முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சரத்குமார் ஆதரவு

முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். 2 பேரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலா மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியை சேர்ந்தவர்கள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்று அவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஓ பன்னீர் செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.கிருஷ்ணகிரி தொகுதி எம்பி. அசோக்குமார், நாமக்கல் தொகுதி எம்.பி. பி.ஆர். சுந்தரம் ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.  மிகப்பெரும் திருப்பமாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான பொன்னையன் முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவினை வழங்கியுள்ளார். மேலும் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு திருப்பூர் எம்.பி. சத்தியபாமா ஆதரவு அளித்துள்ளார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.