முன்னாள் போராளிக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மொனராகலை நீதிமன்றம்!
தனமல்விலவில் மூன்று சிறிலங்கா காவல்துறையினரை சுட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்கு, மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனமல்வில, ஊவா குடாஓயா, அலிமங்கடவில், 2008 ஜனவரி 21ஆம் நாள், உதவி ஆய்வாளர் ஒருவரையும், இரண்டு காவலர்களையும் சுட்டுக் கொன்று, அவர்களின் ஆயுதங்கள், வெடிபொருட்களை அபகரித்துச் சென்றார் என்று, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக மொனராகல மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு, வெல்லாவெளியைச் சேர்ந்த 28 வயதுடைய, சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்ற முன்னாள் போராளிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய மொனாராகல மேல் நீதிமன்றம், 16.06.17 இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டது.
குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் போராளிக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக மொனராகல மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.