முகந்தெரியா மனிதர்கள்… தேசத்தின் முகவரிகள்…!

ஒரு தேசத்தின் வரலாறோ ஒரு இனத்தினது விடுதலை வரலாறோ முழுமனிதர்களையும் பதிவு செய்துவிடுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி முழு மனிதர்களின் செயற்பாடுகளையும் தியாகங்களையும் பதிவு செய்தல் சாத்தியமும் இல்லை.

ஆனால் இன்று முழுவளர்ச்சியடைந்து வான்தொட்டு அதனையும் தாண்டி அண்டம் கடந்து செல்லும் தேசங்களின் வரலாறுத் தொடக்கம் சின்னஞ்சிறு தேசங்களின் வரலாறு வரைக்கும் எல்லா தேசங்களின் வரலாறுகளிலும் முகந்தெரியாத எண்ணற்ற மனிதர்களின் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்தே காணப்படுகின்றது. அந்த அந்த தேசங்களினதும் இனங்களினதும் விடுதலைக்கு இத்தகைய முகந்தெரியாத மனிதர்களின் உதவிகளும் தன்னலம் கருதாத ஈடுபாடுகளுமே முக்கியமானதாக இருந்திருக்கின்றது.

எங்களுடைய தமிழீழதேசத்தின் விடுதலைப் போராட்டத்திலும் அப்படியே…

சரித்திரத்தின் முக்கியமான ஒரு பணியை செய்கின்றோம் என்பது தெரியாமலேயே மிக இயல்பாக தமது கடமையை செய்துநிற்கும் இத்தகைய பொதுமக்கள்தான் எமது போராட்டத்தின் முக்கிய உந்துசக்தியாக இருந்தார்கள். இருக்கிறார்கள்… இனியும் கூட.

ஒரு அதிகாலை பொழுதில்… இருள்கலைந்தும் கலையாத நேரத்தில் பாதுகாப்பு இடம்தேடி ஒரு கிராமமொன்றின் ஊடான நகர்வில் அந்த கருக்கலிலும் ஒரு சைக்கிளின் மீது தண்ணீர்பம்பு குழாயையோ, ஒரு வாழைக் குலையையோ கட்டிக்கொண்டு சைக்கிளை உருட்டியபடியே வந்து தாழ்ந்த குரலில் ‘கவனம் தம்பியவையள்… அந்த வடலிக்கு பின்னால் நிறைய ஆமி நிற்குது இருட்டிலே’ என்று ஏதோ ஒரு பாட்டு பாடுவதுபோல பாவனையுடன் சொல்லிச் சென்ற அந்த ஈழத்தமிழன் முகம் இன்னும் தெரியாதுதான்… ஆனால் அவன்தான் எங்கள் தேசத்தின் ஆன்மா… எம் தாயக வேர்… எல்லாமே…

வேவுப்புலி வீரன் எழுதிய நாட்குறிப்பொன்றில் இருந்ததுபோல எங்கோ தமிழீழ தேசத்தின் எல்லை கிராமம் கடந்து கானகத்துள்… தமிழ்மூதாட்டி… தனித்திருக்கும் தாய் ஒருத்தி… தாய் தான் சமைக்கும் சோற்றையும் சம்பலையும் தினமும் இந்த வேவுப்புலிளுக்கு கொடுப்பதற்காக காத்திருந்தாளே… அவளுக்கு யார் கற்றுக்கொடுத்தது தாயகப்பற்றை… யார் சொல்லி கொடுத்தது விடுதலை உணர்வை…

முழுதான சுற்றிவளைப்பு… இறுக்கமான வளைப்பு… மூன்று பக்கமும் உள்ள தெருவெங்கும் இராணுவம்… என்ன செய்வது… சயனைட்டை சாப்பிடுவதா… அல்லது வலிந்த சண்டை ஒன்றை செய்து சாவதா… என்று என்ன செய்வது என்று திணறிக்கொண்டிருந்தபோது… கடலுக்கு போவதுபோல வலையை எடுத்து வந்து கட்டுமரத்தில் வைத்துவிட்டு போராளிகள் இருவரையும் கூப்பிட்டு கட்டுமரத்தில் ஏற்றி வலித்துக் கொண்டு கொஞ்சம் உயரத்துக்கு போய் அங்கு கட்டப்பட்டிருந்த வள்ளத்துக்குள் ஏறிப்படுத்து கொள்ளுங்கள் என்று மறைத்துவிட்டு மீண்டும் கரை திரும்பிய அந்த மனிதன் யாரென்றே இன்னும் யாருக்கும் தெரியாது…

அவன் பெயர் என்னவென்று தெரியாது… தமிழீழம் என்ற பெயருக்குள்… தமிழீழம் என்ற கனவுக்குள் இவர்கள் அனைவரினதும் உழைப்பு, உயிரை மதியாது உதவிய பாங்கு எல்லாமே இருக்கிறது. தன்னுடைய இரவுச்சாப்பாட்டில் சிறிதளவை எப்போதும் எடுத்து தட்டில் வைத்துவிட்டு புலிமாமா வருவான் பசியுடன் என்று கனவுகளுடன் காத்திருக்கும் என் தேசத்து சின்னஞ்சிறு பூக்களுக்கு எவன் சொல்லித் தந்தது தாயகத்தை நேசி என்ற பாடத்தை…

ஊர் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்த நேரமில்லாத நேரத்தில் ஆலயமணியை அடித்து எச்சரிக்கை சமிக்ஜை காட்டிய அர்ச்சகர், துரத்திவந்த இராணுவத்துக்கு தப்பி ஓடிவந்த போராளியை வீட்டின் மச்சுக்குள் ஒளித்துவைத்துவிட்டு அம்மாள் வருத்தம் போல படுத்து இருந்த அந்தத் தாய்….

அடித்தால் மறு கன்னத்தைகூட காட்டு என்று அறிவுறுத்திய மதத்தின் அரவணைப்புள் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராளியை காத்து அனுப்பிய போதகர்… பனிவிழும் பொழுதுகளில் குளிர் எலும்புகளினுள்ளும் ஊடுருவும் காலநிலைகளுக்குள்ளாகவும் வீடுவீடாக தேடி ஏறி விடுதலைக்கு வலுச்சேர்த்த பணியாளர்கள்.

தொலைத்தொடர்பு கருவிகள் இயக்கத்தின் கைகளுக்கு வருவதற்கு முன்னமேயே தகவல்களை முக்கிய தகவல்களைச் சேர்க்க வேண்டிய இடங்களுக்கு காவிச்சென்று சேர்ப்பித்து பெரும் வளர்ச்சி ஒன்றுக்கு மூலமாக நின்ற எத்தனையோ சாதாரண மனிதர்கள்…

சிங்களமுகாம் வீழ்த்தப்பட்ட பின்னர் அதிலிருந்து தப்பி ஓடி கானகத்துள் நின்றிருந்த ஆயுதந்தாங்கிய இராணுவத்தினனை வெறும் துணிவுடன் மடக்கிப்பிடித்த அந்த மனிதர்கள்… தன் பிள்ளைக்கு அரை வயிறு கொடுத்துவிட்டு மீதியை எடுத்துப்போய் போராடும் போராளிப் பிள்ளைகளுக்கு கொடுத்து திரும்பும் அந்த ஏழைத்தாய்…

மிருகத்தனமாக வீடுகளுள் இரவில் புகுந்து வல்லாதிக்கபடை சிறுவர்களை குழந்தைகளை பயமுறுத்தி தாக்கி மாமா இங்கே வந்ததா என்று கேட்டபோதும் எவ்வளவு வலித்தாலும் மௌனம் காத்த என் தேசத்து சின்னஞ் சிறுசுகள்…

அவசரத்தேவைகளுக்காக அவ்வப்போது கடல்கடக்க திறமைவாய்ந்த கடலோடிகள் தேவைப்பட்ட போது இதோ நான் வருகிறேன் என்று சொல்லி ஓட்டியாக வந்த அத்தனை மனிதர்களும்…

வீட்டுத் துன்பத்தைச் சொன்னால் போராடப்போன பிள்ளை கவலைப்படுவான், அவன் கவலைப்பட்டால் போராடமாட்டான் என்பதற்காகவே எல்லாவற்றையும் மறைத்த தேசத்தின் தாய்மார்…

சாதாரண வாழ்வு என்ற வட்டத்துள் வாழ்ந்து கொண்டே உன்னதமான செயல்களில், மகோன்னதமான தியாகங்களில், அந்த நேரத்தைய கடமை ஆற்றுதலில் ஈடுபட்ட அனைவரும் எமது தேசத்தின் வேர்களே… நாட்டுப்பற்று என்ற உயரித உணர்வு இவர்களுள் கொழுந்துவிட்டு எரிவதால்தான் இவர்களால் இப்படிச் செயற்பட முடிகிறது…

தமிழீழத் தேசவிடுதலைப் போராட்டத்தின் அத்தனை வளர்ச்சி கட்டங்களிலும் இத்தகைய பல்லாயிரம் மக்களின் எத்தனையோ எழுதமுடியா செயற்பாடுகள் நிறைந்தே காணப்படுகின்றது… அவர்கள் அனைவரினதும் முகங்களோ, பெயர்களோ நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாடுகளின் வளர்ச்சி நமக்கு தெரிந்திருந்தது…

நம் மனக் கண்களில் அவர்கள் அனைவரையும் ஒரு கணம் நினைத்து உறுதி எடுப்பதே அவர்களுக்கான உண்மை நன்றியறிதல் ஆகும். ஒவ்வொரு உயிரினமும் தான் வாழ்வதற்கான போராட்டத்தை நடாத்தியபடியே இருக்கும் என்பதுதான் பரிணாம விதி. ஆனால் இன்னொரு சக மனிதன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக, தனது இனம் வாழ வேண்டும் என்பதற்காக சாவையும் சந்திக்க ஒரு மக்கள் கூட்டத்தின் மிகமிகச் சாதாரணர்கள்கூட எழுந்தார்கள் என்பதே எமது தாயகவிடுதலை வரலாறு.

இன்றும் எதிரி எல்லாவற்றையும் கைப்பற்றியதாக இறுமாந்து இருக்கிறான். இவனுக்கு தெரியாதது ஒன்றுதான். அவனால் ஒருபோதும் கைப்பற்றவோ எடுத்து எறியவோ முடியாதது இத்தகைய சாதாரண தமிழீழ மனிதர்களின் ஆழத்தில் எந்நேரமும் ஒளிவீசியபடியே இருக்கும் சுதந்திர உணர்வை. அது எப்போதும் காத்திருக்கும்… உறை நிலைக்குள்ளும் இருக்கும்.

திடீரென எரிபற்று நிலைக்கும் போகும்… தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு போராளி எழும்போது இத்தகைய மனிதர்கள் மீண்டும் எமது தேசத்தின் காப்புகளாக தெருமுனைகளில் எல்லைகளில் எதிரியின் படுக்கைக்கு அடியில் என்று எங்கும் உலாவுவார்கள்… எதிரியால், அவனது எந்தவொரு ஆயுதத்தாலும் ஒருபோதும் இந்த மனிதர்களின் ஆன்மத்தை அழிக்க முடியாது…

அதனை அவன் உணரும் காலம் விரைவில் வரும்…
ச.ச.முத்து.