மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி தொடர்பில் பிரித்தானிய காவல்துறையினர் விசாரணை!

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றி வரும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 4ம் திகதி லண்டனில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக பிரிகேடியர் பிரியங்க, சைக மூலம் காண்பித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பிரிகேடியர் பிரியந்தவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ், இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

பிரிகேடியர் பிரியங்கவிற்கு எதிரான முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜதந்திர பதவிகளை வகிக்கவோ அல்லது பிரித்தானியாவில் தங்கியிருக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் போல் சாலி, பிரிகேடியர் பிரியங்கவின் செயற்பாடு குறித்து பிரித்தானிய வெளிவிவகார செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.