரியும். இன்னும் அவன் யார் என்பது மனைவிக்கு தெரியவே தெரியாது.
பாதுகாப்பான பகுதியில் இருப்பதால் தான் யாரென்ற உண்மையை சொல்லிவிடவேண்டும் என முடிவுசெய்கிறான்.

அன்றுமாலை வன்னிநிலத்தின் அழகினைச் சுற்றிக்காட்டுவதாக மனைவியையும் மகனையும் ஓர் உந்துருளியில் ஏற்றிச்செல்கிறான். சில இடங்களைப் பார்த்து மகிழ்ந்துவிட்டு, இரணைமடுக் குளக்கட்டில் வந்தமர்கிறார்கள். வாய்க்குவாய் அப்பா அப்பா எனத் துளைத்தெடுக்கும் மகனை அணைத்தபடியே….

தான் விடுதலைப்புலி உறுப்பினன் என்று சொல்கிறான். இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில், விடுதலைப்புலிகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான கதைகளையே கேட்டும் அறிந்தும் வளர்ந்திருந்த அவள், நெருப்பை மிதித்ததுபோல துடித்துப்போனாள்.
தன்னிருகைகளாலும் கண்களைப் பொத்திக்கொண்டு, அவனுடைய முகத்தையே பார்ப்பதற்கு அஞ்சிநடுங்கினாள்.

நீண்டபொழுதாக அவன் அவளைத் தேற்றி, தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றி விளக்கம் சொல்லி, விடுதலைப்புலிகள் பற்றி அவள் மனதிலிருந்த தவறான கருத்துகளை மெல்லமெல்ல அகற்றினான்.

உள்ளே இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் செல்லவேண்டிய தேவைகள் அவனை அண்மித்தன. ஒருவேளை தனக்கு ஏதும் நடந்தால், தன்னவள் யாருமற்றவளாகிவிடுவாளே என்கின்ற ஏக்கம் அவனுக்குள். எனவே அமைப்பின் கட்டமைப்புகளின் ஒன்றில், அவளது படிப்புக்கு ஏற்றதான வேலை ஒன்றை அவளுக்கு பெற்றுக்கொடுக்கின்றான். அந்தக் கட்டமைப்பின் பொறுப்பாளருக்கும் அவனுடைய பணிகுறித்த தெளிவு இருந்ததில் அது இலகுவாயிற்று.

சில மாதங்கள் அவனுடைய குடும்பவாழ்க்கை நகர்கிறது.
திடீரென ஒருநாள் அவன் உள்ளே போகவேண்டும். அவனுடன் இன்னும் சிலர். வழமைபோல மனைவியையும், மகனையும் முத்தமிட்டு அவன் போகிறான். அவன் முகம் சிரிக்கின்றது. கை அசைகின்றது.

மனதை இறுக்கிக்கொண்டு கடமைவீரனாக சூரியதேவன் சுட்டியதிசையில் புறப்பட்டுவிட்டான்.

உள்ளே… சிலநாட்களாக அவர்களின் பணிநடக்கிறது. திடிரென ஒருநாள் எதிர்பாராதவேளையில் சுற்றிவளைப்பு. அந்தக்கணத்தில் நெஞ்சில் தோன்றியது இயக்கத்தின் இரகசியத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதாகத்தானே இருந்திருக்கும்.
இராணுவம் சுடுகிறது. இராணுவத்தினருடன் கடும் மோதல். வீரச்சாவடைந்தவர்களில் ஒருவனாக அவனும்….
கடமையில் இருந்த அவனின் துணைவிக்கு, கூடப்பணிசெய்த ஒருவர் செய்தியை சொல்கிறார். அவள் அதிர்ச்சியில் உறைந்துபோகிறாள். அழுவதற்குகூட அவளிடம் வலுவில்லை……….
அவனோ….. அதே புன்சிரிப்புடன்… வரிப்புலி உடையில் வித்துடலாக வந்தான்.

சிவசக்தி.