மீனவர்கள் கைது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தயார்

இலங்கை, பாகிஸ்தான் கடற்படைகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக டெல்லி மேல்-சபையில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா-இலங்கை இடையிலான கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

இதுபோல், குஜராத் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் அந்த மாநில மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை பிடித்து சென்று விடுகிறது. படகுகளையும் கைப்பற்றுகிறது. இந்த நிலையில், டெல்லி மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் அகமது பட்டேல் இந்த பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசுகையில், ‘இந்திய மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களது படகுகளை இலங்கை, பாகிஸ்தான் கடற்படைகள் பறித்துச் சென்று விடுகின்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் பறிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள், அந்த நாடுகளின் சிறைச்சாலைகளில் உள்ளனர். ஆகவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, மீனவர்களையும், படகுகளையும் கூடிய விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடித் தொழிலுக்கு படகுகள் அவசியம். ஆகவே, படகுகள் வாங்க கடனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

அதற்கு பதில் அளித்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- ஏற்கனவே மற்ற உறுப்பினர்களும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பியுள்ளனர். நான் அறிக்கை தாக்கல் செய்துள்ளேன். ‘நான் விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன், அதற்கான நேரத்தை முடிவு செய்யுங்கள்’ என்று அப்போது நான் கூறினேன். இப்போதும் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய தயாராக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

(www.eelamalar.com)