மீண்டும் புத்துயிர் பெற்றது தரவை மாவீரர் துயிலும் இல்லம்?

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மக்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிகப் பெரிய துயிலுமில்லமாக தரவை மாவீரர் துயிலுமில்லம் இருந்து வந்தது.

இந்நிலையில், குறித்த துயிலுமில்லத்தை யுத்தகாலத்தில் இருந்ததைப் போல் மாற்றியமைப்பதற்காக இச்சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த மைதானத்திலமைக்கப்பட்ட நடுகற்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் உடைக்கப்பட்டு அருகிலுள்ள குளத்துக்குள் வீசப்பட்டது.

அத்துடன் இத்துயிலுமில்லத்திற்கருகில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரியதொரு இராணுவமுகாமை அமைத்து நிலைகொண்டிருந்தனர். தற்போதும் அந்த முகாமில் நூற்றிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர்நிலைகொண்டுள்ளனர்.

துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இராணுவத்தினர் மக்களை விசாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த சிரமதானப் பணியினை தரவை பிரதேச அபிவிருத்திச் சங்கமும், ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்து முன்னெடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.